மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

முதல் நாள் முழு ஊரடங்கு!

முதல் நாள் முழு ஊரடங்கு!

தமிழகத்தில் இன்று முதல்நாள் (ஏப்ரல் 25) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், மாநிலம் முற்றிலும் முடங்கியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருவதால், தமிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஊரடங்கின்போது, பால், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவை உள்ளிட்ட மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள் மற்றும் எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறைச்சிக் கடை, டாஸ்மாக் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கண்காணிப்பு பணியில் 7000 போலீசார்கள் ஈடுபட்டுள்ளனர். விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் அண்ணாசாலை, கோயம்பேடு, கிண்டி, சைதாப்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றி திரிவோர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர் போலீசார். இந்நிலையில், சென்னையில் இதுவரை ஊரடங்கு விதிகளை மீறிய 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

திருச்சி

திருச்சியில் உறையூர், சமயபுரம், மணப்பாறை, முசிறி, திருவெறும்பூர் என மாவட்டம் முழுவதும் முழுமையாக கடைகள் திறக்கப்படவில்லை. பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. சாலைகளில் எந்த வாகனத்தையும் பார்க்க முடியவில்லை.

மருத்துவமனைகள், மருந்து கடைகள், அம்மா உணவகம் உள்ளிட்டவை மட்டும் செயல்படுகின்றன. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட திருமணங்கள் எளிமையான முறையில் நடைபெற்றன.

நெல்லை

திருநெல்வேலியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், சந்திப்பு பேருந்து நிலையம், நகரம் ரத வீதிகள், பாளையங்கோட்டை தெற்கு கடைவீதி, மேலப்பாளையம், உள்ளிட்ட பகுதிகள் ஆள் ஆரவமின்றி காணப்படுகிறது. பால், மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்தும் 100 சதவிகிதம் அடைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

கோவை

கோவையில் இன்று முழு ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நகரின் முக்கிய பகுதிகளான காந்திபுரம்,சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநகரில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், கேரளா தமிழக எல்லைகளில்13 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

கடந்தாண்டு செய்ததுபோல, இந்தாண்டு ஆதரவற்றோர்களுக்கு எந்தவித முன்னேற்பாடுகள் செய்யப்படாததால், உணவுக்காகவும், தண்ணீருக்காவும், அவர்கள் சாலைகளில் அலைந்து திரிவதை காண முடிகிறது.

மறைமுகமாக கடைகள் எதுவும் செயல்படுகிறதா என்பதையும் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

முழு ஊரடங்கு காரணமாக தூத்துக்குடியில் தடுப்பு வேலி அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டும், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததாலும், நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. இதுபோன்று திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட நகரங்களிலும் முழு ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்பட்டு வருவதால், தமிழகமே வெறிச்சோடி காணப்படுகிறது.

வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

ஞாயிறு 25 ஏப் 2021