மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

கமல்ஹாசனை இறுதிச்சுற்றில் வீழ்த்திய பாஜக வானதி சீனிவாசன்

கமல்ஹாசனை இறுதிச்சுற்றில் வீழ்த்திய பாஜக வானதி சீனிவாசன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எல்லா கட்சியினராலும் கவனிக்கப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட தொகுதி, கோவை தெற்கு தொகுதி. நடிகர் கமல்ஹாசன் சென்னை அல்லது அவரது பூர்வீக பூமியான சிவகங்கை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்த்து வந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தபோது தமிழக அரசியல் களம் ஆச்சரியத்துடன் பார்த்தது.

பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் இங்கு போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கோவை தெற்கு தொகுதி கமல் வருகையால் கூடுதல் அந்தஸ்து பெற்றது.

நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே குறைவான வாக்குகள் என்றாலும் கமல் முன்ணனியில் இருந்தார். ஆனால், கடைசி இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது கமல்ஹாசன், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார்.

மொத்தம் நடந்த 26 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், வானதி சீனிவாசன் 1,728 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அந்தத் தொகுதியில் மொத்தம் பதிவான 1,54,765 வாக்குகள், 26 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதன் முடிவில் 53,209 வாக்குகளுடன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் முதலிடம் பிடித்தார். 51,481 வாக்குகளைப் பெற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இரண்டாம் இடத்தில் இருந்தார். 42,383 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மூன்றாம் இடத்தில் இருந்தார். முன்னதாக, இந்தத் தொகுதியில் காலையில் இருந்து பிற்பகல் வரை வாக்குகள் எண்ணப்பட்டபோது, வானதி, காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ஆகியோரைவிட 1,000 வாக்குகளுக்கும் மேல் என்ற அளவில் கமல்ஹாசன் முன்னிலை வகித்தார். இதனால் புன்னகையுடனேயே அவர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் காணப்பட்டார். ஆனால், மாலை 5 மணிக்கு பிறகு 22ஆவது சுற்று எண்ணத் தொடங்கியபோது, கமலையும், மயூரா ஜெயக்குமாரையும் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு வானதி சீனிவாசன் முன்னேறினார். 25, 26 என கடைசி சுற்று நெருங்கியபோது இரண்டாம் இடத்தில் இருந்த கமலைவிட அதிக வாக்குகளை வானதி பெற்றதைத் தொடர்ந்து அவரது வெற்றி உறுதியானது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைமுறையை முதன்முறையாக பார்க்கும் கமல், ஒரு வேட்பாளராக அந்த அரங்கின் முகவர், வேட்பாளர்கள் அமர ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்தவாறு வாக்குகள் அறிவிக்கப்படும் தகவலைக் குறிப்பெடுத்துக் கொண்டே இருந்தார். கடைசி இரு சுற்றுகளின்போது எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாதவராக காணப்பட்ட கமல், தமது கடைசி சுற்று தகவலையும் குறிப்பெடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை 2018ஆம் ஆண்டில் தொடங்கினார் கமல்ஹாசன்.

2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் களம் கண்டது. அதில் எந்த தொகுதியிலும் வெற்ற பெற முடியாதபோதும், 3.72 வாக்குகள் சதவிகிதத்தை அந்தக் கட்சி பெற்றது. மக்களவை தேர்தலில் வேட்பாளர்களைக் களமிறக்கிய கமல்ஹாசன் அப்போது அவர் போட்டியிடவில்லை. ஒரு வேட்பாளர்கூட வெற்றி பெறாதபோதும் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, 142 இடங்களில் போட்டியிட்டது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும் கமல்ஹாசன் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்தார். ஆனால், தேர்தல் முடிவுகள், அவருக்கோ அவர் சார்ந்த கட்சிக்கோ வெற்றி வாய்ப்பை தரவில்லை. முன்னதாக, வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன், முடிவுகள் எப்படி வந்தாலும் தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம் என்று கூறியிருந்தார்.

-ராமானுஜம்

எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா: அதிமுகவில் ரேஸ்!

5 நிமிட வாசிப்பு

எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா: அதிமுகவில் ரேஸ்!

சட்டமன்றத்தின் முதல் நாள் - சுவாரஸ்யங்களும் சர்ச்சைகளும்!

7 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தின் முதல் நாள் - சுவாரஸ்யங்களும் சர்ச்சைகளும்!

ஜீயருக்கு ஆளெடுப்பதா? வலுத்த எதிர்ப்பு- வாபஸ் பெற்ற அரசு!

7 நிமிட வாசிப்பு

ஜீயருக்கு ஆளெடுப்பதா? வலுத்த எதிர்ப்பு- வாபஸ் பெற்ற அரசு!

திங்கள் 3 மே 2021