மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

தமிழகத்தின் மூன்றாவது சக்தி யார்?

தமிழகத்தின்  மூன்றாவது சக்தி யார்?

ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, நாளை மே 2 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியான எக்சிட் போல் முடிவுகளில் பல திமுகவே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன.

யார் ஆட்சியைப் பிடிப்பது என்பது மட்டுமல்ல, பல்வேறு காரணிகளை முன் வைத்து வெவ்வேறு விதமான பகுப்பாய்வுகளையும் இந்த எக்சிட் போல் முடிவுகளில் நிகழ்த்தியுள்ளனர்.

எந்தக் கட்சி முதலிடம் என்பது மட்டுமல்ல... இரண்டாம் இடம் பெறும் கட்சி எது? தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவது இடத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் கட்சி எது என்பது பற்றியெல்லாம் எக்சிட் போல் முடிவுகளில் விவாதங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.

மூன்றாவது இடம் என்றால், இந்தத் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமல்ல...அடுத்து பத்து, பதினைந்து வருடங்களுக்கு தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுக்கப் போகும் கட்சி எது என்ற கேள்வியும் எழுகிறது.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை திமுக, அதிமுகவை அடுத்து மூன்றாவது என்ற அந்தஸ்தைப் பெற நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே போட்டி நடக்கிறது..

அமமுக, மநீம ஆகிய கட்சிகள் கூட்டணியோடு தேர்தலை சந்தித்திருக்கின்றன. ஒரு காலத்தில் மூன்றாவது சக்தியாக வரவேற்பைப் பெற்ற தேமுதிக, இம்முறை அமமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்ததால் மூன்றாவது சக்தி என்ற பட்டியலிலேயே தேமுதிகவுக்கு இடம் கிடைக்காமல் போயிருக்கிறது.

கூட்டணி எதுவும் இல்லாமல் தனித்தே இம்முறை போட்டியிடும் நாம் தமிழர் கட்சி எக்சிட் போல் தொடர்பான விவாதங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. நாம் தமிழர் கட்சி இந்த சட்டமன்றத் தேர்தலில் 8% வாக்குகளைப் பெற்றாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதற்கு அடுத்த இடத்திலேயே மக்கள் நீதிமய்யம், அமமுக ஆகியவை இடம்பிடிக்கும் என்றும் கணிக்கிறார்கள்.

ஆனால் இதுகுறித்து அரசியல் ஆய்வாளரான லலித் குமார் வித்தியாசமான இன்னொரு கோணத்தில் தமிழகத்தின் மூன்றாவது சக்தியை இந்தத் தேர்தல் அடையாளம் காட்டும் என்கிறார்.

அவரிடம் மின்னம்பலம் சார்பாக பேசினோம்.

“இந்தத் தேர்தலின் மூலம் தமிழகம் காணப் போகும் மூன்றாவது சக்தி சீமானின் நாம் தமிழர் கட்சியாகத்தான் இருக்கும். அமமுகவை சிலர் மூன்றாவது இடத்துக்குரிய கட்சிகளில் ஒன்றாக பரவலாக பேசுகிறார்கள்.ஆனால் நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. அமமுக என்பது அதிமுகவை கைப்பற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு தற்காலிக தளம்தான். தினகரன் வாங்குவதை அதிமுகவின் வாக்குகளாகத்தான் பார்க்க வேண்டும். எனவே திமுக, அதிமுகவுக்கு எதிரான மூன்றாவது சக்தியாக தினகரன் நீடிக்க முடியாது. 1989 ஆம் ஆண்டு தேர்தலில் ஜானகியும் சிவாஜி கணேசனின் கட்சியும் கூட்டணி அமைத்து மூன்றாவது அணி என்றார்கள். ஆனால் அது அந்தத் தேர்தலோடு முடிந்துவிட்டது.

சீமான் மீது சில பல விமர்சனங்கள் இருந்தாலும் அவர் பின்னால் ஒரு பெரும் கூட்டம் உருவாகியிருக்கிறது. இன்னும் பத்து, பதினைந்து வருடங்கள் அவர் கட்சியை ஒழுங்காக நடத்தினார் என்றால் காலம் சீமானை தமிழகத்தின் முக்கிய இடத்தில் கொண்டு போய் நிறுத்தும்.

வேட்பாளர்களில் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு, தமிழகத்தை நாசமாக்கும் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்ற வெளிப்படையான கொள்கை, பட்டியல் இன வேட்பாளர்களை பொதுத் தொகுதியில் நிறுத்தியது, அரசியல் பிரதிநிதித்துவம் என்றால் என்னவென்றே அறியாத வண்ணார், குயவர் உள்ளிட்ட எளிய அடித்தட்டு சமூகத்தினரை வேட்பாளர்கள் ஆக்கியது. வெற்றி தோல்வி அடுத்தது. தேர்தல் அரசியல் களத்தில் இந்த எளிய சமூகத்தினருக்கு வாய்ப்பளிப்பது என்பது மிக முக்கியமானது. இப்படிப்பட்ட கருத்தியல் ரீதியிலான கொள்கைகளை களத்திலும் நடைமுறைப்படுத்துபவர் சீமான் தான். இது இளைஞர்களில் பலரை கவர்ந்திருப்பதாக அறிகிறேன்.

கமல்ஹாசன் கணிசமான வாக்குகள் வாங்கினாலும் அவர் எதிர்காலத் தமிழகத்துக்கான மூன்றாவது சக்தியாக தெரியவில்லை. அவரது அரசியலில் இன்னும் ஒரு தெளிவில்லை. அவரது அஜெண்டா என்பதை அவர் இன்னமும் விளக்கவில்லை. மய்யம் என்பதே குழப்பமானதுதான். அவரது அரசியலில் வெளிப்படைத் தன்மை இல்லை.

எனவே இந்தத் தேர்தலில் மூன்றாவது இடம் மட்டுமல்ல, அடுத்த பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கான மூன்றாவது சக்தியாக திகழப் போவது சீமான் என்ற முடிவையும் மக்கள் தேர்தல் முடிவில் தெரிவிப்பார்கள்” என்கிறார் அரசியல் ஆய்வாளர் லலித்குமார்.

-ராகவேந்திரா ஆரா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

சனி 1 மே 2021