மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஏப் 2021

கொரோனா கட்டுப்பாடு: தமிழகத்தை பாராட்டிய நீதிமன்றம்!

கொரோனா கட்டுப்பாடு: தமிழகத்தை பாராட்டிய நீதிமன்றம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் நிலை பரவாயில்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பினால் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதால், வாசல்களில் சிகிச்சை எடுப்பது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள், மயானங்களில் டோக்கன் முறை என வடமாநிலங்களில் நடக்கும் சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், பல்வேறு மாநிலங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் இதுபோன்ற நிலை வராமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில்,”கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை ஏழை எளிய மக்களால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அரசுத் தரப்பில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இதுவரை தொடங்கவில்லை.

போர்க்கால அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை போட ஏற்பாடு செய்யவும், தனியார் மருத்துவமனையில் போடப்படும் கொரோனா தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்தும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(ஏப்ரல் 26) நீதிபதி சிவஞானம், ஆனந்தி அமர்வு விசாரித்தது. அப்போது, 60 வயது, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு பல கட்டங்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது எனதமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தனியார் மருத்துவமனையில் செலுத்தும் கொரோனா தடுப்பூசிக்கான விலையை நிர்ணயம் செய்ய உத்தரவிட்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழக அரசின் நடவடிக்கை பரவாயில்லை, என பாராட்டிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

வினிதா

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

திங்கள் 26 ஏப் 2021