மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 ஏப் 2021

‘ஆண் தேவதை’ இயக்குநரின் உயிரை பறித்த கொரோனா!

‘ஆண் தேவதை’ இயக்குநரின் உயிரை பறித்த கொரோனா!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் தாமிரா இன்று காலை உயிரிழந்தார்.

கொரோனா இரண்டாவது அலைக்கு முக்கிய திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலியாகி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தாமிரா என்கிற சேக்தாவூத்(53) மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரிடம் இயக்குநராக பணியாற்றியவர். கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ”ரெட்டை சுழி” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே இயக்குநர்கள் பாலசந்தரையும் பாரதிராஜாவையும் சேர்த்து நடிக்க வைத்து தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த கவனத்தையும் பெற்றார்.

பின்பு, இயக்குநர் சமுத்திரகனியுடன் பாலசந்தர் குருகுலத்தில் இணைந்து பணியாற்றியவர் என்பதால், சமுத்திரகனி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிப்பில் “ஆண் தேவதை” என்ற படத்தை இயக்கினார். இந்தப்படம் 2018ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து, சில தொலைக்காட்சி தொடர்களை இயக்கி வந்தார்.

மூன்றாவது படத்தை ஜெமினி நிறுவனத்துக்காக இயக்க கதை தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோதுதான் இயக்குநர் தாமிரா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். சென்னை அசோக்பில்லரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த தகவலை அவரது செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை பூர்வீகமாக கொண்ட தாமிராவுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். முகநூல் பக்கத்தில் சுவாரசியமான பதிவுகளை பதிவிட்டு வந்த தாமிரா மருத்துவமனையில் இருந்த நிலையில் கடைசியாக ஏப்ரல் 11 அன்று "இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை. என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கின்றேன். இனி யாரோடும் பகை முரண் இல்லை யாவரும் கேளிர்" என பதிவிட்ட தாமிரா மீண்டு வராமல் காற்றோடு கரைந்து போனது திரையுலகினர் மத்தியில் கனத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் மறைவு செய்தியை கேட்ட திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் சேரன் தனது ட்விட்டரில்,” நண்பர் தாமிரா. இரட்டைச்சுழி, ஆண்தேவதை படத்தின் இயக்குனர். கொரோனா பாதிப்பின் காரணமாக பிரிந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆன்மா அமைதி கொள்ளவேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்கள்” என பதிவிட்டுள்ளார்.

”என்னது தாமிரா இறந்துவிட்டாரா…. நான் நம்பமாட்டேன்” என நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.

வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

செவ்வாய் 27 ஏப் 2021