மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

10 % வாக்கு வித்தியாசம்.. மேற்குவங்கத்தில் பா.ஜ.க. பக்கம் வீசாத காற்று!

10 % வாக்கு வித்தியாசம்.. மேற்குவங்கத்தில் பா.ஜ.க. பக்கம் வீசாத காற்று!

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த தேர்தலைவிட கூடுதல் இடங்களைப் பெற்று, மூன்றாம் முறையாக ஆட்சியை அமைக்கிறார், மம்தா பானர்ஜி.

மொத்தமுள்ள 294 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளின் வேட்பாளர்கள் இறந்துவிட்டதால், அங்கு மறுவாக்குப்பதிவு நடைபெறும். மாநிலத்தின் முழுமையான தேர்தல் முடிவு முறைப்படி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், இன்று காலை 7.25 மணியளவில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வத் தகவலின்படி, அனைத்திந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி 209 இடங்களில் வெற்றிபெற்றும் 4 தொகுதிகளில் முன்னிலையிலும் உள்ளது.

அடுத்ததாக, பா.ஜ.க. 76 தொகுதிகளை வென்றும் ஒரு இடத்தில் முன்னிலையிலும் இருக்கிறது. ஓர் இடத்தில் சுயேச்சை வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். ராஷ்ட்ரிய மதச்சார்பற்ற மஞ்லிஸ் கட்சி ஓர் இடத்தை வென்றுள்ளது.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 36 தொகுதிகளில் 18 இடங்களைக் கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தது. அதாவது, 121 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அக்கட்சி முன்னிலை பெற்றிருந்தது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கான இடங்கள் 77 தான். 2019 தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வாக்கு அளவு 40.3 %. இந்த முறை அதில் 2 சதவீதத்துக்குமேல் குறைந்திருக்கிறது.

திரிணமூல் கட்சியோ கடந்த முறை பெற்றது, 43.3 % வாக்குகள். இந்த முறை 47.94 % வாக்குகளைப் பெற்றுள்ளது.

இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வாக்குசதவீத வித்தியாசம் இந்த முறை கிட்டத்தட்ட 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த மக்களவைத் தேர்தலில் இது 3 சதவீதமாக இருந்தது, இரண்டு ஆண்டுகளில் மூன்று மடங்கைவிடக் கூடுதலாகியுள்ளது.

மாநில அளவில் திரிணமூல் கட்சிக்கு பெருவெற்றி கிடைத்துள்ளபோதும், அக்கட்சியின் தலைவர் மம்தா தோல்வியடைந்திருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.

முதல் நான்கு சுற்றுகள்வரை, 8 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று பா.ஜ.க.வின் சுவேந்து அதிகாரி மம்தாவைவிட முன்னிலையில் இருந்தார். அதற்கடுத்து மம்தாவுக்கும் அவருக்கும் இடையிலான வாக்குவித்தியாசம் குறையத் தொடங்கியது.

படிப்படியாகக் குறைந்துவந்த வாக்கு அளவு வித்தியாசமானது, 16ஆவது சுற்றில் பரபரப்பை உண்டாக்கியது. வெறும் 6 வாக்குகள் மட்டும் குறைவாகப் பெற்று, சுவேந்துவை நெருங்கினார், மம்தா. தகவலறிந்த திரிணமூல் கட்சித் தொண்டர்கள் பச்சை வண்ணப் பொடியை அப்பிக்கொண்டு ஆரவாரக் கொண்டாட்டத்தில் இறங்கினார்கள்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மம்தா முன்னிலை என நிலைமை மாறி, 1,201 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற்றதாக ஏ.என்.ஐ. செய்திநிறுவனம் முதல் செய்தியை வெளியிட்டது. அனைத்து ஊடகங்களும் உடனுக்குடன் நேரலையாக வெளியிட்டன.

ஆனால், தேர்தல் ஆணையமோ இன்னும் வாக்கு எண்ணிக்கை முடியவில்லை என்றது.

அதன் பிறகு, 1, 736 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி முன்னிலை வகிப்பதாகத் தெரிவித்தது.

வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்துவிட்டதாகக் கூறி, மறு எண்ணிக்கை நடத்தவேண்டும் என திரிணமூல் கட்சி கூறியது. தேர்தல் ஆணையமோ அதை வன்மையாக மறுத்ததுடன் தங்கள்பக்கம் தவறு இல்லை என திட்டவட்டமாகக் கூறியது.

கடைசியாக, சுவேந்து அதிகாரி 1, 956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்மிதா பாண்டேவும் இதை உறுதிப்படுத்தினார்.

இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போகப்போவதாக மம்தா கூறியுள்ளார். கொரோனா தாக்கி திரிணமூல் கட்சியின் வேட்பாளர் கஜல் சின்கா இறந்துபோனதால், அவர் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்ற கர்தாகா தொகுதியில் மறுதேர்தல் நடைபெறவுள்ளது. வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள கொல்கத்தா மாநகராட்சிக்கு உள்பட்ட இந்தத் தொகுதியில், மம்தா போட்டியிடுவார்.

- இளமுருகு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

திங்கள் 3 மே 2021