மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 ஏப் 2021

“நான் வாழ்ந்துவிட்டேன்...” ஆக்ஸிஜனை விட்டுக் கொடுத்து மரணம் எய்திய முதியவர்!

“நான் வாழ்ந்துவிட்டேன்...”  ஆக்ஸிஜனை  விட்டுக் கொடுத்து மரணம் எய்திய முதியவர்!

கொரோனா முதல் அலையாக இருந்தாலும் சரி, இரண்டாம் அலையாக இருந்தாலும் பல்வேறு கொடுமைகளையும், எரிகிற வீட்டில் பிடுங்கும் வர்த்தக வெறிகளையும் பார்த்துப் பார்த்து சலித்துவிட்டோம்.

ஆனால், மனிதம் மரித்துவிடுமோ என்று மனசு மரத்துப் போகும் நிலையில், அவ்வப்போது ஒரு நம்பிக்கை தீபம் ஆங்காங்கே சுடர் விடுகிறது. சுடர்கள் எண்ணிக்கையில் சிறிதாக இருந்தாலும் அடுத்த தலைமுறைக்கும் சேவையையும், நேயத்தையும் கொண்டு செல்லும் ஆற்றல் அதிகமானவையாக உள்ளன.

மகாராஷ்டிர மாநிலம் கொரோனாவால் குதறப்பட்டு வருகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை என்று தள்ளாடுகிறது மகாராஷ்டிரா.

நாக்பூர் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் நாராயண தபால்கர் என்ற 85வயது முதியவர் கொரோனா காரணமாக கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அட்மிட் செய்யப்பட்டார். கொரோனாவும் முதுமையும் சேர்ந்துகொண்டதால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. அவருடைய ஆக்ஸிஜன் அளவு குறைந்துகொண்டே சென்றது. அவர் அட்மிட் ஆன நேரத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்ததால், உடனடியாக அவருக்கு பெட் வசதியும் ஆக்ஸிஜனும் அளிக்கப்பட்டது.

ஆக்ஸிஜனை இழுத்துக்கொண்டு அந்த முதியவர் படுத்திருந்தபோது, பக்கத்தில் ஒரு இளம்பெண் பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தாள். இந்த முதியவர் திரும்பிப் பார்க்கிறார். தன் மகள் வயதை விட குறைவான வயதே இருக்கும் அப்பெண்ணுக்கு.

ஏன் அழுகிறாள் என்று கேட்கிறார். அந்தப் பெண்ணின் கணவருக்கு 40 வயதாகிறது. அவரும் கொரோனாவால் அதே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். அவர் வரும் நேரம் பார்த்து மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகிவிட்டது. படுக்கையும் இல்லை. ‘இனிமேல் யாருக்கும் பெட், ஆக்ஸிஜன் இல்லை. இனி வந்தால்தான்’ என்று சொல்லிவிட்டார்கள் டாக்டர்கள். அந்த 40 வயதுக்காரர் மூச்சுத் திணறிக் கொண்டிருக்க, அவரது மனைவி மட்டுமல்ல குழந்தைகளும் வெளியே கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

தனது படுக்கையில் படுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை அனுபவித்து வந்த அந்த முதியவர் தபால்கர் இலேசாகத் திரும்பிப் பார்க்கிறார். அவரது கண்களில் அந்த இளம் தாயும் குழந்தைகளும் கதறுவது தெரிகிறது. சட்டெனெ தனக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்களை அழைக்கிறார்.

“டாக்டர்... எனக்கு இப்போது கொடுத்திருக்கும் பெட்டையும், ஆக்ஸிஜனையும் அந்த யங் மேனுக்கு கொடுங்களேன். எனக்கு 85 வயசாயிடுச்சு. நான் மகாராஷ்டிர புள்ளியியல் டிபார்ட்மென்ட்ல வேலை பார்த்து ரிடையர்டு ஆயிட்டேன். நல்லா வாழ்ந்துட்டேன். இனிமேல் எனக்கு வாழ வேண்டிய ஆசையும் இல்ல, தேவையும் இல்லை. என்னை டிஸ்சார்ஜ் பண்ணிட்டு, எனக்குக்கொடுக்குற ஆக்ஸிஜனை அவருக்குக் கொடுங்களேன். ப்ளீஸ்” என்று டாக்டர்களிடம் வேண்டுகோள் வைக்கிறார்.

டாக்டர்கள் அதிர்ந்து போகிறார்கள். ‘ஐயா... அதுமாதிரி நாங்க பண்ணக் கூடாது. சிகிச்சை கொடுத்துக் கிட்டிருக்கும்போது ஒரு பேஷன்கிட்டேர்ந்து ஆக்ஸிஜனை ரிமூவ் பண்ண எங்க எத்திக்ஸ் அனுமதிக்காது. சாரி’ என்கிறார்கள்.

ஆனால் முதியவர் தபால்கரோ, “ப்ளீஸ் நான் சொல்றதைப் புரிஞ்சுக்கங்க. எனக்கு கிடைக்கிற ஆக்ஸிஜன் அவருக்கு கிடைச்சா ஒரு குடும்பமே பிழைச்சுக்கும்”என்று மீண்டும் போராடி அதன்படியே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றார். அந்த படுக்கையும், ஆக்ஸிஜனும் 40 வயதுக் காரருக்கு கொடுக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வீட்டுக்குச் சென்ற முதியவர் தபால்கர் அடுத்த மூன்று நாட்களில் தன் வீட்டில் இருந்தபடியே காலமானார். இந்தத் தகவல் நாக்பூர் அரசு மருத்துவமனையேயே உருக்கத்தில் ஆழ்த்தியது.

தன் ஆக்ஸிஜனை தன்னில் பாதிவயதுடையவருக்காக விட்டுக்கொடுத்த தபால்கரின் மகள் ஆசாவரி, “என் அப்பா தன் கடைசி நிமிடங்களை குடும்பத்தோடு செலவிட விரும்பியிருக்கிறார். மேலும் அந்த இள வயதுடைய கொரோனா நோயாளி குறித்து மிகவும் வருந்தியிருக்கிறார். அதனால்தான் தனது பெட்டை அந்த இளைஞருக்குக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். பேச முடியாத நிலையிலும் அந்த இளைஞரைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். திருப்தியோடுதான் அவர் மரணம் அடைந்திருக்கிறார்”என்கிறார் நெகிழ்ச்சியாக.

இளைஞருக்காக ஆக்ஸிஜனையும் படுக்கையையும் விட்டுக் கொடுத்த நாராயண் தபால்கர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்து மத தர்மப்படி நம்மைச் சுற்றி பாவம் சூழ்ந்திருக்கிறது. இதுபற்றி மத மறுமலர்ச்சி அறிஞரான அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் தனது இந்துமதம் எங்கே போகிறது புத்தகத்தில்,

“நாம் ஒரு பதார்த்ததை வாங்கி சாப்பிடுகிறோம் என்றால்… அந்த பதார்த்தம் வேறு எவனோ வாங்கி சாப்பிட வேண்டியது. அதை அவனுக்கு கிடைக்காமல் நாம் சாப்பிட்டு விட்டோம். அதனால் அதுவும் பாவம்தான். நாம் இப்போது சுவாசித்துக் கொண்டிருக்கிற காற்று… வேறு யாருக்கோ கிடைக்க வேண்டியது. அதை நாம் சுவாசித்து விட்டோம். அதனால் அதுவும் பாவம்தான்.

இந்த லோகத்தில்.. நீங்கள் பஸ் பிரயாணம் மேற்கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உட்கார இடம் கிடைத்து உட்கார்ந்து பயணம் செய்கிறீர்கள்.

இது ஒருவகை பாவம்தான். பக்கத்தில் பலபேர் நின்று கொண்டிருக்கும்போது நீங்கள் உட்கார்ந்திருப்பது பாவம்தானே. நின்று கொண்டே வந்தாலும் அதுவும் பாவம்தான். ஏனென்றால் நீங்கள் இன்னொருவர் நிற்க இருந்த இடத்தில்தானே நிற்கிறீர்கள்?

இப்படி பாவம் பலவகைப்படும். நம்மை சுற்றி பாவசக்தி வாழ்ந்து கொண்டிருக்கிறது”என்கிறார்.

நாம் இப்போது சுவாசித்துக் கொண்டிருக்கிற காற்று வேறு யாருக்கோ கிடைக்க வேண்டியது என்பதை உணர்ந்துதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த நாராயண் தபால்கர் தனது ஆக்ஸிஜனை அந்த 40 வயது இளைஞருக்குக் கொடுத்துச் சென்றிருக்கிறார்.

மனிதம் நிரம்பி வழியும் இப்படிப்பட்ட சில காட்சிகள் நம் விழித்திரைக்கு எதிரே விரிந்துகொண்டுதான் இருக்கின்றன.

-ராகவேந்திரா ஆரா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

வியாழன் 29 ஏப் 2021