மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஏப் 2021

இரண்டாம் அலை கொரோனா தொற்று: எதேச்சதிகாரம் ஏன் செயல்படுவதில்லை?

இரண்டாம் அலை கொரோனா தொற்று: எதேச்சதிகாரம் ஏன் செயல்படுவதில்லை?

ராஜன் குறை

குஜராத் மாநில முதல்வராக பன்னிரண்டு ஆண்டுகள் இருந்த நரேந்திர மோடி பாரத பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டபோது அவர் மிகச் சிறந்த நிர்வாகி, குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர் என்று கூறப்பட்டது. இதில் ஒரு விபரீதமான முரண்பாடு என்னவென்றால் அவரது குஜராத் ஆட்சியின் துவக்கத்திலேயே சுதந்திர இந்தியாவின் மிக மோசமான மதக்கலவரமும், இஸ்லாமியர் படுகொலையும் நிகழ்ந்ததுதான். மோடியும், அவரது அரசும் அந்த கலவரத்துக்குத் துணை நின்றதாக குற்றம் சாட்டப்பட்டது. சட்டத்தின் பார்வையில் இந்த குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மோடி தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டை மறுக்க முடியாது. இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்ட (அதிகாரபூர்வமான கணக்கிலேயே ஆயிரம் பேர் கொல்லப்பட்ட), ஏராளமானோர் படுகாயப்பட்ட, பாலியல் வல்லுறவுக்கு ஆளான, ஏராளமான தனியார், பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்ட ஒரு கலவரத்தைத் தடுக்க இயலாதவர் எப்படி ஒரு சிறந்த நிர்வாகியாக அறியப்பட முடியும் என்பதுதான் இந்த விபரீத முரண். இந்த கலவரம் நிகழ்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சர் ஆனார். அதுவரை அவர் ஆர்எஸ்எஸ், அதன் பிறகு பாரதீய ஜனதா கட்சி நிர்வாகியாகத்தான் இருந்தார். கலவரம் நிகழ்வதற்கு ஒரு சில வாரங்கள் முன்புதான் முதல்முறையாக இடைத்தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். இப்படியாக மோடியின் நிர்வாக வரலாற்றின் துவக்கமே மாபெரும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுதான் என்றால் மிகையாகாது. அன்றிலிருந்தே ஒரு முக்கியமான அம்சம் தெளிவானது. நரேந்திர மோடி எதேச்சதிகார தன்மை (Despotic) கொண்ட ஓர் ஆட்சியாளர். அவரது அமைச்சரவையில் முக்கிய பங்கு வகித்த அமித் ஷா ஒரு சந்தர்ப்பத்தில் பன்னிரண்டு துறைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். என்கவுன்டர் கொலைகளைத் தூண்டியதற்காக கைது செய்யப்பட்டார். மோடியைவிட 14 ஆண்டுகள் இளையவரான அமித் ஷா, செல்வாக்கு மிக்க பனியா சமூகத்தைச் சார்ந்தவர். இப்படி அதிகாரங்களை தங்களிடம் குவித்துக்கொள்வதும், எதேச்சதிகார பாணியில் ஆட்சி செய்வதும் மோடி - அமித் ஷா இரட்டையரின் பாணியாக மாறியது.

எதேச்சதிகாரம் என்றால் என்ன?

பழைய மன்னர்காலத்தில்கூட எல்லா மன்னர்களும் எதேச்சதிகாரிகள் இல்லை. பலர் மந்திரிகளுடன், படைத்தலைவர்கள், மதகுருமார்கள், கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்தே முடிவுகள் எடுப்பார்கள். ஆனால் ஒரு மன்னரால் சுலபமாக எதேச்சதிகாரியாக முடியும்; ஏனெனில் அவர்களே இறையாண்மையின் தனித்துவமிக்க வடிவம். அதனால்தான் சதுரங்க விளையாட்டில்கூட எதிர்த்தரப்பு மன்னரைக் குறிக்கும் காயைக் கட்டுப்படுத்திவிட்டால் விளையாட்டு முடிந்து விடுகிறது. அப்படி இறையாண்மையை தங்கள் உடலில் மன்னர்கள் சுமந்துகொண்டிருந்தாலும், அரசாள்வதை பலருடன் ஆலோசித்துச் செய்யும்போதுதான் ஆட்சி சிறப்பாக அமையும்.

எப்போதுமே செயல்படுவதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று கலந்தாலோசிப்பது. ஆங்கிலத்தில் இதை Deliberation என்பார்கள். மற்றொன்று தீர்மானம் செய்வது அல்லது முடிவெடுப்பது. ஆங்கிலத்தில் இந்த தீர்மானம் அல்லது முடிவு Decision என்று அழைக்கப்படும். ஒரு செயலை செய்வது என்பது தனித்ததொரு நிகழ்வு என்பதால், எவ்வளவு ஆலோசனை செய்தாலும் இறுதியாக எடுக்கப்படும் முடிவு என்பது ஒரு தனித்த முடிவாகத்தான், தீர்மானமாகத்தான் இருக்கும். இதன் பொருட்டே பெரும்பாலும் தனிநபர்கள் எப்போதும் பொறுப்பாளர்கள் ஆக்கப்படுகிறார்கள். ஒரு நாடகத்தை அரங்கேற்ற, ஒரு திரைப்பட த்தை உருவாக்க இயக்குநர் என்று ஒருவர் அவசியமாகிறார். அவர் எவ்வளவு பேரை கலந்தாலோசித்தாலும் இறுதி முடிவு அல்லது தீர்மானத்தை அறிவிப்பவராகச் செயல்படுத்துபவராக இருக்கிறார். இப்போது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் Chief Executive Officer என்னும் CEO (சிஇஓ) என்பவர் இருக்கிறார். அமெரிக்க நிறுவனங்களில் இவருக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தைக் கேட்டால் மயக்கம் வரும்.

மக்களாட்சியிலும்கூட இதன் பொருட்டே பிரதம அமைச்சர், முதலமைச்சர் என்று ஒரு தனி நபர் முக்கியத்துவம் பெறுகிறார். அவருக்குக் கணிசமான அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. அவர்களை தலைவர்களாக முன்னிறுத்தியே தேர்தல்கள் நடக்கின்றன. கட்சி அமைப்பு, அரசாங்க அதிகாரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் எல்லோரும் இருந்தாலும் முடிவெடுக்கும் பொறுப்பு இவர்களிடம் வழங்கப்படுகிறது. ஒரு நல்ல ஆட்சியாளர் தன்னிடம் வழங்கப்பட்ட அந்த பொறுப்பை உணர்ந்து பலரையும் கலந்தாலோசிப்பது அவசியம். நாடாளுமன்ற அவை, சட்டமன்ற அவை போன்றவையே ஆலோசனைக்கான, விவாதங்களுக்கான அவைதான். அதைத் தவிரவும் மந்திரி சபை இருக்கிறது. அதிகாரிகள் குழு இருக்கிறது. பொதுமன்றத்தில் பல்துறை வல்லுநர்கள் இருக்கிறார்கள். ஊடகங்களில் இவர்கள் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். நல்ல ஓர் ஆட்சியாளர் இவர்களது கருத்துகளைச் செவிமடுத்து, ஆலோசித்து, விவாதித்து, பிறகு முடிவுகளை எடுப்பதே சிறந்த ஆட்சிமுறையாக இருக்கும். ஆட்சியாளரின் திறன் என்பதே சரியான ஆலோசனைகளை, சரியான நேரத்தில் செவிமடுப்பதுதான்.

ஆனால், இதற்கு மாறாக ஓர் ஆட்சியாளர் தானே முடிவுகளை உடனடியாக எடுப்பார் என்பது அவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை வலியுறுத்துகிறது. அவர் எதேச்சையாக அந்த அதிகாரத்தை நினைத்தபடி பயன்படுத்துவது எதேச்சதிகாரம் ஆகிறது. இப்படிச் செய்பவர்கள் தங்கள் இறையாண்மை வடிவத்தை வலியுறுத்துவதால் கவர்ச்சிகரமான தலைவர்கள் ஆகிறார்கள். மக்களாட்சி தத்துவத்துக்கு விடப்படும் மிகப்பெரிய சவாலாக இந்த தனிநபரின் இறையாண்மை கவர்ச்சி மாறுகிறது. அதற்கு மாறாக மன்மோகன் சிங் போல ஆலோசனைகள் நிறைய செய்து செயல்படும் நபர் நல்லாட்சி தந்தாலும் பலவீனமானவர் என்று நினைக்கப்படுகிறார்.

எதேச்சதிகாரத்தின் கவர்ச்சி

ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சி குறித்து சிந்தித்தவர்களில் ஒருவர் கார்ல் ஷ்மிட் (1888 - 1985). இவரைக் குறித்து மின்னம்பலத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ஹிட்லரின் வெகுஜன கவர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது அவரது தன்னிச்சையாக முடிவெடுக்கும் குணம் என்று ஷ்மிட் கூறினார். அதை அவர் டிஸிசனிஸம் (Decisionism) என்று பெயரிட்டார். இதன் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் எடுக்கப்படும் முடிவு நல்லதா, கெட்டதா, அதனால் பயன் விளைந்ததா, தீமை விளைந்ததா என்பதையெல்லாம் விட, தலைவர் திட்டவட்டமாக முடிவெடுத்தார் பார்த்தாயா என்று மக்கள் வியப்பதுதான்.

தமிழகத்தின் ஆகச்சிறந்த சமூகவியல் அறிஞர்களில் ஒருவரான எம்.எஸ்.எஸ்.பாண்டியன், அவர் மறைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன் 'Decisionism' and the Cult of Narendra Modi: A Note’ என்ற கட்டுரையை Economic and Political Weekly (Vol. 49, Issue No. 25, 21 June, 2014) என்ற ஆய்வேட்டில் எழுதினார். அதில் எப்படி நரேந்திர மோடி என்ற ஆட்சியாளரின் பிம்பம் இவ்வாறு எதேச்சதிகாரமாக முடிவெடுக்கும் தன்மை சார்ந்து கட்டமைக்கப்படுகிறது என்பதை அருமையாக விளக்கியிருந்தார். பாண்டியன் மறைந்து இரண்டாண்டுகள் கழித்து தனது பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நரேந்திர மோடி பாண்டியனின் கருத்தை முழுமையாக நிரூபித்தார். டிஸிசனஸிம் என்பதை தமிழில் தீர்மானவியம் என்று கூறலாம். எதேச்சதிகாரத்தின், தீர்மானவியத்தின் உச்சம் என டிமானிடைசேஷன் என்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கூறலாம். பல கோடி மக்களை கடுமையான இடர்பாடுகளைச் சந்திக்க வைத்த இந்த நடவடிக்கை தன் நோக்கங்களில் முழுத் தோல்வி அடைந்தது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் கடுமையாக பாதித்தது. ஆனாலும் பாமர மக்கள், குறிப்பாக இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களில், மோடி கறுப்புப் பணத்தை ஒழிக்க துணிகரமான முடிவு எடுத்தார் என்றுதான் இதைக் கருதினார்கள் என்பதையே உத்தரப் பிரதேச தேர்தலில் மோடியின் தலைமை பெற்ற வெற்றியும், அடுத்து வந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பெற்ற வெற்றியும் காண்பிக்கிறது. பாரதீய ஜனதா என்ற கட்சியைவிட மோடி என்கிற பிம்பமே இந்த வெற்றிகளை ஈட்டுவதாகக் கருதப்படுகிறது. எதேச்சதிகாரத்தின், தீர்மானவியத்தின் கவர்ச்சி என்றே இதை கூற முடியும். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்தாமல், கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் ஏழாண்டுகள் ஒரு பிரதமர் இந்தியாவில் ஆட்சி செய்ததும் இதுதான் முதன்முறை. தன்னை யாரும் கேள்வி கேட்பதை மோடி விரும்புவதில்லை என்பதையும், அதனால் அவர் நாடாளுமன்றத்தையே தவிர்ப்பதையும் காண முடியும்.

எதேச்சதிகாரம் ஏன் செயல்படுவதில்லை?

எதேச்சதிகாரம் என்பது காகித மலர் போன்றது. பார்க்க கண்ணைப் பறிக்கலாம், வசீகரிக்கலாம். ஆனால் ஒருபோதும் மணம் வீசாது; கனி தராது. இதற்கான காரணம் மானுட கூட்டு இயக்கத்துக்கு ஆலோசிப்பது, விவாதிப்பது, பல்வேறு மாற்றுக் கோணங்களை செவிமடுப்பது என்பது போன்ற பண்புகளே இன்றியமையாதவை என்பதுதான். எடுக்கப்படும் முடிவு ஒற்றை செயலை, தனித்துவமான செயலை நோக்கியதாக இருக்கலாம். ஆனால் அந்த முடிவு பல்வேறு தரப்பினரின் கருத்துகளைப் பரிசீலித்த பிறகு எடுக்கப்பட வேண்டும். முக்கியமாக நவீன மக்களாட்சி சமூகத்தில் கட்சிக்காரர்கள், அதிகாரிகள் தவிர வல்லுநர்களையும், சிந்தனையாளர்களையும் ஆட்சியாளர்கள் கலந்தாலோசிக்கும் வாய்ப்பும், தேவையும் அதிகம். அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்வேறு சிந்தனையாளர் குழுக்கள் (Think Tanks) இயங்கும். அவர்கள் உருவாக்கும் கருத்துகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் செவிமடுப்பார்கள்; ஆட்சியாளர்கள் பார்வைக்கும் செல்லும்.

தமிழக வரலாற்றில் கலைஞர் எப்போதும் ஊடகங்களின் விமர்சனங்களை அன்றாடம் கவனிப்பவராக இருந்தார் என்பது பலராலும் புகழப்பட்ட பண்பாகும். அவருடைய பத்திரிகையாளர் சந்திப்புகள் மிகுந்த உயிர்ப்புள்ளவை. அதேபோல அதிகாரிகள், கட்சிக்காரர்கள் கூறுவதையும் கவனமாக கணக்கில் கொள்பவர் என்பதும் பரவலாகப் பதிவாகியுள்ளது. நல்லதொரு யோசனை எந்த சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து வந்தாலும் அவர் செயல்படுத்தியுள்ளார்.

இதற்கு மாறாக ஜெயலலிதா எதேச்சதிகார போக்கின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார். அதனால் பலமுறை அவர் எடுத்த முடிவுகளிலிருந்து அவரே பின்வாங்கினார். பிற்போக்கான அரசியலை ஊக்குவித்தார். அமைச்சரவை சகாக்களை பந்தாடினார். யாரும் தன்னை நெருங்கி கருத்துக் கூறவே அஞ்சுமாறு செய்தார். மோடியைப் போலவே பத்திரிகையாளர் சந்திப்புகளை தவிர்த்தார்.

ஒரு மறக்க முடியாத உதாரணம், கொட்டும் மழையில், புயலில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது என்று தெரிந்தும், ஜெயலலிதா அனுமதியில்லாமல் அதைத் திறந்துவிட முடியாது என்ற அச்சத்தால் அதிகாரிகள் அவரை தொடர்புகொள்ள தவிக்க, அது சாத்தியமாவதற்குள் ஏரி நிரம்பி கரை உடைந்து சென்னையே வெள்ளக்காடாகியதை கூறலாம். ஆனால், அதற்குப் பின் வந்த தேர்தலிலும் ஜெயலலிதா வெற்றி பெற்றார். யாருக்கும் அஞ்சாத இரும்பு பெண், தன்போக்கில் முடிவுகளை எடுப்பார் என்ற அவரது பிம்பம் இன்றுவரை மக்களால் பாராட்டப்படுகிறது. இதுவே மக்களாட்சியின் மாபெரும் பலவீனம். மக்களின் கையில் வாக்குகளைக் கொடுத்தால், அவர்கள் யாரையும் மதிக்காத எதேச்சதிகாரிகளைத் தேர்வு செய்வது எப்படிப்பட்ட முரண். இன்றும் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் ஒரு செல்வாக்கான அரசியல்வாதி என்பதை நினைத்துப் பார்க்கும்போது ஒரு கல்வியாளனாக, அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பயின்றவனாக மனம் நொந்து போகிறேன். அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்ட அழிவின் வீச்சுக்கு அந்த எதேச்சதிகாரியின் மூடத்தனமே ஒரு முக்கிய காரணம் என்பதை தரவுகள் சொல்லும். ஜெயலலிதா, மோடி, டிரம்ப் ஆகிய எதேச்சதிகாரிகளின் ஒரு பொதுவான அம்சம் என்னவென்றால் இவர்கள் பெருமுதலீட்டிய ஆதரவாளர்கள் என்பதுதான். அரசியல் தேவைக்காக மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தினாலும் இவர்களது வளர்ச்சிப் பார்வை செல்வக் குவிப்பாகவும், அதிகாரக் குவிப்பாகவும்தான் இருக்கும்.

இந்த அம்சங்களை பொறுமையாகப் பரிசீலித்தால் ஏன் மோடி அரசாங்கம் கொரோனாவை வெற்றி கொண்டுவிட்டதாகக் கொண்டாடியது, ஏன் பல வல்லுநர்கள் கூறியும் இரண்டாம் அலைக்கு எந்த விதமான தயாரிப்பும் இல்லாமல் இருந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம். நிச்சயம் சுகாதாரத்துறையில் ஓர் அதிகாரி மருத்துவத்துக்கான ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்திருப்பார். ஆனால் அவரால் அதை பிரதமரின் காதுகளுக்குக் கொண்டு செல்ல முடியாது. ஒரு எதேச்சதிகாரியைச் சுற்றி ஒரு காற்றுப் புகாத கண்ணாடிக்குமிழ் உருவாகிவிடும். யார் எதைச்சொல்வதும் அவர்கள் காதுகளில் விழாது. தன்னுடைய குரலையே எல்லார் வாயிலிருந்தும் கேட்கும்படி சபிக்கப்பட்டவர்கள் எதேச்சதிகாரிகள். அவர்கள் எடுக்கும் முடிவுகள் எவ்வளவு தவறானாலும் அதைக் கொண்டாட ஒரு படையே தயாராகிவிடும். ஊடகங்கள் அவர்கள் புகழ் பாடும்.

கொரோனா இரண்டாம் அலையில் தலைநகர் டெல்லியும், குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களும் அனுபவிக்கும் கொடுங்கனவும், துர் மரணங்களும் எந்த ஓர் அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டியவை. கடந்த ஆறு மாத காலமாகவே பிற நாடுகளின் அனுபவங்களை வைத்து இரண்டாம் அலை வரும் என்பதை பலரும் கூறிவந்தனர். ஆனால் மோடி அரசு கொரோனாவை வென்று உலகத்துக்கே வழிகாட்டியதாக நம்பியது. தடுப்பூசி உற்பத்தியில் எப்படி பெருமுதலீட்டியத்தை வளர்க்கலாம் என்று திட்டமிட்டது. இதை ஆங்கிலத்தில் Criminal Negligence, அக்கிரம அலட்சியம் என்று கூறுவார்கள். ஆனாலும் இப்போதும் வட இந்திய ஊடகங்கள் மோடியின் ஆட்சித் திறனை வியந்து கொண்டாடுவதை நிறுத்தவில்லை. என்ன நடந்தாலும் பாதிப்படையாத மோடியின் தீர்மானவியமும், எதேச்சதிகாரமும் ஏற்படுத்தும் கவர்ச்சியிலிருந்து மக்களை விழித்தெழ செய்ய முடியுமா என்பதே முக்கியமான கேள்வி. மக்களாட்சி என்பது ஓர் அபூர்வ மலர்; அது மணம் வீசவும் அதன் கனிகள் மானுடத்தை மேம்படுத்தவும், காகித மலர்களான எதேச்சதிகாரிகளை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்துவது இன்றியமையாதது.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

.

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

திங்கள் 26 ஏப் 2021