மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பு விழா எங்கே, எப்போது?

மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பு விழா எங்கே,  எப்போது?

வாக்கு எண்ணிக்கையில் திமுக பெரும்பான்மைக் கோட்டைத் தாண்டி முன்னணி கொண்டிருந்த நிலையில் தமிழக டிஜிபி திரிபாதி, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குச் சென்றனர்.

புதிய முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர்கள், புதிய அரசின் பதவியேற்பு தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதால் அது தொடர்பாக ஸ்டாலினிடம் கேட்டுள்ளனர்.

புதிய அரசின் பதவியேற்பு விழாவுக்கான மற்ற அடிப்படை ஏற்பாடுகளை செய்ய வேண்டியது பொதுத்துறை என்பதால் பொதுத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் ஸ்டாலினைச் சந்தித்துள்ளனர். வாழ்த்து தெரிவித்ததோடு மரபுப்படி அவர்கள் அடுத்து செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் ஸ்டாலினிடம் கேட்டுள்ளனர்.

அரசின் ஆட்சித்துறை, காவல்துறை என இரு துறை அதிகாரிகளிடமே ஸ்டாலின், ‘இப்போதுதான் வெற்றிச் சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு நாங்க இதைப் பத்தி சொல்றோம்” என்று கூறியிருக்கிறார்.

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று அதில் ஸ்டாலினை சட்டமன்ற திமுக தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் அந்தப் பட்டியலோடு ஆளுநரைச் சந்திக்க வேண்டும். அதன் பிறகுதான் பதவியேற்பு விழா நடத்த வேண்டும்.

இந்த ஆலோசனைக்கிடையே தனது வெற்றிச் சான்றிதழை கொளத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் இருந்து நேற்று இரவு பெற்றார் மு.க.ஸ்டாலின். வாக்கு எண்ணிக்கை மையமான லயோலா கல்லூரிக்குச் சென்று தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெற்ற, தனது வெற்றிச் சான்றிதழோடு டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் சகிதம் இரவே கலைஞர் நினைவிடத்துக்குச் சென்றார். கலைஞரின் நினைவிடத்தில் தனது வெற்றிச் சான்றிதழை வைத்து உருக்கமாக மரியாதை செலுத்திய ஸ்டாலின், அதன்பின் முதன்முறையாக வெற்றிக்குப்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பதவியேற்பு விழா பற்றியும் குறிப்பிட்டார் மு.க.ஸ்டாலின்.

“சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் முழுமையாக சான்றிதழை பெறவில்லை. இன்று இரவு, நாளை காலைதான் அது முடியும். வெற்றிச் சான்றிதழ்களைப் பெற்ற பிறகு நாளை மறுநாள் மே 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டி, முறையாக தலைவரைத் தேர்ந்தெடுத்து, அதன்பின் அரசு அதிகாரிகளை கலந்து பேசி பதவிப் பிரமாண நிகழ்ச்சிப் பற்றி முடிவெடுக்கப்படும்.

இப்போது கொரோனா காலம். அதை நினைவில் வைத்துக்கொண்டு பதவிப் பிரமாண நிகழ்ச்சியை ஆடம்பரமாக நடத்தாமல் எளிமையாக நடத்துவது என்று குறிப்பாக ஆளுநர் மாளிகையில் நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறோம். அதை முடிவு செய்து உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று கூறினார் மு.க.ஸ்டாலின்.

அதன்படி திமுக, திமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிச் சான்றிதழ்களோடு இன்று சென்னை வந்தடைகிறார்கள். நாளை (மே 4) திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஸ்டாலின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதன்பின் பதவிப் பிரமாண நிகழ்ச்சி பற்றி முடிவெடுக்கப்படும்.

“4, 5 அஷ்டமி, நவமி. மே 6ஆம் தேதியையும் தள்ளி மே 7ஆம் தேதி எளிமையான முறையில் பதவியேற்பு நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் முதன்முறையாக முதல்வராகப் பதவியேற்கிற நிகழ்ச்சியை மிக பிரமாண்டமான விழாவாக நடத்த வேண்டுமென்பதுதான் எல்லாருடைய ஆசையும். ஆனால் கொரோனா தொற்று முடிந்த பிறகு ஸ்டாலின் இன்னும் எத்தனையோ மக்கள் திரள்களில் கலந்துகொள்ளப் போகிறார். அதனால் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை” என்கிறார்கள் திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள்.

-வேந்தன்

.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

திங்கள் 3 மே 2021