uதேர்தல் முடிவுகள்: சூடு பறக்கும் சூதாட்டம்!

politics

தமிழகம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (மே 2) நடக்க இருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட மாநில மக்கள் மட்டுமல்ல, இந்தியாவில் அனைத்து மாநில மக்களும் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அரசியல் ஆர்வத்தால் பலர் முடிவுகளுக்காக காத்திருக்கையில், தாங்கள் பெட்டிங் கட்டிய கட்சி ஜெயிக்குமா என்றும், அப்படி ஜெயித்தால் பணம் கிடைக்கும் என்றும் சிலர் காத்திருக்கிறார்கள்.

கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பாக 20-20 போட்டிகள் வந்த பிறகு புக்கிங்கும், பெட்டிங்கும் அதிகமாயின. இந்த ஓவரில் எத்தனை ரன்கள் என்றெல்லாம் பெட்டிங் கட்டப்பட்டு அந்த ஓவர் முடிந்த உடனேயே பெட்டிங் பணம் சரியாகக் கணித்தவர்களுக்கு வழங்கப்படும்.

கிரிக்கெட் புக்கிங் இப்போது கடுமையாக ஒடுக்கப்பட்டுவிட்டதால், அதே புக்கிங் உட்கட்டமைப்பைப் பயன்படுத்தி தேர்தல் சூதாட்டம் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம், கேரளம், புதுச்சேரியில் தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாம், மேற்கு வங்காள தேர்தல் பல கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்நிலையில் தேசிய அளவில் மேற்கு வங்காள தேர்தலும், மாநில அளவில் நமது தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலும்தான் பெட்டிங்கில் பரபரப்பாகியுள்ளன.

தமிழகத்தில் திமுக ஜெயிக்கிறதா, அதிமுக ஜெயிக்கிறதா என்ற அடிப்படையில் பெட்டிங் சூடுபிடித்துள்ளது. திமுக 120 இடங்கள் ஜெயிக்கும் என்றும், 130 இடங்கள் ஜெயிக்கும் என்றும், அதிமுக 120 இடங்கள் ஜெயிக்கும் என்றும் விதவிதமாக பந்தயங்கள் வைத்து பணம் கட்ட வேண்டும். தேர்தல் முடிவுகள் இதோடு சரியாக வந்தால் பெட்டிங் கட்டியவர்களுக்கு சில மடங்கு அதிகமாக பணம் அவர்களது வங்கிக் கணக்கின் மூலமே செலுத்தப்பட்டு விடும். இந்த வகையில், திமுக தமிழ்நாட்டில் 160 இடங்கள் பெறும் என்பதற்காகவே அதிக அளவு பெட்டிங் கட்டப்பட்டுள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதிமுக வெற்றிபெறும் என்று பெட்டிங் கட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்றும் கூறுகிறார்கள் அவர்கள்.

தேசிய அளவில், மாநில அளவில் என்றால் மாவட்ட அளவிலும் தேர்தல் பெட்டிங் நடக்கிறது. அந்த வகையில் தமிழகத்திலேயே மாவட்ட அளவில் அதிக அளவு தேர்தல் பெட்டிங் நடப்பது கரூர் மாவட்டத்தில்தான். கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி ஜெயிப்பார் என்றும், அதிமுகவின் விஜயபாஸ்கர் ஜெயிப்பார் என்றும் சம அளவில் பெட்டிங் கட்டப்பட்டிருக்கிறது.

தேசிய அளவில் மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்குதான் அதிக பெட்டிங் கட்டப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சி அமையும் என்றும் அமையாது என்றும் பெட்டிங் சூடுபிடித்து வருகிறது.

**ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *