மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

பகுதி 4: தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

பகுதி 4: தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

ஏகாதிபத்திய - பார்ப்பனிய இணைவின் பின்னுள்ள உலக அரசியல்!

கடந்த மூன்று பகுதிகள் தமிழகம் எதிர்கொண்ட முரண்கள், மாற்றங்கள், தற்போது எதிர்கொள்ளும் முரண், ஏகாதிபத்தியம் கோரும் பொருளாதார கட்டமைப்புக்கு பார்ப்பனிய சாதிய கட்டமைப்பு எப்படிப் பொருந்திப்போகிறது, அது எப்படி இருவரின் நலன்களுடன் பொருந்திப்போகிறது என்பதைப் பேசியது. இந்தப் பகுதி ஏகாதிபத்தியமும் பார்ப்பனியமும் இணைந்த அரசியல் பின்னணி, இணைந்த பின்னரான உலக அரசியல் மாற்றங்கள், உலக நாடுகளின் அரசியல் நகர்வுகள், பின்னிருந்து இயக்கும் அமெரிக்க - சீன நாடுகளின் பூகோள அரசியல் விளையாட்டுகள், ஒருவரையொருவர் வீழ்த்த முற்படும் முயற்சிகள், இருவரின் பலம் - பலகீனங்கள் குறித்து இந்தப் பகுதி பேசுகிறது.

இப்படி இந்திய பொருளாதாரத்தைத் தனது இரும்புப்பிடிக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தையும் இதைச் சிரமேற்று செயல்படுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பனிய எதேச்சதிகார ஆட்சியையும் எதிர்த்து நின்று வெற்றிபெற முடியுமா? எதிர்த்து நிற்க முடியாத அளவுக்கா அவர்கள் அரசியல் பொருளாதார இரும்புக் கோட்டையை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று உறுதியாக சொல்லலாம். உண்மையில் , இது முதலாளித்துவ வளர்ச்சியில் உச்சத்தை அடைந்து அதன் வளர்ச்சிப்போக்கில் உருவான ஒரு துருவ உலக ஒருங்கமைப்பு உடைந்து சிதறாமல் கட்டிக்காக்க போராடும் ஏகாதிபத்தியமும், இனி ஒட்டமுடியாத அளவுக்குப் பிளவடைந்து கொண்டிருக்கும் சாதிய கட்டமைப்பை உடையாமல் காக்க போராடும் இந்திய பார்ப்பனியமும் தங்களின் ஒற்றை மேலாண்மையை நிலைநிறுத்த செய்யும் இறுதிப் போராட்டம்.

அவலத்தை அரசியலாக்கி ஏற்படுத்தப்பட்ட கூட்டு

இவர்களின் இந்த இணைவு, இந்தக் கட்டமைப்பு உடையாமல் காத்து எல்லாவற்றையும் தானே அனுபவிக்கும் முனைப்பில் கட்டப்பட்ட சந்தர்ப்பவாத இணைவு. அதுவும் அவசர அவசரமாக கொரோனா பேரிடர் காலத்தை மனிதப் பேரவலமாகக் கருதி உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து எதிர்கொள்ளாமல் இதைப் பெருவாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு மனிதர்களின் பிணத்தின் மீது அரசியல் செய்து உலகையே அல்லல்பட வைத்து, அதில் ஆதாயம் அடைய துடிக்கும் அருவருக்கத்தக்க கூட்டு. கொரோனாவுக்கு முன்புவரை இந்தியாவின் நிலைப்பாடு அமெரிக்காவின் பக்கம் நின்று சீனாவை நேரடியாக பகைத்துக்கொள்ளாமல் இருபக்கமும் ஆதாயம் அடைவது என்பதாகவே இருந்தது. அதுவரையிலான அமெரிக்க - சீன வர்த்தகப்போர் அதில் உடன்பாடு எட்டாத நிலையில் தொழில்நுட்பப் போராக இருந்ததுவரை இந்தியா குறிப்பிட்ட அளவு நடுநிலை வகித்தது.

கொரோனா தொற்று பெருநெருப்பாக சீனாவின் ஊகான் நகரத்தைப் பற்றியதும் சீனா இதில் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் பலகீனமடையும். இந்தத் தொற்று, அங்குள்ள ஆய்வகத்தில் இருந்து உருவானது என அரசியல் ரீதியாக தாக்குவதன்மூலம் அதைத் தனிமைப்படுத்தி மண்டியிட வைக்கலாம் என அப்போதைய டிரம்ப் நிர்வாகம் கணக்கிட்டு அதன்மீது திரிபுத் தகவல் போரைத் தொடுத்தது. அமெரிக்கா - சீனா இடையிலான போட்டி இணைந்து செயல்பட முடியாத அளவு முரண்பட்டுவிட்டது. இந்த முரண்பாடு முற்றி ஒரு உடைவைச் சந்திக்கும். அதன் தொடர்ச்சியில் அங்கிருக்கும் நிறுவனங்கள் எல்லாம் வெளியேறும். அவர்கள் 90களில் இருந்த சீன சூழலை ஒத்த நிலையில் இருக்கும் இந்தியாவில் வந்து தொழில் தொடங்குவார்கள் என இந்தியா கணக்கிட்டது. தொழில்நுட்ப ரீதியாக பிந்தியிருக்கும் இந்தியா, இந்த முரணை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சீனாவைப்போல அவர்களிடம் இருந்து தொழில்நுட்பங்களைப் பெறும் நோக்கில் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தை அறிவித்தது. இந்த முக்கியமான கட்டத்தில் அமெரிக்க சார்பு எடுத்து இதில் பங்காளியாக இணைந்துகொள்வதன் மூலம் பெரும் பலன் அடையலாம் என கணக்கிட்டு அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து கொண்டது.

அவலத்தை ஆயுதமாக்கி இந்திய சந்தையை அடைந்த அமெரிக்கா

ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக சீனா கொரோனாவுக்கு எதிராக வெற்றி பெற்றது. குறுகிய நோக்கத்துடன் கொரோனாவை அசட்டையுடன் எதிர்கொண்ட அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுக்கு மக்களையும் தங்களின் பொருளாதாரத்தையும் பலி கொடுத்தன. இந்த அசாதாரண சூழலை அறிவியல்பூர்வமாக மக்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் எதிர்கொண்ட ஆசிய நாடுகள் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி கண்டன. இவ்வளவு பாதிப்புக்கு பின்பும் இந்தியா தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. காரணம், அமெரிக்க - சீன முரண்பாடு என்பது தீர்க்க முடியாதது. அதோடு மீண்டும் நிச்சயம் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கணக்கிட்டு தொடர்ந்து முன்னேறியது.

இந்தியாவில் இருந்து சீன முதலீடுகளையும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும் வெளியேற்றியது. அமெரிக்க நிறுவனங்களுக்கு சிந்தாமல் சிதறாமல் மொத்த இந்திய தகவல் தொழில்நுட்ப வெளியையும் அதன் அடிப்படையிலான பொருட்களின் விற்பனைக்கான சந்தையையும் கொடுத்தது. அதற்கு தோதான விவசாயத் திருத்த சட்டம், தொழிலாளர் திருத்த சட்டம், புதிய கல்விக்கொள்கை எனப் பல சட்டங்களை கொரோனா காலத்தைப் பயன்படுத்தி விவாதமின்றி நிறைவேற்றியது. திடீரென உருவான இந்திய - சீன எல்லை மோதல் இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லாத சூழலை உருவாக்கியது. அதையே காரணமாக காட்டி, இந்திய - அமெரிக்க ராணுவ ஒப்பந்தத்தை மேற்கொண்டு இந்தியாவை அமெரிக்காவின் அணி ஆக்கியது. இந்த அரசியல் - பொருளாதார - ராணுவ நகர்வுகளின் மொத்த பலன்களையும் அமேசான், வால்மார்ட், ஜியோ, அதானி குழுமம், முகநூல், கூகுள் ஆகிய சில நிறுவனங்கள் அறுவடை செய்தன. டாட்டாவும் மற்றவர்களும் மற்ற விடுபட்ட அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து தற்போது களம் கண்டு வருகிறார்கள்.

பைடன்: புதிய மொந்தையில் பழைய கள்

டிரம்ப் காலத்திய அமெரிக்க தேசியவாத அரசியலும் அங்கு நடந்த உள்ளூர் அரசியல் குழப்பங்களும் அங்கு பிரிந்து கிடக்கும் ஆளும் வர்க்கத்தையும் பெருகி கிடக்கும் சமூக பிரச்சினைகளையும் படம்பிடித்துக் காட்டின. இதன் தீவிரத்தை உணர்ந்துகொண்ட ஆசியான் நாடுகளும், மற்ற ஆசிய நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் தேர்தலுக்கு முன்பாக அமெரிக்காவை முந்திக்கொண்டு சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. இந்தியா தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் செய்து கொள்ளாமல் உறுதியுடன் தொடர்ந்தது. இந்தியாவின் எதிர்பார்ப்புக்கு மாறாக டிரம்ப் தேர்தலில் தோற்றாலும் இந்தியா கணக்கிட்டபடி அமெரிக்க - சீன முரண்பாடு தொடர்கிறது. புதிதாகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள பைடன் நிர்வாகம் முந்தைய நிர்வாகத்தின் கொள்கைகளை அதன் கடுமையைக் குறைத்து சற்று மென்மையாகச் செயல்படுத்த முயற்சி செய்து வருகிறது.

சீனாவைச் சுற்றி வளைக்கும் நோக்கில் டிரம்ப் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தோ - பசிபிக் கொள்கையை அப்படியே தொடர்கிறது. அப்போது உருவாக்கப்பட்ட அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட குவாட் (Guad) ராணுவ கூட்டமைப்பை தொடர்வது மட்டுமல்ல, அமைச்சர்கள் மட்டத்தில் இருந்ததை நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுக்கும் அளவுக்கு பைடன் உயர்த்தி இருக்கிறார். முந்தைய முன்னெடுப்பான பனிப்போர் வகையிலான பேச்சை மாற்றி ஜனநாயக நாடுகளின் கூட்டமைப்பு என ஜனநாயக சாயம்பூசி அதே சீன எதிர்ப்பை சீனாவின் பெயரைச் சொல்லாமல் அழைப்பு விடுக்கிறார்.

நாம் உற்று நோக்க வேண்டியவை

இதன்பிறகு நடந்து கொண்டிருக்கும் உலக அரசியல் சூழலை தமிழகமும் இந்தியாவும் உற்று நோக்க வேண்டும். குறிப்பாக இன்று பாசிசத்துக்கு எதிராக நமது குரலை உயர்த்திக் கொண்டிருக்கும் சூழலில் அதன் தோற்றுவாயை தேவையை சரியாக புரிந்துகொள்ளவும் திறன்பட எதிர்கொள்ளவும் இது அவசியமானது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பொருளாதார ஒன்று குவிப்பும் அரசியல் எதேச்சதிகாரமும் இந்தியாவின் இயல்பான பொருளாதார சமூக வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவு அல்ல. உலகை ஆளும் ஒரு துருவத்துக்கும் அதைப் பங்கிடக் கோரும் பல் துருவத்துக்கும் இடையிலான முரண்பாட்டில் ஒரு துருவத்திடம் கொண்டுபோய் இந்தியாவை அடகுவைத்து பலனடைய முடிவு செய்த பார்ப்பனியத்தினால் வந்த விளைவு. எதிர்பாராத விதமாக நாம் எண்ணிப்பார்க்காத வடிவங்களான டிஜிட்டல் அரசியல் (2014), பண மதிப்பிழப்பு போன்றவற்றின் வழியாக ஏகாதிபத்தியத்தின் தேவைக்காக இந்தியாவின் மீது திணிக்கப்பட்டதன் விளைவு.

எந்த முரண்பாட்டின் தேவையில் இந்தச் சூழல் உருவாக்கப்பட்டதோ, அந்த முரண்பாடு தொடர்கிறதா, மேலும் முற்றுகிறதா... இல்லை, சமாதானமாக சமமாகப் பிரித்துக்கொண்டு முடித்து வைக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்து இங்கே இவர்களின் இந்த எதேச்சதிகார அரசியல் தொடர்ந்து வலுப்பெறுவதும் வலுக்குறைவதும் நடக்கும். அங்கே நடக்கும் ஒவ்வொரு மாற்றமும் இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தில் எதிரொலிக்கும். உதாரணமாக ஒரு வருடமாக இழுத்துக்கொண்டிருந்த இந்திய - சீன எல்லைப் பிரச்சினை பைடன் ஆட்சிக்கு வந்து சீனாவுடன் தற்காலிக சமாதானம் அறிவிக்கப்பட்ட உடன் இங்கே எல்லையில் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு சீன முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன. இப்போது பைடன் நிர்வாகம் சண்டையை தீவிரப்படுத்தி வரும் நிலையில் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொண்டு நகராமல் கிடப்பில் கிடக்கிறது.

ஆதாயத்தை அடிப்படையாகக் கொண்டு ஆடப்படும் ஆட்டம்

அமெரிக்கா - சீனா இடையிலான ஆங்கூறேஜ் பேச்சுவார்த்தைக்கு முன்னும் பின்னும் பைடன் நிர்வாகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார்கள். அதில் குறிப்பிடத்தக்க அம்சம் எந்த நாட்டையும் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க சொல்லி வற்புறுத்த மாட்டோம் என அறிவித்தது. இது இவர்களின் சீன எதிர்ப்பு அரசியலுக்கான ஆதரவு குறைவைக் காட்டியது. அதே நேரம் மற்ற நாடுகள் அமெரிக்காவை சீனாவுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் தமது பேரவலிமையைக் கூட்டி அதிகம் பலனடையும் வகையில் காய் நகர்த்துகின்றன. அதோடு எதிர்காலத்தில் வலுப்பெறப்போகும் சீனா, தங்களின் மீது ஆதிக்கம் செய்வதைத் தடுக்கவும் இதை வாய்ப்பாக பார்க்கின்றன. அமெரிக்கா இந்த நாடுகளின் ஆதரவைக் காட்டி சீனாவை அடக்கவும் ஆதாயம் பெறவும் நினைக்கிறது.

உதாரணமாக குவாட் கூட்டத்துக்கு முன்பு ஹோவாவெய் நிறுவனத்தை இந்தியாவில் 5ஜி சாதனங்களை விற்க அனுமதிக்கப் போவதாக இந்தியா செய்தி வெளியிட்டது. பின்பு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு அனுமதி இல்லை எனச் செய்தி வெளியானது. சந்தையை முழுமையாக அமெரிக்காவுக்குக் கொடுத்துவிட்டு, பதிலாக இந்தியா எதிர்பார்த்த நிறுவனங்களின் உற்பத்தி இடப்பெயர்வு இதுவரையிலும் நடைபெறாததால் அதை எதிர்பார்த்து இந்தச் செய்தியை மறைமுகமாக தெரிவித்தது. இந்தக் கூட்டத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்ய முதலிடுவதாக அமெரிக்கா அறிவித்தாலும் கொரோனாவால் வீழ்ந்து கிடக்கும் இந்திய பொருளாதாரத்தின் யானை பசிக்கு அது சோளப்பொரிதான். கூட்டம் முடிந்தபிறகு சீன நிறுவனங்களும் அரசின் நம்பிக்கையான நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெறலாம் என செய்தி வெளியிட்டு அமெரிக்காவின் மீது அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆக, இவர்களின் நோக்கம் ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொண்டு இந்த சிக்கலான சூழலில் அதிக பலன்களை பெறுவது.

சூடுபிடிக்கும் உலக அரசியல் நகர்வுகள்

அதேபோல ஆங்கூறேஜ் பேச்சுவார்த்தை தொடக்கக் கூட்டத்தில் ஜின்ஜியாங், ஹாங்காங், திபெத் பகுதிகளில் சீனாவின் மனித உரிமை மீறலை ஆயுதமாக்கி எங்களை எதிர்க்கும் உங்களின் இறையாண்மையை கேள்விக்குட்படுத்துவேன் என அமெரிக்கா மறைமுக தாக்குதல் தொடுத்தது. அவர்களை நிலைகுலைய வைத்து தாம் நினைத்ததை சாதிக்க நினைத்தது அமெரிக்க தரப்பு. பதிலடியாக சீன மக்களின் பார்வையில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பும் சரி, இப்போதும் சரி... நீங்கள் வலுவான நிலையில் இருந்து எங்களை எதிர்கொள்வதாக நினைக்கவில்லை. அதேபோல எங்களுக்குப் பாடம் எடுக்கும் அளவுக்கு உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை என 15 நிமிட பாடம் எடுத்தது சீன தரப்பு. இது இருவருக்கும் இடையில் இப்போதைக்கு உடன்பாடு எட்டும் சாத்தியமில்லை என்பதை பட்டவர்த்தனமாக்கியது. இதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகான நடவடிக்கைகள் இருவரும் மோதிப்பார்ப்பது என முடிவுக்கு வந்துவிட்டதை உணர்த்துகிறது.

கூட்டம் முடிந்த சில நாட்களில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இரு நாடுகளும் இணைந்து அமெரிக்காவை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் டாலர் தவிர்த்த சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். அடுத்த சில நாட்களில் சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் வாங் இறுதியில் இரான் உடன் 25 ஆண்டுகளுக்கு 250 பில்லியன் அளவுக்கும் மேலாக முதலிடும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.

அமெரிக்க - சீன கூட்டத்துக்கு அடுத்து ஐரோப்பாவுக்குச் சென்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ப்ளிங்கன் அந்த நாடுகளுடன் பேசி சீனாவின் ஜின்ஜியாங் பகுதி மனித உரிமை மீறலைக் கண்டித்து சீன அதிகாரிகளின் மீது பொருளாதாரத் தடையை அறிவிக்க செய்தார். அடுத்து ஜப்பான் தலைமை அமைச்சர் அமெரிக்கா சென்று சில்லுகளின் கூட்டமைப்பைக் கட்டுவது குறித்த பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். அதற்கு முன்பாக சீன அமைச்சர் அவருடன் 90 நிமிடங்கள் பேசி இருக்கிறார். சீன அதிபரும் ஜெர்மன் அதிபரும் சுதந்திரமான வெளியுறவு கொள்கையை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்தும் பேசி இருக்கிறார்கள்.

இந்தியா வந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்திய தலைமை அமைச்சரைச் சந்திக்காமல் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு பாகிஸ்தான் சென்றார். ரஷ்ய தடுப்பூசி தொடர்பாகவோ, அமெரிக்கா எதிர்த்து வரும் ரஷ்ய ஏவுகணை எதிர்ப்பு S-400 வாங்குவது தொடர்பாகவோ எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்குதல், இருதரப்பு ராணுவமும் ஒத்திகையில் ஈடுபடுவது, எரிவாயு குழாய் என இணைப்பை பலப்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டார். சீனாவின் எல்லையில் இருக்கும் மியான்மர் போராட்டம் கொழுந்துவிட்டு எரிகிறது. அங்கே சீன நிறுவனங்கள் குறிவைத்து தீயிட்டு எரிக்கப்படுகின்றன. ரஷ்ய எல்லையில் உள்ள யுக்ரைனில் மீண்டும் உள்நாட்டுப்போர் தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன. இதில் பாதிக்கப்படப் போகும் ரஷ்ய - ஜெர்மனி அதிபர்கள் கலந்துபேசி இருக்கிறார்கள்.

நோக்கம் என்ன?

இந்த இடைவிடாத உலக அரசியல் நடவடிக்கைகளின் சாரம் இனிவரப்போகும் புதிய மின்னணு பொருளாதார முறையை இப்போது இருக்கும் உலகப்பணமான டாலரில் முந்தைய உலகமயத்தைப் போல அமெரிக்காவின் தலைமையில் அவர்களின் அனுமதியுடனும் ஆமோதிப்புடனும் தொடர கோருகிறது. சீனா அதை ஏற்க மறுத்து தனது தகவல் தொழில்நுட்பப் பொருட்களுக்கான சந்தையையும் வர்த்தகப் பரிவர்த்தனையில் தனது நாணயத்துக்குமான பங்கையும் கோருகிறது. உலக நாடுகளின் நாணய கையிருப்பிலும் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்திலும் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் டாலரின் குறிப்பிட்ட பகுதியை சீனாவும் மற்ற நாடுகளும் எடுத்துக் கொள்ளும்போது இரண்டாம் உலகப்போருக்கு பிறகு வலுகுறைந்து மங்கி நிற்கும் இன்றைய இங்கிலாந்தின் நிலையை அமெரிக்கா அடையும்.

இந்த உடைப்பையும் வீழ்ச்சியையும் தடுக்க அமெரிக்கா உலகம் முழுவதும் செய்த வண்ணப் புரட்சி, பொருளாதாரத் தடை, உள்நாட்டு குழப்பங்கள் போன்ற சீர்குலைவு வேலைகளும் இராக், லிபியா, சிரிய போர்களும் எதிர்பார்த்த வெற்றியை வழங்கவில்லை அல்லது இந்தப் போக்கை மாற்றிவிடவில்லை. மாறாக சிரியா, வெனிசுலா, இரான், இராக் போன்ற நாடுகளை எதிர் அணியில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. சீனாவுடனான வர்த்தகப்போரும் தோல்வியில் முடிந்து இறுதியில் சில்லுகள் (Chips), அதனை உற்பத்தி செய்யும் கருவிகளை சீனா பெறுவதைத் தடை செய்யும் தொழில்நுட்பப் போரில் வந்து நிற்கிறது.

பலம் - பலவீனம் - சார்பு

‘எனக்கெதிராகப் போட்டி மின்னணு பொருளாதார முறையை முன்னெடுத்து வீழ்த்த நினைக்கும் உன்னை அந்த மின்னணு சாதனங்களை உருவாக்க தேவையான சில்லுகள் கிடைக்கவிடாமல் செய்வதன் மூலம் என்னை தாண்டி செல்லாமல் தடுத்து நிறுத்துவேன்’ என்கிறது அமெரிக்கா. அதை உற்பத்தி செய்ய தேவையான தொழில்நுட்பம், இயந்திரங்கள், சிலிக்கன் சீவல்கள் (Silicon Wafer) போன்றவற்றை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய நாடுகளே வைத்திருக்கின்றன. ஆகவே, அவர்களை தம் பக்கம் இழுக்க அமெரிக்கா முயன்று வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு, குறிப்பாக அங்கே ஆதிக்கம் செலுத்தும் ஜெர்மானிய நிறுவனங்களுக்கு சீனா தமது சந்தையைக் குறிப்பிட்ட அளவு கொடுத்து இந்த இணைவைத் தடுக்க முயன்று வருகிறது. சீன சந்தையின்றி ஜப்பான் இயங்க முடியாத சூழலையும் சீனா பயன்படுத்த நினைக்கிறது.

அதே நேரம் அமெரிக்கா எனும் இந்த உலகப் பேரரசை, உடைக்க முடியாத கோட்டையை பெட்ரோடாலர் எனும் செங்கல் கொண்டுதான் கட்டி எழுப்பி இருக்கிறார்கள். அந்த உலகப்பணத்தைக் கொண்டுதான் இந்தப் பேரரசு இப்போது உயிர் வாழ்ந்து வருகிறது. ‘அந்த டாலரையும் அதை தாங்கி நிற்கும் டாலரில் நடைபெறும் எண்ணெய், எரிவாயு வர்த்தகத்தையும் எனது நாணயத்தில் செய்து கொண்டு உன் கோட்டையை தகர்ப்பேன்’ என்கிறது சீனா. அதற்காக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய்வள மிக்க மத்திய கிழக்காசிய நாடுகளை தனது உலகின் மிகப்பெரிய எண்ணெய் சந்தையைக் காட்டி இழுக்க முயற்சி செய்து வருகிறது. அதேபோல தனது பொருளாதார சந்தை வலிமையைப் பயன்படுத்தி தெற்காசிய நாடுகளையும் தன்பக்கம் ஈர்த்து வருகிறது. மிகப்பெரிய அளவில் எண்ணெய், எரிவாயு வைத்திருக்கும் ரஷ்யாவை தன்னுடன் இணைத்துக்கொண்டு அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய ஆசியா மற்றும் அதன் அருகில் உள்ள ஐரோப்பிய நாடுகளை இணைத்து புவிசார் அரசியலின் இதயமாக விளங்கும் யூரேசிய சந்தையை சீனா தனதாக்கி வருகிறது. அமெரிக்காவின் இதற்கு எதிரான பூகோள அரசியல் ஆங்காங்கே அரசியல் குழப்பங்களாக வெளிப்படுகிறது.

மேலும் அமெரிக்க பொருளாதாரத்தின் முக்கிய ஆணிவேராக இருப்பது விமான உற்பத்தி, ராணுவ தளவாட உற்பத்தி. அதை உற்பத்தி செய்ய தேவையான அருமண் உலோகங்களின் (Rare Earth Metals) 80 விழுக்காடு உற்பத்தி சீனாவிடம்தான் இருக்கிறது. அதன் ஏற்றுமதிக்குத் தடை விதித்து உன்னை வழிக்குக் கொண்டு வருவேன் என்றும் மிரட்டுகிறது சீனா. இந்த பூகோள அரசியல் நடவடிக்கைகள் தவிர்த்து இருவருமே இந்த சார்புநிலையை உடைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளுடன் கூட்டு சேர்ந்து அருமண் (Rare Earth Metals) உலோக உற்பத்திக்கான முயற்சியை அமெரிக்கா செய்து வருகிறது.

சீனா 2025க்குள் இந்தத் தொழில்நுட்பத்தில் தற்சார்பு அடைய இலக்கு வைத்து முன்னேறி வருகிறது. இவற்றில் பல முன்னேற்றங்களை சீனா அடைந்திருந்தாலும் அவற்றைச் செயல்படுத்தி தற்சார்பு பெற இன்னும் 5-10 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். இப்படி ஒருவரின் கழுத்தை மற்றொருவர் நெரித்துக்கொண்டு யார் முதலில் மூச்சு முட்டி தரையைத் தட்டி தோல்வியை ஒப்புக்கொள்ள போகிறார்கள் என்ற நிலையை இந்த உலக அரசியல் அடைந்திருக்கிறது.

தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

<பகுதி 1 > / < பகுதி 2 > / < பகுதி 3 >

ஆய்வின் தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

.

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

வெள்ளி 30 ஏப் 2021