மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

நாமே தீர்வு என நம்பிக்கையோடு போராடினால், நாளை நமதாகும்-கமலஹாசன்

நாமே தீர்வு என நம்பிக்கையோடு போராடினால், நாளை நமதாகும்-கமலஹாசன்

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அரசின் செயல்பாடு, இக்கட்டான இன்றைய சூழ்நிலையில் பொதுமக்கள், மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உயிரே உறவே தமிழே,

நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். கொரோனா பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இந்தத் தீநுண்மத்தால் கடந்த ஆண்டிலிருந்தே நமது வாழ்வு எதிர்பாராத வகையில் மாறிப் போய்விட்டது. நோய்க் கிருமியிடம் இருந்து தப்பித்து வாழ்வதற்கான வழிமுறைகளை நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எந்தத் தயக்கமும் அச்சமும் காட்டாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். சுற்றத்தாரை தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்துங்கள். நான் இரண்டு தவணைகளை முடித்துவிட்டேன். எனக்கு அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

1.பொதுவெளி நடமாட்டத்தை முடிந்த மட்டும் குறைத்துக்கொள்ளுங்கள்.

2.அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வரும் பொறுப்பை வீட்டில் இருக்கும் இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

3.தவிர்க்கமுடியாமல், வெளியில் செல்ல நேர்ந்தால் தரமான முகக்கவசம் தவறாது அணிய வேண்டும். தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முடிந்தவரை கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் இடங்களுக்குச் செல்லாமல் இருப்பது ஆகியவற்றை நிச்சயம் பின்பற்ற வேண்டும்.

5.எப்போது வெளியே சென்று வந்தாலும் உடனடியாகக் குளித்து ஆடைகளை மாற்றிக்கொள்வது அவசியம்.

6.கைகளை சோப்பினால் அல்லது சானிட்டைஸரினால் அடிக்கடி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

7.அடிக்கடி நமது பாரம்பர்ய முறைப்படி நீராவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சி, உடற் பயிற்சி, யோகா ஆகியவற்றை மேற்கொள்வது அவசியம்.

8.ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு மாறிக்கொள்வதுடன், மரபுசார் மருத்துவர்கள் பரிந்துரைப்பது போல அன்றாடம் ஒரு ரசம் வைத்து சாப்பிடுவதும் நல்லது.

9.இரண்டாவது அலை குழந்தைகளையும் அதிக அளவில் பாதிக்கிறது. வீட்டில் குழந்தைகள், முதியோர் இருந்தால், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.

10.உறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள். வதந்திகளை நம்பாதீர், பரப்பாதீர்.

11.மனநிலையை ஆரோக்கியமாக பாஸிட்டிவாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அதற்கு நல்ல புத்தகங்களை வாசிப்பது, இசை கேட்பது, நண்பர்களோடு போனில் அல்லது இணையத்தில் உரையாடுவது போன்றவை உதவக் கூடும்.

12.உங்களையே நம்பி இருக்கும் பணியாளர்கள், சிறு வணிகர்கள், சிறுசிறு சேவைகளை நல்குபவர்களைக் கைவிடாதீர்கள். உலகமே ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்க வேண்டிய தருணம் இது. முடிந்த மட்டும் பிறருக்கு உதவுங்கள்.

13.கொரோனா தொற்று பெரு நகர்ப்புறங்களில் அதிகமாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் மக்கள்தொகைப் பெருக்கமும், நெருக்கடியும்தான். சமவாய்ப்புள்ள நகரங்கள், தற்சாற்பு கிராமங்கள்தான் உலகமே செல்ல வேண்டிய திசை. உங்கள் தொழிலை, சேவையை, வேலைகளை உங்கள் சொந்த ஊரில் இருந்தே செய்ய முடியும் என்றால் அதற்கான முயற்சிகளை இன்றே மேற்கொள்ளுங்கள்.

14.அரசுகளால் ஓர் எல்லைக்கு மேல் நம்மைக் காக்க முடியாது என்பதே இன்றைய புள்ளிவிபரங்கள் காட்டும் நிதர்சனம். மருத்துவக் கட்டமைப்பிற்கு மேலும் மேலும் சுமையை கூட்டக் கூடாது. உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள்.

15.இறுதியாக மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கு, “உத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை,உதிரத்தில் உண்டே உதவும் குணம்” என்று உங்களைப் பற்றி நான் பெருமையாகக் குறிப்பிடுவதுண்டு. ஊரே முடங்கிக் கிடந்தபோது “நாமே தீர்வு” என முதன்முதலில் களத்தில் இறங்கியவர்கள் நாம். நமது நற்பணிகளை தொய்வில்லாமல் தொடர்வோம்.

16.அருகிலிருக்கும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்புகளுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறதென்பதை விசாரித்து உடனுக்குடன் உதவுங்கள். கொரோனா பெருந்தொற்று குறித்தும், தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.நோய்த்தொற்றிலிருந்து மக்களைக் காக்க யார் என்ன முயற்சி செய்தாலும் எந்தத் தயக்கமும் இன்றி அவர்களோடு கரம் கோர்த்து பணியாற்றுங்கள்.

பூமியின் ஒவ்வொரு மானுடரும் ஒருங்கிணைந்து ஒத்திசைந்து ஒரே நோக்கத்துடன் தன்னலமின்றி செயல்பட்டால்தான் இந்தத் தீநுண்மத்தை வீழ்த்த முடியும். மானுடம் அதை நிச்சயம் செய்யும். நம் வசந்த காலங்கள் நிச்சயம் திரும்ப வரும். நம்பிக்கையுடன் போராடுவோம். நாளை நமதே! எனக் குறிப்பிட்டுள்ளார்.

-ராமானுஜம்

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

புதன் 28 ஏப் 2021