மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

சுமார் 30 லட்சம் வாக்குகள்: சீமான் உருவாக்கிய சிம்மாசனம்!

சுமார் 30 லட்சம் வாக்குகள்:  சீமான் உருவாக்கிய சிம்மாசனம்!

நாம் தமிழர் கட்சி இந்த சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

திமுக, அதிமுக ஆகிய பெரிய கட்சிகள் 234 தொகுதிகளிலும் போட்டியிடவில்லை. அக்கட்சிகளின் கூட்டணியில் இருந்த கட்சிகளும் சொற்ப எண்ணிக்கையிலானத் தொகுதிகளில்தான் போட்டியிட்டன. ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டுமே 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு எந்த வெற்றியையும் பெறாவிட்டாலும், 6.65% வாக்குகளைப் பெற்றுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் 48ஆயிரத்து 957 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

சீமான் ஐம்பதாயிரம் வாக்குகளைத் தொட முயற்சித்த நிலையில், கட்சியின் மற்ற வேட்பாளர்கள் எல்லாம் அவருக்கு கீழேதான் வாக்குகளை வாங்கியிருக்கிறார்கள்.

முப்பதாயிரத்துக்கு மேல் இரு வேட்பாளர்கள் வாக்குகளை வாங்கியுள்ளனர். 18வேட்பாளர்கள் இருபதாயிரத்துக்கும் முப்பதாயிரத்துக்கும் இடையில் வாக்குகளைப் பெற்றுள்ளார்கள்.20ஆயிரத்து 348 வாக்குகளில் இருந்து 29,871 வாக்குகள் வரை இந்த பட்டியலில் வருகிறது.

15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வாக்குகள் வரை நாம் தமிழர் கட்சியின் 33 வேட்பாளர்கள் பெற்றிருக்கிறார்கள்.

104 தொகுதிகளில் பத்தாயிரம் முதல் 15 ஆயிரத்துக்குள் நாம் தமிழர் வேட்பாளர்கள் வாக்குகளைப் பெற்றுள்ளார்கள்.

இந்தப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், 29 லட்சத்து 67ஆயிரத்து 853 வாக்குகளை 234 தொகுதிகளிலும் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி, திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

திமுக,. அதிமுக ஆகிய கட்சிகளின் வாக்கு எண்ணிக்கையை ஒப்பிடும்போது இது வெகுதூரத்தில் இருந்தாலும்... அக்கட்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே வேறு யாரும் இல்லையே என்பதைப் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்கள் நாம் தமிழர் நிர்வாகிகள்.

மூன்றாவது சக்தி யார்?என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் கடந்த மே 1 ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.

அச்செய்தியில், “மூன்றாவது இடம் என்றால், இந்தத் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமல்ல...அடுத்து பத்து, பதினைந்து வருடங்களுக்கு தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுக்கப் போகும் கட்சி எது என்ற கேள்வியும் எழுகிறது.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை திமுக, அதிமுகவை அடுத்து மூன்றாவது என்ற அந்தஸ்தைப் பெற நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே போட்டி நடக்கிறது.

கூட்டணி எதுவும் இல்லாமல் தனித்தே இம்முறை போட்டியிடும் நாம் தமிழர் கட்சி எக்சிட் போல் தொடர்பான விவாதங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. நாம் தமிழர் கட்சி இந்த சட்டமன்றத் தேர்தலில் 8% வாக்குகளைப் பெற்றாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதற்கு அடுத்த இடத்திலேயே மக்கள் நீதிமய்யம், அமமுக ஆகியவை இடம்பிடிக்கும் என்றும் கணிக்கிறார்கள்”என்று சுட்டிக் காட்டியிருந்தோம்.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே நாம் சுட்டிக் காட்டியதைப் போல சீமான் 8% வாக்குகளைப் பெறாமல் 6.5% வாக்குகளைப் பெற்றாலும் மூன்றாவது சக்தியாக உருவாகியிருக்கிறார். இதைத் தக்க வைத்துக் கொள்வது சீமானின் தொடர் பயணத்திலும் அவரது தம்பிகளின் கைகளிலும் இருக்கிறது.

-ராகவேந்திரா ஆரா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

திங்கள் 3 மே 2021