மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

வெற்றியைப் பதிவு செய்த ஈபிஎஸ், ஓபிஎஸ்

வெற்றியைப் பதிவு செய்த ஈபிஎஸ், ஓபிஎஸ்

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி 92,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளார்.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 2) நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்தே இந்த முறை வெற்றி யாருக்கு என்பது தெரிந்துவிட்டது. தொடக்கத்திலிருந்தே ஏறுமுகத்தில் இருந்த திமுக, இறுதியில் பெரும்பான்மையுடன் வெற்றியை உறுதி செய்தது.

இந்த நிலையில், தன்னுடைய சொந்த தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். இறுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமாரை விட 92,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியை நிலைநாட்டினார் ஈபிஎஸ். கடைசி சுற்று நிலவரப்படி 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். எடப்பாடி பழனிசாமி 1,63,154 வாக்குகளும், சம்பத்குமார் 69,352 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஏழாவது முறையாக எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டு ஐந்தாவது முறையாக வெற்றியை நிலைநிறுத்தியுள்ளார். 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக எடப்பாடி தொகுதியில் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் பழனிசாமி போட்டியிட்டார். இதுவரை ஆறு முறை எடப்பாடி தொகுதியில் பழனிசாமி போட்டியிட்டு நான்கு முறை வெற்றியும், இரண்டு முறை தோல்வியும் பெற்றிருந்தார். 1989, 1991, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றியும், 2006, 1996 ஆகிய தேர்தலில் தோல்வியும் அடைந்திருந்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி 42,022 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ்

மூன்றாவது முறையாக போடி சட்டமன்றத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் 11,055 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அமமுக சார்பில் முத்துச்சாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் கணேஷ் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரேம் சந்தர் ஆகியோர் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் சுற்றில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதையடுத்து, ஓபிஎஸ்ஸைப் பின்னுக்குத் தள்ளி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்து வந்தார்.

பின்பு, மீண்டும் ஓபிஎஸ் முன்னிலை வகித்தார். இரவு 10 மணி நிலவரப்படி 19 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. அதில் ஓ.பன்னீர்செல்வம் 67,685 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 59,761 வாக்குகள் பெற்றார். அதனால், ஓ.பன்னீர்செல்வம் 7,924 வாக்குகள் முன்னிலை வகித்தார்.

இந்த நிலையில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை விட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 11,055 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வினிதா

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

திங்கள் 3 மே 2021