மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

நாளை தடுப்பூசி போடுவது சந்தேகமே!

நாளை தடுப்பூசி போடுவது சந்தேகமே!

நாடு முழுவதும் நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கவுள்ள நிலையில், பல மாநிலங்கள் அந்த திட்டத்தை குறிப்பிட்ட தேதியில் செயல்படுத்த முடியாது என தெரிவித்துள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி நாளை(மே 1) முதல் 18-44 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 28ஆம் தேதி தொடங்கியது.

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த புதிதில் ஆர்வமுள்ள சில மக்களை தவிர்த்து பெரும்பாலோனார் தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் வந்துவிடும் என்ற பயத்தில் தடுப்பூசியை போட்டுக் கொள்ள முன்வரவில்லை. கொஞ்ச கொஞ்சமாக மக்களிடையே தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது அரசு. இதற்கிடையில் நாட்டில் நடக்கும் ஒருசில எதிர்பாராத மரணங்களால், குறிப்பாக தமிழகத்தில் நடிகர் விவேக் மரணத்தையடுத்து, பலரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள அச்சப்பட்டனர். நகரம், கிராமம் என அனைத்து மக்களிடையேயும் ஒருவித அச்சம் இருந்தது.

இதனால், தடுப்பூசி மையங்களில் மக்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. அதாவது, ஒரு குப்பியை திறந்தால் குறைந்தபட்சம் 10-11 பேருக்கு தடுப்பூசி போடப்படும். வந்த மக்களுக்கு மட்டும் தடுப்பூசி போடுவதால், மீதமுள்ள டோஸ்கள் பயன்படுத்த முடியாமல் வீணாகின்றன. இதனால், தமிழகத்தில் 8.8 சதவீத தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் தடுப்பூசி வீணாகியுள்ளது.

இந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாளை முதல் தொடங்கப்படவுள்ளது. மற்ற வயதினர்களிடையே காணப்படாத ஆர்வம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இதுவரை இந்தியாவில் 2.28 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

தற்போது என்ன சிக்கல் என்றால், மக்கள் தடுப்பூசி போட ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், தடுப்பூசி போதுமான அளவு இல்லை. இதுவரை நாளை தொடங்கவுள்ள தடுப்பூசி திட்டம் குறித்த அறிவிப்புகள் ஏதும் தமிழகத்தில் இருந்து வராததால், நாளைக்கு தடுப்பூசி போடப்படுமா, இல்லையா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் திட்டமிட்டப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை கொரோனா தடுப்பூசி போடுவது சந்தேகமே. 45 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட போதிய அளவு மருந்துகள் இருப்பதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக மே 1 ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசம்

பாஜக ஆளும் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில்,” மே 1 ஆம் தேதி 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படாது. ஆனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடரும். கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் உற்பத்தியாளர்களைத் தொடர்புகொண்டபோது, மே 1 அன்று தடுப்பூசி வழங்க முடியாது, 3 ஆம் தேதிதான் அனுப்ப முடியும் என தெரிவித்தார்கள். அதனால், தடுப்பூசி கிடைத்த பிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து அறிவிக்கப்படும். அதனால் மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.” என தெரிவித்துள்ளார்.

கேரளா

”தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. முதல் டோஸை போட்டுக் கொண்டவர்கள், கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 6-8 வாரங்களுக்குள்ளும், கோவாக்சினை 4-6 வாரங்களுக்குள்ளும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால், இரண்டாவது டோஸ் எடுப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்த பின்னரே ஆன்லைன் முன்பதிவில் ஸ்லாட் ஒதுக்கப்படும்” என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

குஜராத்

பாஜக ஆளும் குஜராத்தின் முதல்வர் விஜய் ரூபானி வெளியிட்ட வீடியோவில்,” தேவையான தடுப்பூசிகள் வழங்கப்படாததால், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி மே 1 அன்று மாநிலத்தில் ஆரம்பிக்கப்படாது. தடுப்பூசி நிறுவனத்திடம், 2 கோடி கோவிஷீல்ட் மற்றும் 50 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மே மாதம் முதல் 15 தேதிக்குள் ஆர்டரின் ஒரு பகுதியாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில், ” சீரம் நிறுவனம், மாநிலத்திற்கு 3 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், இவ்வளவு சிறிய பங்கை வைத்துக் கொண்டு மாநிலத்தில் பெருமளவில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போட முடியாது. 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொடங்க குறைந்தபட்சம் 25-30 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்க வேண்டும். அதனால், எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்பதை தெரிவிக்குமாறு தடுப்பூசி நிறுவனத்திடம் கூறியுள்ளோம். அதற்கேற்ப தடுப்பூசி எப்போது தொடங்குவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.” என தெரிவித்தார்.

டெல்லி

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில்,” டெல்லியில் போதுமான தடுப்பூசிகள் இல்லை. அதனால், தடுப்பூசிகளை வழங்குமாறு அந்நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தாலும், தடுப்பூசி கிடைக்காததால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொடங்க முடியாது. இந்த விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டு, தடுப்பூசிகளைப் பெற்றவுடன், ஓரிரு நாட்களில் மக்களுக்கு தெரியப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.

அதுபோன்று பஞ்சாப்பிலும் தடுப்பூசி இல்லாததால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 அன்று தடுப்பூசி போடப்படாது என பஞ்சாப் சுகாதாரத் துறைச் செயலாளர் ஹுசன் லால் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடுமாறு அரசு மக்களை கெஞ்சி கொண்டிருந்தபோது, மக்கள் வரவில்லை. தற்போது மக்கள் தடுப்பூசி போட குவிந்துக் கொண்டிருக்கும் வேளையில் அரசிடம் தடுப்பூசி இல்லை.

வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வெள்ளி 30 ஏப் 2021