மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

இதற்குத்தானா இ.பி.கோ !?

இதற்குத்தானா இ.பி.கோ !?

ஸ்ரீராம் சர்மா

ஜனநாயகம் என்ற ஒன்றை கண்டுபிடித்து வைத்தவன் எவனோ, அந்த மாயக் குடிலுக்கு நான்கு தூண்களை அமைத்து அதை நம்பச் சொன்னவன் எவனோ, அந்தப் புண்ணியவானைத் தொழுதுதான் இந்தக் கட்டுரையை எழுதத் துவங்குகிறேன் !

மேற்கு திரிபுராவில் ஒரு கல்யாணம் !

அந்தக் கல்யாணத்தின் கொண்டாட்டங்கள் இரவு 10 மணி கடந்தும் நடந்து விடுகிறது. அது, அரசாங்கத்தின் 144 தடையை மீறியது என்பதால் அந்த மாவட்டத்தின் நீதிபதி சட்டத்தை அமலாக்குகிறேன் பேர்வழி என்று அங்கே விரைகிறார்.

கொஞ்சம் கடமை உணர்ந்து செயல்பட்டிருந்தால் ஹீரோவாகி இருக்கக் கூடியவர் என்ன எழவாலோ வில்லனாகிப் போனார் !

இறங்கிய கையோடு, திருமணக் கோலத்தில் இருக்கும் மணமகனை தன் கை கொண்டே தாக்குகிறார். ஆசையோடு தன்னை அலங்கரித்துக் கொண்டு நிற்கும் மணமகளோ அவமானம் மேலிட அழுதபடி வெளியேறுகிறார்.

திருமணம் நடத்த வந்த புரோகிதருக்கும் கழுத்தாம் பட்டையிலேயே ஒரு அடி கொடுத்து வெளியே தள்ளிய மாவட்ட நீதிபதி கூடியிருந்தவர்களை எல்லாம் சகட்டு மேனிக்குப் பிடித்துத் தள்ளிக் கூச்சல் போடுகிறார்.

“நீங்கள் எல்லாம் படித்தவர்கள்தானே... படிக்காதவர்கள் போல இப்படியா முட்டாள்தனமாக நடந்து கொள்வீர்கள்...?” என உடைந்த ஆங்கிலத்தில் எகிறிக் கேட்கிறார்.

படிக்காதவர்கள் எல்லாம் முட்டாள்தனமாக நடந்து கொள்வார்கள் என்று எந்த முட்டாள் பல்கலைக்கழகமப்பா உனக்குச் சொல்லிக் கொடுத்தது எனக் காறி உமிழாத குறையாக நாடெங்கும் வலம் வந்து கொண்டிருக்கும் அந்த கட்டைப்பஞ்சாயத்து வீடியோவைக் காணக் காண நமக்கு பேரதிர்ச்சிதான் மேலிடுகிறது.

இதுதான் இபிகோ படித்தவரின் கோட்பாடா ? இதுதான் ஜனநாயகத்தை நிலை நாட்டும் சட்ட லட்சணமா ?

மக்களாட்சியின் இறுதி எஜமானர்கள் மக்களே ! அவர்களை நேரடியாகத் தாக்குவதற்கு அந்த மாவட்ட நீதிபதிக்கு எந்த சட்டத்தில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது ?

இந்திய சட்ட விதிகளில், மாவட்ட நீதிபதியாகப்பட்டவர் சட்டத்தை நிலை நாட்ட போலீஸுடன் இணைந்து செயல்படலாம் என்று சொல்லப் பட்டிருக்கிறதே தவிர நேரிடையாக மக்களை அடித்து அடக்கலாம் என மறைமுகமாகவேனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்பதை எல்லாம் சட்ட வல்லுனர்கள்தான் ஆய்ந்து சொல்ல வேண்டும்.

இன்று, பொதுமக்களின் மனதில் மூண்டெழுந்து நிற்பது அப்பட்டமான அதிருப்தியும் எதிரடி மனப்பான்மையும்தான்.

மாவட்டத்தின் நீதிபதிகள் என்பவர்கள், மாவட்ட கலெக்டருக்கும் – டெபுடி கமிஷனருக்கும் இணையான அந்தஸ்தையும் வல்லமையையும் உடையவர்கள்தான் என்கிறது இந்த நாட்டின் சட்டம் ! அது சரிதான். இந்த நாட்டின் சட்டத்தை ஏற்று நடந்தாகவேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றதுதான்.

ஆனால், நீதியை நிலை நாட்டும் இடத்தில் இருக்கும் மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் அங்கே ‘போலீஸ்’ நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்த வீடியோ காட்டவில்லை. மாறாக, அந்த மாவட்ட நீதிபதியே மக்களை நேரிடையாகத் தாக்குகிறார். இது தகுமா ?

டெல்லியை ஆளும் கெஜ்ரிவாலை நோக்கி,

“அசோகா ஸ்டார் ஹோட்டலில் எங்களுக்கு 100 ரூம் ஒதுக்கச் சொல்லி உங்களிடம் யார் கேட்டது. அரசியல்வாதிகள் உங்களுக்கு எல்லாம் மக்களைப் பற்றி அக்கறையே இல்லையா...?” என்றெல்லாம் முழக்கம் செய்து பெருமை தட்டிக் கொண்ட சட்டாண்மையாளர்களை இந்த நிகழ்வு கெக்கலித்துக் கேள்வி கேட்கிறதே !

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் வாழப் பழகியவர்கள். மகிழ்ச்சிதான் அவர்களது ஒரே குறிக்கோள்.

இருக்கப்பட்டவர்கள் – இல்லாதபட்டவர்கள் யாராக இருந்தாலும் தீபாவளி – ரம்ஜான் – கிறிஸ்த்துமஸ் போன்ற கொண்டாட்டங்களை அவரவர்களின் சக்திக்கேற்றபடி ஈடேற்றிக் கொள்ளத்தான் முனைவார்கள். திருமணம் என்பது மக்கள் காணும் உச்சபட்ச கொண்டாட்டம் !

கொண்டாட்ட வழக்கத்தில் இருப்பவர்கள் நாட்டின் சட்ட திட்ட சூழல் திடீரென்று மாறுபட்ட இன்றைய சூழ்நிலையில் வழக்கமான தங்கள் கலாச்சார நிர்பந்தங்களால் சில சமயங்களில் தவறுகளை செய்யத்தான் செய்வார்கள்.

அந்தத் தவறினைக் கண்டித்து அவர்களை நல்வழிப்படுத்தத்தான் இந்த நாட்டில் சட்டம் இருக்கிறது. அதனைச் செயல்படுத்தும் நீதிமான்களுக்கு அதே மக்களின் வரிப்பணத்தில்தான் சம்பளமும் கொடுக்கப்படுகிறது.

அதனை உணர்ந்தவராக திரிபுராவின் அந்த மாவட்ட நீதிபதி செயல்பட்டிருக்க வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் ஆதங்கம் !

“ஐயா, தெரியாமல் செய்துவிட்டோம், விட்டுவிடுங்கள்...” என்று மன்றாடும் கல்யாண வீட்டுக்காரப் பெண்மணிகளை புறந்தள்ளியபடி...

“நான் இந்தக் கணம் எல்லோரையும் கைது செய்கிறேன்...” என்று ஆங்கிலத்தில் கொக்கரிக்கிறார் அந்த மாவட்ட நீதிபதி.

“என்னை முட்டாள் என சொல்லாதீர்கள் சார். நான் ஒரு சர்ஜன்..” என்று அமைதியாக சொன்ன ஒரே காரணத்துக்காக அந்த டாக்டரை மடக்கி, “இதோ இவருக்கு 353 போடுகிறேன்...’ என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்.

ஜாமீன் பெற முடியாத அந்த இபிகோ 353 க்கு உரிய குற்ற மீறல்கள் எதையும் அந்த டாக்டர் செய்யவில்லை என்பதற்கு அந்த வீடியோவே சாட்சி. உண்மையில், அது மாவட்ட நீதிபதியின் அதிகார துஷ்பிரயோகம் !

கலாச்சார விழுமியங்களை மிக முக்கியமானதாகக் கொள்ளும் மக்களைக் கொண்ட நாடு இது. திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்றெல்லாம் சொல்லப்படும் நாடு இது.

அதன் சுகந்த நினைவுகள் எல்லாம் புகைப்படங்களாக – வீடியோக்களாக பதிவு செய்யப்பட்டு, பேரன் பேத்திகள் வரை அவர்களின் முன்னோர்கள் சார்ந்த நினைவாக கடத்தப்பட்டு - காட்டப்பட்டு இதுபோல் கொண்டாட்டமாக இருந்து நீங்களும் ஓர் சமூகமாக கூடி வாழுங்கள் என்பதை சொல்லும் வருங்காலப் பதிவாக அது இருக்கின்றது.

அப்படிப்பட்ட கலாச்சார நினைவுகளின் மீதுதான் அந்த தன்முனைப்பாளர் இப்படி ஓர் அராஜகத்தை நிகழ்த்திக் காட்டி நின்றார். சம்பந்தப்பட்ட அந்தக் குடும்பத்துக்கும் அதன் உறவினர்களுக்கும் இது காலங்கடந்தும் கசந்து நிற்குமோர் அவமானச் சின்னமாகவே நிலைத்துவிட வாய்ப்பிருக்கிறது என்பதை உணரத் தவறிப் போனார்.

எண்ணிப் பாருங்கள், வருங்கால தலைமுறை - தன் முன்னோர்களின் கல்யாண கொண்டாட்டத்தில் இப்படி ஒரு அட்டகாசமும் அராஜகமும் நிகழ்த்தப்பட்டதைக் காணப் பொறுக்குமா ? அன்று, இந்த கொடுங்கோல் நாட்டை ஆண்டவன் எவனடா என்று முறித்துக் கொண்டு நிற்காதா ?

என் தகப்பனை – என் தாயை என் கண்ணுக்கு முன்னால் தாக்கியதைக் கண்ட காரணத்தினாலேயே இந்த சமூகத்துக்கு எதிரானவனாக நான் கத்தியை எடுத்தேன் என்று சொன்ன எத்தனையோ இளங்குற்றவாளிகளை நான் கண்டிருக்கிறேன். அப்படிப்பட்டதோர் சம்பவமாகத்தான் இதனைக் கருதி அச்சம் கொள்கிறேன்.

சட்டத்தை மீறினார்கள். அதனால் அவர்களை தண்டித்தேன். மக்கள் நலனுக்காகத்தானே அப்படி செய்தேன் என்றெல்லாம் அவர் பாசாங்காக சொல்லிப் போகலாம். ஏஸி அறையில் அமர்ந்து கொண்டு ஏட்டளவில் நியாயம் பேசும் சுகவாசிகளும் அவரை ஆமோதிக்கலாம்.

ஆனால், கோடி ஜனங்கள் கூடிக் கும்மாளமடித்த தேர்தலின் போது உங்களின் மக்கள் நலக் கோட்பாடெல்லாம் என்னவானது என்று வருங்காலச் சமூகம் கேட்காதா ?

ஆம், சட்டத்தின் அருமையை மாட்சியை மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஓர் முறை இருக்கிறது அல்லவா ? அது மனிதம் சார்ந்தது அல்லவா ? மனிதத்தை மீறிய சட்ட செயல்பாட்டை ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான மக்கள் மீது எறிந்து காட்டுவது நியாயமாகுமா ?

இந்தக் கேள்விகளெல்லாம் ஓர் புறமிருக்க... அந்த மாட்சிமை பொருந்திய மாவட்ட நீதிபதி போலீஸைக் கையாண்ட விதம் இருக்கிறதே... அதுதான் பேரதிர்ச்சி !

இன்றைய நிலையில், நாட்டின் போலீஸ் ஸ்ட்ரெங்த் என்பது ஏறத்தாழ 650 பேருக்கு ஒருவர் என்பதாகத்தான் இருக்கிறது. அந்த போதாமையையை வைத்துக் கொண்டு போலீஸார் அல்லாடுவதைக் குறித்து ஏற்கெனவே மின்னம்பலத்தில் எழுதியிருக்கிறேன்.

பேரிடர்க்காலங்களில் அரசாங்கம் இடும் திடீர் உத்தரவுகளைத் தங்கள் உயிரையும் – தங்கள் குடும்பங்களையும் பணயம் வைத்தபடி நடுத் தெருவில் நின்றும் – ஓடியாடியும் போராடிப் போராடி மக்களைக் காத்துக் கொண்டிருப்பவர்கள் போலீஸார்தான் ! ஒட்டு மொத்த தேசத்துக்கும் இது பொருந்தும்.

அப்படிப்பட்டவர்களைத்தான் மிகத் துச்சமாகப் பேசுகிறார் திரிபுராவின் அந்த சட்ட ஓங்காளர் ! அவர்களது மேலதிகாரிகளை அலைபேசியில் அழைத்து, ‘உங்கள் ஆட்களெல்லாம் இங்கே பணம் வாங்கிக் கொண்டு சோரம் போகிறார்கள் வந்து பாருங்கள்..’ என்று வீடியோ கேமிரா முன் இறைந்து வல்லாட்டம் ஆடுகிறார்.

அன்றைய ஜோருக்கு போலீஸாருக்கு உரிய மரியாதையை பொசுக்கியபடி அவர் ஆர்பாட்டம் செய்துவிட்டுப் போய்விடலாம். ஆனால், அடுத்த நாளில் அதே மக்களோடு இணக்கம் பாராட்ட சொல்லி நடுத் தெருவில் நின்று கொண்டு சட்டத்தைக் காப்பாற்றப் போராட வேண்டியது போலீஸார்தான் என்பதை அவர் உணர்ந்தாரா என்றால் இல்லை !

சட்டம், ஆகப் பெரிய உரிமைகளை அவருக்கு கொடுத்து வைத்திருக்கிறது. சரி, கேமிராவை ஆஃப் செய்ய சொல்லிவிட்டுத் தனிப்பட்ட முறையில் அவர் தன்னுடைய போலீஸை கண்டித்திருக்கலாமே ?

எல்லாமே எனக்கு அடக்கம் என்பதுபோல அவர் நடந்து கொண்ட விதம் சரிதானா ? அவர் ஆடிய ஆட்டம் ஏதோ ஓர் மசாலா படத்தின் வில்லனைப் போல கோமாளித்தனமாகி விட்டதே !

வெகுஜன மக்களின் உணர்வலைகளொடு ( SENTIMENT ) கூடிய இந்தக் கட்டுரையை எழுதிய பேனாவின் நோக்கம் அந்த மாவட்ட நீதிபதியின் மன நலக் கேடு குறித்து முடிவு கட்டுவது இல்லை.

ஆயினும், என்னதான் மாட்சிமை தங்கிய நீதிபதி என்றாலும் அவரும் மனிதர்தானே ? அவருக்கும் மனம் என்று ஒன்று இருக்கும்தானே ? அது கெட்டுப் போகவும் வாய்ப்பிருக்கும்தானே ? அட, இபிகோ படித்தவருக்கு எதுவும் கெடாதா என்ன ? அப்படிக் கெட்டுப் போனதற்கான பின்புலம் என்ன எழவாக இருக்கும் என ஆராய்வது நமது நோக்கம் இல்லை !

மொத்தத்தில், இ.பி.கோவை செயலாக்கும் சட்டப் பணியில் இருந்து அவரை முழுமையாக விடுவித்து அனுப்பிவிடுதல் நலம். மேலும், மனநலக் காப்பகம் ஒன்றுக்கு அனுப்பி சமூக வாழ்வு குறித்து தீவிரமாக கவுன்ஸிலிங் கொடுப்பது அதி உத்தமம் !

இதனை உள் மாநில அரசியலாக்கித் திருப்ப சிலர் முற்படலாம். அது அவர்களுக்கே உண்டான பொல்லாத பிழைப்பு.

வெகுஜன எழுத்தாளனாகிய எனக்கு அது குறித்தெல்லாம் கிஞ்சித்தும் கவலையில்லை. எனது கவலையெல்லாம் மானுடம் குறித்ததே !

அந்தக் கல்யாண வீட்டின் அராஜகங்களை இன்டர்நெட்டில் இருந்து முற்றிலும் நீக்கி விட வாய்ப்பே இல்லை எனும்போது இந்த அராஜகத்துக்கு எதிரான நடவடிக்கை என்பது குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட மனிதர்களின் வருங்கால சந்ததிக்கு ஏதோ ஒரு வகையில் நமக்கு நமது முன்னோடிகள் நியாயம் செய்தார்கள் என்னும் ஆறுதலையாவது அளித்து அவர்களை சமூகத்தோடு ஒன்றி வாழ வழி வகுக்கும் !

இல்லையென்றால், இந்த அரசாங்கத்துக்கு எதிரான – சட்டங்களுக்கு எதிரான - சமூகத்துக்கெதிரான வன்மத்தைத்தான் அது வளர்தெடுக்கும் !

‘சையெனத் திரியேல்” என அவ்வைப் பெருமாட்டி அன்று போதித்ததின் பொருள் உலகத்தார், “ச்சீச்சீ..’ எனத் தூற்றுமளவுக்கு நடந்து கொள்ளாதே என்பதே !

மூதாட்டி அவ்வை சொல் வாக்கு நீதிபதிகளையும் உள்ளடக்கியதே !

கட்டுரையாளர் குறிப்பு:

ஸ்ரீராம் சர்மா

எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதனைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திருஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்..)

.

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 30 ஏப் 2021