மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

படுக்கை கேட்டவருக்கு பிணவறையை காட்டிய மருத்துவர்!

படுக்கை கேட்டவருக்கு பிணவறையை காட்டிய மருத்துவர்!

கிராமமோ நகரமோ, தற்சமயம், இந்தியநாடு முழுவதிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மற்றும் மருத்துவ மனைகளின் ICU-களில் படுக்கை வசதி, மற்றும் வென்டிலேட்டர்கள் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. ஆனால் இவை கிடைப்பது தற்போது அரிதாகி வருகிறது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி பற்றாக்குறையால் உயிர் இழப்பவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. இவர்களில் பலர் சுகாதார வசதிகள் பற்றாக்குறையால் உயிரிழந்தனர்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், இன்றைய நிலையை டெல்லியில் நிதிஷர்மா என்பவருக்கு ஏற்பட்ட அனுபவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

”எங்களால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. எங்களது பணமோ செல்வாக்கோ எதுவும் எடுபடவில்லை. காலையில், என் மாமியார் பினா ஷர்மாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கியது.தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் விசாரித்தபோது, ​​அங்கு எங்குமே ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை எதுவும் இல்லை என்று தெரிய வந்தது.பின்னர் அவரை

குரு கோபிந்த் சிங் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவருக்கு ஆக்ஸிஜன் வைக்கப்பட்டது. ஆனால், பத்தே நிமிடங்களில், அவருடைய நுரையீரல் 60 சதவீதம் சேதமடைந்துள்ளதாகவும் அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் அங்கிருந்து அழைத்துச் செல்லுமாறும் கூறி கை விரித்து விட்டார்கள்.பின்னர் தொடர் தொலைபேசி அழைப்புகளுக்குப் பிறகு, எப்படியோ ஆக்சிஜனுடன் கூடிய ஒரு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்தோம். வேறு மருத்துவமனைக்குப் புறப்பட்டோம்.நாங்கள் அங்கு சென்ற நேரத்தில், அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய படுக்கை வேறு ஒரு நோயாளிக்கு வழங்கப்பட்டிருந்தது. மிகவும் கெஞ்சிய பிறகு, அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆக்ஸிஜனைக் கொடுக்கத் தொடங்கினார்கள்.ஆனால் சிறிது நேரத்தில் நிலைமை மோசமாக இருப்பதாகவும் வென்டிலேட்டர் தேவை என்றும், இவர் பிழைக்க மாட்டார், அழைத்துச் செல்லுங்கள் என்றும் கூறினார்கள்.அவருக்கு 55 வயதுதான். இதை அவர்களது வாயால் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவர் என் கையைப் பிடித்து, மகளே, எல்லாவற்றையும் நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள் என்றார்.

அவர்கள் கைவிட்டிருக்கலாம். ஆனால் நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை. அப்போது ஒரு வென்டிலேட்டர் மற்றும் ஒரு மருத்துவருடன் கூடிய ஆம்புலன்ஸ் தேவைப்பட்டது.

அதிக பணம் கொடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைத்து அரசு மருத்துவமனையான ஜிடிபி மருத்துவமனைக்குச் சென்றோம். செல்லும் வழியெல்லாம், ஹெல்ப்லைனுக்குத் தொடர்பு

கொண்டு, அங்கு படுக்கை இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டே சென்றோம்.

23 படுக்கைகள் உள்ளன என்று எங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறப்பட்டது. ஆனால் நாங்கள் வந்ததும், ஆம்புலன்சில் இருந்து இறங்குவதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஹெல்ப்லைன் தவறான தகவல்களைத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்பட்டது.இங்கு படுக்கை இருக்கிறது என்ற ஒரே நம்பிக்கையில் ஒரு மணி நேரமாகப் பயணம் செய்து வந்ததாகக் கையெடுத்துக் கும்பிட்டு, அழுது கொண்டே கூறினேன்.

ஆனால் அந்த மருத்துவர் இங்கே படுக்கைகள் இல்லை என்று கூறினார். மருத்துவமனையின் பின்புறம் என்னை அழைத்துச் சென்று அறைக் கதவைத் திறந்து, இங்கே இறந்த உடல்கள் மட்டுமே உள்ளன என்றார்.

நான் என் வாழ்க்கையில் பல சடலங்களை ஒன்றாக பார்த்ததில்லை. அந்தக் கொடுமையான காட்சி இன்னும் என்னை இரவில் தூங்க விடவில்லை. மனதில் மீண்டும் மீண்டும் வருகிறது. இதனால் விரக்தியடைந்த நாங்கள் இறுதியாக எங்கள் தொடர்புகளின் உதவியுடன் ஒரு மருத்துவமனையில் வென்டிலேட்டர் படுக்கையைப் பெற்றோம், ஆனால் அதற்குள் தாமதமாகிவிட்டது.

எங்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இப்போது, ​​என் இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உட்பட வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா.இப்போது எனக்கு அழைப்புகள் வருகின்றன. ஆக்சிஜன் எங்கிருந்து கிடைக்கும், எந்த கிளினிக்குகளில் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கும், ஆம்புலன்ஸூக்கு யாரை அணுக வேண்டும் என்று கேட்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை அவர்களுக்கு தகவல் சொல்கிறேன்” என்கிறார் நிதிஷர்மா.

-ராமானுஜம்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

சனி 1 மே 2021