மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பக் கூடாது: முதல்வர்!

ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பக் கூடாது: முதல்வர்!

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை இருக்கும்போது, அதை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு என பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் சுவாச பிரச்சினை உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஆக்சிஜன் தேவை திடீரென அதிகரித்தது. டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலரும் உயிரிழந்த நிலையில், மற்ற மாநிலங்களிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில்,”தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி திறன் 400 டன்னாக உள்ள நிலையில், விரைவில் அதன் தேவை 450 டன்னாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேசிய ஆக்சிஜன் ஒதுக்கீட்டு திட்டத்தின்படி தமிழகத்துக்கு 220 டன் ஆக்சிஜன் என தவறாக கணித்துவிட்டு, 80 டன் ஆக்சிஜனை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்ப முடிவு செய்தது நியாயமில்லை. தமிழகத்தில் தற்போது 310 டன் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது.

அதேசமயம், ஆந்திர தெலங்கானாவில் தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை தமிழகத்தை விட குறைவாக உள்ளது. அந்த மாநிலங்களிலும் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள் இருக்கும்போது, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவது நியாயமில்லை. தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவது, சிக்கலை உருவாக்கும். அதனால், தமிழகத்திலிருந்து 80 டன் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பும் முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது, தமிழகத்தில் போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

ஞாயிறு 25 ஏப் 2021