�அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு கனிமொழி அனுப்பப்பட்டது ஏன்?- திமுகவுக்குள் ஆக்ஸிஜன் அரசியல்!

politics

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்த விவகாரத்தில், அரசியல் சர்ச்சைகளும் உற்பத்தியாகத் தொடங்கியிருக்கின்றன.

திமுகவுக்குள்ளும், திமுக கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும், திமுகவைத் தாண்டியும் இந்த சர்ச்சைகள் உற்பத்தியாகின்றன.

ஏப்ரல் 26 ஆம் தேதி திங்கள் கிழமை காலை ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்தக் கூட்டத்தில் மகளிரணிச் செயலாளர் கனிமொழியும், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் கலந்துகொண்டனர். அடுத்து ஆட்சிக்குக் வரக் கூடிய கட்சி என்ற பிம்பம் திமுக மீது கட்டமைக்கப்பட்டிருப்பதாலும், ஏற்கனவே அதிமுகவின் நிலைப்பாட்டை அறிந்திருப்பதாலும் இந்த விவகாரத்தில் முக்கியமான கட்சியான திமுகவின் கருத்து என்ன என்பதை அறிய தூத்துக்குடி மக்களும், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டக் காரர்களும் அறிய ஆவலாக இருந்தனர்.

இந்தப் பின்னணியில்தான் திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்பி, “ ஏப்ரல் 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில் கூட, தூத்துக்குடி மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்கள். அவர்களின் எதிர்ப்பையும் நாம் உதாசீனப்படுத்திட முடியாது.

அதேசமயம் தூத்துக்குடி மக்கள் மனிதநேயத்தின் மறுபக்கமாக திகழுபவர்கள் என்பது எனக்குத் தெரியும். அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் – ஒருவருக்கு ஆபத்து என்றால் உடனே ஓடிச் சென்று உதவிட இதயம் கொண்டவர்கள் அந்த மக்கள்.

நாடு முழுவதும் – ஏன், தமிழ்நாட்டிலேயே கூட ஆக்சிஜன் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில்- ஸ்டெர்லைட் ஆக்சிஜன் பிளாண்ட்டை மட்டும் இயக்கி – மக்களைக் காத்திட ஆக்சிஜன் தயாரிப்பது குறித்து, மனிதநேயத்தின் அடிப்படையில் நாம் எடுக்க வேண்டிய முடிவுதானே தவிர – ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு அல்லஎன்று பேசினார்.

கனிமொழியின் இந்தப் பேச்சு தூத்துக்குடியில் கடுமையான எதிர்வினைகளைக் கிளப்பியிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யலாம் என்ற தனது நிலைப்பாட்டுக்கு திமுக எவ்வளவு காரணங்களைக் கூறினாலும் தூத்துக்குடியில் அது ஒரே வகையில்தான் பார்க்கப்படுகிறது. அது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க திமுக தயாராகிவிட்டது என்பதுதான்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டதுமே, தூத்துக்குடி மக்களும், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டப் பிரமுகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட பலரும் அண்மையில் திமுகவில் சேர்ந்திருந்தனர். அவர்களுக்கு இது கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

அதையெல்லாம் விட திமுகவின் தூத்துக்குடி வேட்பாளராக களமிறங்கிய கீதாஜீவன், “ஸ்டெர்லைட்டை விரட்டுவோம் சொல்லித்தான் மக்கள்கிட்ட ஓட்டுப் கேட்டோம். இனி நன்றி சொல்லக் கூட போக முடியாது போலிருக்கே” என்று தனக்கு நெருக்கமான கட்சிப் பிரமுகர்களிடமே புலம்பியுள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுகவின் நிலைப்பாட்டுக்கு எதிராக 26 ஆம் தேதியே கனிமொழியின் கொடும்பாவியை எரிக்கவும் ஒரு சிலர் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் போலீஸாரின் கடுமையான கண்காணிப்பு காரணமாக அது தவிர்க்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி திமுகவில் இருக்கும் கனிமொழி ஆதரவாளர்கள் இதை வேறு விதமாகப் பார்க்கிறார்கள்.

“கனிமொழிக்கு கட்சியில் ப்ரமோஷன் கிடைக்கும் என்ற செய்திகள் பரவி வரும் நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குத் திட்டமிட்டே கனிமொழி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தொனிப்பது போன்ற ஒரு கருத்தை கனிமொழி வாயாலேயே பேச வைப்பதன் மூலம் அவர் சமீப நாட்களாக தென் மாவட்டங்களில் சேர்த்து வந்த செல்வாக்கை சரிக்கலாம் என்ற திட்டத்தின் கீழ் கனிமொழி இந்தக் கூட்டத்துக்கு அனுப்பப்பட்டிருப்பாரோ என்று எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கனிமொழி கலந்துகொண்டிருப்பதைத் தவிர்த்திருந்தால் அவரை தனிப்பட்ட முறையில் இலக்கு வைக்கப்படும் விமர்சனங்களில் இருந்து அவர் தப்பியிருக்கலாம். ஆனால் தலைமை உத்தரவை அவரால் தட்டிக் கழிக்க முடியாது. கனிமொழிக்கு எதிராக கட்சிக்குள் பின்னப்படும் வலையின் ஒரு பகுதி இது” என்கிறார்கள்.

தூத்துக்குடியில் திமுகவுக்கு எதிராக இவ்வளவு எதிர்வினைகள் நடந்து வருகிறது என்பது அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்குத் தெரிவிக்கப்பட, அதன் விளைவாகத்தான் ஆக்ஸிஜன் பங்கீடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,

“திமுக அரசு அமைந்ததும் ஸ்டெர்லைட் மீண்டும் சீல் வைக்கப்படும்” என்பதை உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் திமுக மீதான விமர்சனங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *