மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஏப் 2021

மே 1, 2ல் ஊரடங்கு அமல்படுத்த பரிந்துரை!

மே 1, 2ல் ஊரடங்கு அமல்படுத்த பரிந்துரை!

மே மாதம் முதல் இரண்டு நாட்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவது குறித்து வெளியான செய்தி மற்றும் ரெம்டிசிவிர் பற்றாக்குறை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது நடந்த விசாரணையில், தமிழகத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது, தடுப்பு மருந்து பற்றாக்குறை இல்லை என தமிழக அரசு தெரிவித்தது. இருப்பினும், அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று(ஏப்ரல் 26) மீண்டும் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துக்கும் பற்றாக்குறை இல்லை என தெரிவித்தார். சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

”வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவது குறித்து தமிழக அரசுடன் ஆலோசனை நடத்திதான் நடவடிக்கை எடுத்தோம். தற்போது முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அதுகுறித்து பரீசிலனை செய்யவுள்ளோம்” என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து ஆகியவை அதிகவிலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகத்தில் மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த பரிந்துரை செய்த நீதிபதிகள், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால், அதற்கு முந்தைய நாட்களில் அரசியல் கட்சியினர்,மக்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. மக்கள் அதிகளவில் கூடினால், மீண்டும் கொரோனா தொற்று அதிகளவில் பரவுவதற்கு வழிவகுக்கும். அதனை தடுக்கும் நோக்கில் அன்றைய தினங்களில் ஊரடங்கு அமல்படுத்த நீதிமன்றம் பரிந்துரை செய்கிறதே தவிர, இதில் அரசியல் பின்புலம் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.

மேலும், ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடலாம். வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும், இதில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது. வாக்கு எண்ணிக்கை தொடர்புடைய வாகனங்களை மட்டும் அந்த 2 நாட்களில் அனுமதிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஊரடங்கு விதிக்கப்படுமா, இல்லையா என்பது ஏப்ரல் 28ஆம் தேதி தெரியவரும்.

வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

திங்கள் 26 ஏப் 2021