மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஏப் 2021

சசிகலாவை மிரட்டி அரசியலில் இருந்து விலகவைத்த டெல்லி - அம்பலமான அமலாக்கத்துறை ரகசியம்!

சசிகலாவை மிரட்டி அரசியலில் இருந்து விலகவைத்த டெல்லி -  அம்பலமான அமலாக்கத்துறை ரகசியம்!

பெங்களூரு சிறையில் இருந்தும், கொரோனாவில் இருந்தும் விடுதலையாகி சென்னைக்கு வரும் வழியில், “நான் தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறேன்” என்று அறிவித்தார் சசிகலா. ஆனால் கடந்த மார்ச் 3ஆம் தேதி இரவு, திடீரென, ஒரு வெள்ளை பேப்பரில் வெளியிட்ட அறிக்கையில், “அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப் போகிறேன்” என்று தெரிவித்தார்.

இது அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போதே மார்ச் 4ஆம் தேதி மின்னம்பலம் இணைய இதழில், பினாமி சட்டம்: மிரட்டலுக்குப் பணிந்தாரா சசிகலா? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கியதற்கான முக்கிய காரணம் மத்திய அரசின் அமலாக்கத்துறை மிரட்டல்தான் என்றும், அதற்குப் பணிந்தே சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கியதாகவும், சசிகலாவின் இந்த முடிவையடுத்து அவருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை அவர் முகவரிக்குச் செல்ல விடாமல் அமலாக்கத்துறை அதிகாரிகளே தடுத்து நிறுத்தியதாகவும் இப்போது முக்கியமான தகவல் கிடைத்திருக்கிறது.

இதைக் கொஞ்சம் ஃபிளாஷ்பேக்கோடு விரிவாகப் பார்ப்போம்.

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சென்னையிலுள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. சுமார் இரண்டு மணி நேரம் நடத்திய இந்த ஆலோசனைக்குப் பின், பின்னிரவில் டெல்லி புறப்பட்டுச் சென்றார் அமித் ஷா.

அந்தச் சந்திப்பின்போது, ‘சசிகலாவால் தென்மாவட்டத்தில் அதிமுகவுக்கு அதிக பாதிப்பு வரும், எனது வெற்றி வாய்ப்பேகூட பாதிக்கப்படலாம்’ என்று ஓ.பன்னீர் பேசியதாகவும் அப்போதே தகவல்கள் வந்தன. அமமுகவைக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று ஒரு கருத்தும், சசிகலாவை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒரு கருத்தும் அமித் ஷாவிடம் அப்போதே வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த ஆலோசனையை முடித்துக்கொண்டு அமித் ஷா டெல்லி சென்ற பிறகு... ஓரிரு நாட்கள் கழித்து அதாவது மார்ச் 3ஆம் தேதி காலை டெல்லியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் சசிகலாவிடம் தமிழிலேயே போனில் பேசுகிறார்.

‘உங்க மேல பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உத்தரவு வந்திருக்கு. நீங்க ஜெயில்ல இருக்கும்போது உங்களுக்கு சம்பந்தப்பட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகள் மூலமா, 58,000 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்துகளை நீங்க பினாமி மூலமா வச்சிருக்கிற எல்லா தகவல்களும் எங்ககிட்ட இருக்கு. உங்க மேல உடனடியா நடவடிக்கை எடுக்க சொல்லி எங்களுக்கு உத்தரவு வந்திருக்கு’ என்று சொன்னதும் சசிகலா, ‘இதைப் பத்திதான் நான் கோர்ட்லயே சொல்லியிருக்கேனே. அதெல்லாம் எனக்கு சொந்தமானது இல்லை...’ என்று கொஞ்சம் ஃபோர்சாகவே பேசியிருக்கிறார்.

அப்போது தமிழ் தெரிந்த அதிகாரி மீண்டும், “ரொம்ப துல்லியமா உங்களப் பத்தின எல்லா ஆதாரங்களையும் எடுத்துட்டாங்க. இப்ப ஒரே ஒரு வழி உங்களுக்கு இருக்கு. அரசியல்லேர்ந்து விலகி அமைதியா இருங்க. அதை நீங்க செஞ்சீங்கன்னா இந்த ஆக்‌ஷனை அப்படியே நிறுத்தி வச்சிடுவாங்க. அதைப் பத்திதான் உங்ககிட்ட சொல்லச் சொல்லியிருக்காங்க” என்று விஷயத்தை உடைத்திருக்கிறார்.

“என்னை மிரட்டுறீங்களா? நான் ஜெயிலெல்லாம் பார்த்துட்டு வந்துட்டேன்” என்று அந்த அதிகாரியிடம் சத்தம் போட்டுவிட்டு போனை வைத்து விட்டார்.

உடனடியாக தனக்கு நெருக்கமான சட்ட நிபுணர்களோடு இதுபற்றி ஆலோசனை நடத்தியிருக்கிறார் சசிகலா. “அமலாக்கத்துறை விசாரணைன்னு கூட்டிச் சென்றாலே அது கைதுன்னு ஆகிடும். உடனடியா அவங்க எந்த முடிவுக்கும் போவாங்க. நாம கோர்ட்ல மூவ் பண்ணாகூட அமலாக்கத்துறை உங்க விடுதலையை ரொம்ப இழுத்தடிப்பாங்க” என்று அவர்கள் சசிகலாவிடம் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். மீண்டும் சிறையா அல்லது அரசியலை விட்டு ஒதுங்கிவிடலாமா என்று மார்ச் 3ஆம் தேதி காலை முதல் சசிகலா பதற்றமாக ஆலோசனை நடத்திய அதேநேரம்...

டெல்லியில் இருந்து சசிகலாவுடன் பேசிய அந்த அதிகாரி, ‘நம்ம டீலுக்கு சசிகலா சரிப்பட்டு வரவில்லை’ என்று மேலிடத்துக்கு தகவல் அனுப்பிவிட்டார். உடனே சசிகலாவுக்கு அமலாக்கத்துறை சார்பில் உடனடியாக நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டது. அன்றே அமலாக்கத்துறை ரிஜிஸ்டர் போஸ்ட் வழியாக சசிகலாவுக்கு அனுப்பப்பட்டு விட்டது.

அமலாக்கத்துறையில் இப்படி ஒரு மூவ் நடந்துவிட்ட நிலையில்தான், சசிகலா மார்ச் 3ஆம் தேதி இரவு 9.45 மணியளவில் திடீரென அந்த அறிக்கையை வெளியிட்டார்.

“நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவியின் எண்ணத்துக்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் புரட்சித் தலைவர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

நம்முடைய பொது எதிரி தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலைபெற அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

நான் என்றும் பதவிக்காகவும் பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டதில்லை. புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சியை அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவி இடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்” என்று அந்த அறிக்கையில் சசிகலா தெரிவித்திருந்தார்,

சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கிய செய்தி உடனடியாக இந்தியா முழுதும் எதிரொலித்தது. டெல்லியில் இருந்து தன்னிடம் தமிழில் உரையாடிய அந்த அதிகாரியிடம் அப்போது சசிகலா கோபித்துக்கொண்டாலும், பிற்பாடு ஆலோசனை நடத்தி அரசியலை விட்டு ஒதுங்கும் முடிவை அறிவித்துவிட்டார்.

தகவலைத் தெரிந்துகொண்ட டெல்லி சசிகலாவிடம் தான் போட்ட டீலை புதுப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டது. அதாவது மார்ச் 3ஆம் தேதி புதன் கிழமையன்று சசிகலாவுக்கு அமலாக்கத்துறை சார்பில் பதிவுத் தபாலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால் மார்ச் 3ஆம் தேதி இரவே சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துவிட்டதால், சசிகலாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை அவரது முகவரிக்கு சென்றுவிடாமல் தடுக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

அதையடுத்து, மார்ச் 3ஆம் தேதி அனுப்பப்பட்ட நோட்டீஸை தேடி சென்னை அண்ணாசாலை தலைமை தபால் அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார்கள் அமலாக்கத்துறை ஊழியர்கள். அந்த நோட்டீஸ் செயின்ட் தாமஸ் மவுண்ட் தபால் அலுவலகத்தில் இருப்பதாக தகவல் வர அங்கே சென்று சசிகலாவுக்குச் சென்றுகொண்டிருந்த நோட்டீஸைக் கைப்பற்றிவிட்டனர். எனவேதான் அமலாக்கத்துறை நோட்டீஸ் சசிகலாவை அடையவே இல்லை.

அரசியலை விட்டு விலகுவதாக அவர் அறிவித்தததால்தான் இவ்வளவு வேகமாக செயல்பட்டு நோட்டீசை தடுத்து நிறுத்தியிருக்கிறது அமலாக்கத்துறை.

மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில் மம்தாவின் திருணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியமானவர்கள் பாஜகவில் சேர்ந்தார்கள். இதற்குக் காரணமே சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகளின் அதிகாரிகள் அங்கே சென்று மம்தாவை ஆதரிப்பவர்கள் மீதான சட்ட சிக்கல்களை கையிலெடுத்து, அதை வைத்தே அவர்களை மம்தாவிடம் இருந்து விலக வைத்து பாஜகவில் சேர வைத்திருக்கிறார்கள். மேற்கு வங்காளத்தில் பாஜக நடத்திய இந்த திருவிளையாடல்கள் பற்றி அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அப்போதுதான், ‘மேற்கு வங்காளத்துக்கு முன்பே தமிழ்நாட்டில் இதை செய்து முடித்துவிட்டார்கள்’என்று சசிகலா பற்றிய தகவல்களையும் அதிகாரிகள் விவாதித்துள்ளார்கள். அதன் மூலமே இந்த விவகாரம் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

-வேந்தன்

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

திங்கள் 26 ஏப் 2021