மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

பகுதி 6: தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

பகுதி 6: தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

அமெரிக்க மைய (Unipolar) உலக ஒழுங்கா? சீனாவை உள்ளடக்கிய உலக ஒழுங்கா (Multipolar)?

கடந்த ஐந்து பகுதிகள் தமிழகம் கடந்து வந்த பாதை, புதிய பொருளாதார முறை, எதிர்கொள்ளும் முரண், சீன - அமெரிக்கப் போட்டி, பார்ப்பனிய - ஏகாதிபத்திய இணைவு, அதன் அரசியல் பொருளாதாரத் தேவை மற்றும் உலக அரசியல் பின்னணி, இந்திய அணியான அமெரிக்காவின் பொருளாதார நலிவைப் பற்றி பேசியது. இந்தப் பகுதி அமெரிக்க மைய உலக ஒழுங்கை உடைக்க சீனாவின் மலைக்க வைக்கும் மாற்றுத்திட்டம், அந்த உடைப்பைத் தவிர்க்க முனையும் அமெரிக்காவின் நகர்வுகள் பற்றிப் பேசுகிறது.

கொரோனா போரில் வென்ற சீனா இதுவரையிலும் நடைமுறையில் இருந்த ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து நுகர்வு சார்ந்த பொருளாதாரத்துக்கு மாறுவதற்கான கொள்கை முடிவு எடுத்து இரட்டை சுழற்சி (Dual Circulation) என்ற புதிய பொருளாதார வடிவத்தை அறிவித்து தனது சந்தையை மேலும் திறந்துவிட்டிருக்கிறது. மூடிக்கிடக்கும் நாடுகளுக்குத் தேவையான பொருட்களை ஏற்றுமதி செய்து தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருகிறது. 2020ஆம் வருடத்தில் வளர்ச்சியைச் சந்தித்த ஒரே நாடான சீனாவில் முதலிடும் பணத்துக்கு லாபம் ஈட்டக்கூடிய சந்தையாக சீனா இருப்பதால் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி இந்த வருடத்தில் அதிகமான மூலதனத்தை ஈர்த்த நாடாக சீனா மாறி இருக்கிறது.

அமெரிக்க மைய உலக ஒழுங்கை உடைக்க சீனாவின் மாற்றுத்திட்டம்

எல்லா நாடுகளும் தமது நிதிக்கொள்கையைத் தளர்த்தி வரும் நிலையில் சீனா தனது ரெபோ விகிதத்தை உயர்த்தி முன்பு தளர்த்திய பணக்கொள்கையை இறுக்கி வருகிறது. இது கிட்டத்தட்ட இரண்டாம் உலகப்போரில் நேரடியாக ஈடுபடாமல் எல்லா நாடுகளுக்கும் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்து வலுவான நிலையில் இருந்த அமெரிக்காவின் நிலையுடன் ஒப்பிடத்தக்கது. இப்படி சீனாவுக்குள் நுழையும் மூலதனமும் சீனாவில் ஏற்கனவே பெருகி இருக்கும் மூலதனமும் 1973-க்குப் பிறகு அமெரிக்காவில் ஏற்படுத்தியதைப் போல சீனாவில் புதிய தொழில்நுட்ப உருவாக்கத்துக்கும் பொருள் உற்பத்திக்கும் வித்திடும் (இரட்டை மூலதன சுழற்சி). அது உயர் தொழில்நுட்பப் பொருட்களின் உற்பத்திக்கு வழிவகுக்கும். திறன்மிக்க தொழிலாளர்களின் தேவை அதிகரிப்பு காரணமாக அவர்களின் சம்பளம் உயரும். சீனா மத்தியதர வருமானம் கொண்ட நாடு என்ற நிலையிலிருந்து உயர் வருமானம் கொண்ட நாடாக மாறும்.

இப்படி சீனாவில் உற்பத்தி ஆகும் பொருட்கள் சீனாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் சந்தைப்படுத்தப்படும். ஆனால், தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள கடல்வழிக்குப் பதிலாக ஆசிய - ஐரோப்பிய நாடுகளை நிலவழியாகவும் தென் அமெரிக்க - ஆப்பிரிக்கா நாடுகளை நீர் வழியாகவும் சீனாவுடன் இணைக்கும் ஒரே மண்டலம் ஒரே பாதை (One Belt One Road) திட்டம் நிறைவேற்றப்பட்டு அதன் வழியாகச் செல்லும். இந்த உள்கட்டமைப்பு துறையில் செய்யப்படும் முதலீடு தற்போது கொரோனாவினால் நலிந்து கிடக்கும் உலகப் பொருளாதாரத்துக்கு ஊக்கமாக இருக்கும். மற்ற நாடுகளில் சீனா இதுபோன்ற உள்கட்டமைப்பில் முதலிடுவதற்கான முன் நிபந்தனை புதிய மின்னணுப் பொருளாதாரத்தைச் செயல்படுத்தி சீன நிறுவனங்களின் 5ஜி, வர்த்தகத்தளங்கள், செயற்கை நுண்ணறிவு, பணப்பரிமாற்று அமைப்புகளை அந்த நாடுகள் அனுமதிக்க வேண்டும்.

முக்கியமாக, சீனாவுடன் சீனாவின் நாணயத்தில்தான் வர்த்தகம் செய்ய வேண்டும். அதற்குத் தயாராக எல்லோரையும் முந்திக்கொண்டு தனது நாட்டில் மின்னணு நாணயத்தைப் புழக்கத்தில் விட்டு சோதனை செய்த சீனா தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தாய்லாந்து நாடுகளுக்கு இடையில் பரிவர்த்தனை செய்து சோதனை செய்து வருகிறது. இது நடைமுறைக்கு வரவிடாமல் தடுப்பதில்தான் அமெரிக்காவின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. அமெரிக்கா ஏற்படுத்தும் தடைகளை எல்லாம் உடைப்பதில்தான் சீனாவின் எதிர்கால கனவு நனவாக முடியும்.

உலக நாடுகளின் தேவையும் தெரிவும்

இதில் யார் வெற்றிபெறப் போகிறார்கள் என்பதை நிர்ணயிப்பதில் உலக நாடுகள் பெரும்பங்கு வகிக்கும். அவர்கள் எடுக்கப்போகும் முடிவை அந்தந்த நாடுகளின் சமூகப் பொருளாதார தேவைதான் முடிவு செய்யும். கொரோனாவால் முடங்கிக்கிடக்கும் உலகப் பொருளாதாரத்தை முடுக்கிவிடச் சாத்தியமான வழி, உள்கட்டமைப்புத்துறை முதலீடுகள். அப்படியான அறிவிப்பை அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துவிட்டது. அந்த முதலீட்டுக்குத் தேவையான பணத்தை தானே அச்சிட்டுக்கொள்ளும் அந்த சொகுசு, எல்லா நாடுகளுக்கும் இல்லை. ஆதலால் மற்ற நாடுகள் அவ்வாறான வாய்ப்பை எதிர்பார்க்கின்றன.

அவ்வாறு பொறுத்திருக்க வேண்டிய தேவையற்ற அமெரிக்கா, நொறுங்கிக்கிடக்கும் தனது உற்பத்தி துறையை மீள கட்டமைக்கவும் அதன் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் சில்லுகளின் (Chip) உற்பத்தியைத் தனது நாட்டில் மேற்கொள்ளவுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதோடு பாழடைந்து கிடக்கும் சாலைகள், ரயில் பாதைகள், பாலங்கள் ஆகியவற்றை மீண்டும் கட்டி எழுப்பவும் வீடு, கல்வி, மருத்துவம் என எல்லா அடிப்படை உரிமைகளையும் இழந்து தெருவுக்கு வந்துவிட்ட பெரும் எண்ணிக்கையிலான மக்களின் வாழ்வை மேம்படுத்தும் சமூக நலத்திட்டங்களையும் செயல்படுத்த தற்போதைய பைடன் நிர்வாகம் முனைந்திருக்கிறது. இதற்கான வரைவு திட்டமாக அதிபர் பைடன் 2 ட்ரில்லியன் டாலரை வரும் வருடங்களில் செலவு செய்யும் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

அமெரிக்க மைய மாற்றை முன்வைக்கும் அமெரிக்கா

இந்த உள்கட்டமைப்புக்குத் தேவையான பொருட்களையும் இதனால் உந்தப்படும் அமெரிக்க மக்களின் நுகர்வுக்கும் உலக நாடுகள் ஏற்றுமதி செய்வதன் மூலம் பலனடையலாம் எனக் கூறி நாடுகளை அழைக்கிறது அமெரிக்கா. அப்படிப் பலனடைய ஒரே நிபந்தனை, சீன தகவல் தொழில்நுட்பக் கருவிகளுக்கு சந்தையை வழங்கக் கூடாது. எங்கள் நிறுவனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, எங்கள் அமேசான், வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும். அவர்கள் உலகம் முழுவதும் விற்றுக் குவிக்கும் செல்வத்தின் ஒரு பகுதியை அமெரிக்க அரசுக்கு வரியாகக் கொடுப்பார்கள். அந்தப் பணத்தைக் கொண்டு இந்தக் கட்டமைப்பைக் கட்ட வாங்கும் பெரும் கடனை அமெரிக்கா அடைக்கும். இதில் பலனடையப் போகும் இதுவரை வரி கட்டாத அமேசான் நிறுவனர் பைடனின் வரியை உயர்த்தும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார். இது இருக்கும் அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர உதவும்.

இதற்கு மாற்றாக எங்கள் ஊரில் நவீன அதிவேக ரயில் பாதைகளை அமைத்து வருகிறோம். வரும் காலங்களில் இன்னும் பல ஆயிரம் கிலோமீட்டர் அமைக்க இருக்கிறோம். அதை உங்கள் ஊருக்கும் அதன் வழியாக ஆசியா, ஐரோப்பா என இரு கண்டத்தையும் இணைக்கலாம். அதற்கான முதலீட்டை நாங்கள் செய்கிறோம். இதற்கான பொருட்களையும் பெருகிக்கொண்டிருக்கும் எங்களின் நடுத்தர வர்க்கத்துக்குத் தேவையான பொருட்களையும் நீங்கள் ஏற்றுமதி செய்வதன் மூலம் நீங்கள் பலனடையலாம். பதிலாக அமெரிக்க நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்பப் பொருட்களுக்கும் கருவிகளுக்கும் மட்டுமல்ல, எங்களின் நிறுவனங்களுக்கும் நீங்கள் சந்தையைத் திறந்துவிட வேண்டும். டாலரில் மட்டுமல்ல, யுவானிலும் வர்த்தகம் செய்ய வேண்டும்.

அமெரிக்காவின் பக்கமா? இல்லை, இருவரின் பக்கமா?

இதன்மூலம் நீங்களும் பலனடையலாம்; நாங்களும் பலனடையலாம். இருவருக்கும் வெற்றி (Win-Win) என்கிறது சீனத் தரப்பு. கூடவே எந்த நாட்டின் உள் விவகாரங்களிலும் சீனா தலையிடாது என அறிவிப்பதன் மூலம் எல்லா நாடுகளிலும் இருக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் அதற்கு எதிரான போட்டி ஆளும் வர்க்கத்துக்கும் ஒரே நேரத்தில் சமிக்கை செய்கிறது. யார் வருகிறார்களோ அவர்களுடன் இணைந்து தனக்கு ஆதரவான அரசியலை முன்னெடுக்க நினைக்கிறது. மறைமுகமாக இன்று எல்லா சந்தையையும் தனதாக்கி லாபமடையும் அமெரிக்காவிடம் இருந்து குறிப்பிட்ட பகுதியை எடுத்து இருவரும் பகிர்ந்துகொள்ளலாம் என உலக நாடுகளை உசுப்புகிறது சீனா. இதற்கு எதிராக இதுவரையிலும் அமெரிக்காவுடன் இணைந்து பலனடைந்து கொண்டிருக்கும் உலக நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்களைக் கொண்டு நாம் எல்லோரும் இதுவரையிலும் இணைந்திருந்தது போல ஒன்றாக இருந்து அவர்களை வீழ்த்தி, அந்த வெற்றியில் அவர்களின் சந்தையை நாம் எல்லோரும் பகிர்ந்துகொள்ளலாம். அதற்கான தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல், ராணுவ பலம் என்னிடம் இருக்கிறது என நாடுகளை தன்பக்கம் வைத்திருக்க முயற்சி செய்து வருகிறது அமெரிக்கா.

இந்த முயற்சியில் முழுமையாக அமெரிக்காவுடன் இணைந்து கொண்ட நாடுகள் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும்தான். ஜப்பானும், ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவுடன் இருந்து விடுபட முடியாத பொருளாதார - ராணுவ இணைப்பின் காரணமாகப் பெருமளவு இணைந்தும் பகுதி அளவு விலகியும் இருக்கின்றன. மற்ற நாடுகள் நடுநிலை வகிக்கின்றன. நேரடி போரைத் தவிர்க்கும் பொருட்டும் இன்னும் வலுவுடன் இருக்கும் அமெரிக்காவை முழுமையாக எதிர்க்கும் சாத்திய குறைவையும் கணக்கில்கொண்டும் நாடுகளை ஒரு சார்பு எடுக்க வற்புறுத்தாமல் விட்டுப் பிடிக்கிறது சீனா. உதாரணமாக இலங்கைக்குப் பெருமளவு கடன் கொடுத்து இருந்தாலும், சீன துறைமுகத்துக்கு அருகில் இந்தியத் தொழிலதிபர் அதானி துறைமுகம் அமைக்க சீனா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

<பகுதி 1 > / < பகுதி 2 > / < பகுதி 3 > / < பகுதி 4 > / < பகுதி 5 >

ஆய்வின் தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 2 மே 2021