மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

ஊழலில் சிக்கும் அலுவலர்களுக்கு சலுகை: நீதிபதி வேதனை!

ஊழலில் சிக்கும் அலுவலர்களுக்கு சலுகை: நீதிபதி வேதனை!

தகுதியான, திறமையான பலர், குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றும் நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட அலுவலர்கள், அனைத்து பண பலன்களை பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கடலூர் நகராட்சியில், நகராட்சி சுகாதார ஆய்வாளராக பணியாற்றிய ஆரோக்கியசாமி, ரூ.2000 லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஆரோக்கியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், துறை ரீதியான நடவடிக்கையாக ஆரோக்கியசாமியை பணி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஆரோக்கியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று(மே 1) நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது, தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கருத்தில் கொள்ளாமல், இந்த பணி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக கருத முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் அரசு ஊழியர்கள், நீதிமன்ற தண்டனைகளிலிருந்து தப்பி விடக்கூடாது என்பதற்காக துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நீதிபதி தெரிவித்தார்.

பல தகுதியான திறமையான நபர்கள் தற்காலிக அடிப்படையில், ஒப்பந்த பணியாளர்களாக, எந்த நேரத்தில் பணி நீக்கம் செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றக் கூடிய நிலையில், ஊழல் வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், அனைத்து பண பயன்களையும் பெறுகின்றனர் என நீதிபதி வேதனை தெரிவித்தார்.

லஞ்சம் வாங்காதவர்களை, பிழைக்கத் தெரியாதவர்கள், வேலை தெரியாதவர்கள் என்கின்றனர். ஊழலில் ஈடுபடுவோரை துாக்கில் போட்டால் தான் சரியாக இருக்கும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

சனி 1 மே 2021