மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

இளைய வாக்காளர்கள் கையில் தேர்தல் முடிவு: எக்சிட் போல் எக்சைட்மென்ட்!

இளைய வாக்காளர்கள் கையில் தேர்தல் முடிவு: எக்சிட் போல் எக்சைட்மென்ட்!

தமிழகத்தில் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குப் பதிவுகளை மேற்கு வங்காள தேர்தலின் இறுதிகட்ட தேர்தல் நடக்கும் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று மாலை 7.30க்கு பிறகுதான் வெளியிட முடியும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது. தேர்தல் நடைபெற்ற தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதற்கு சில நாட்கள் முன்னர் வெளியாக இருக்கும் எக்சிட் போல் முடிவுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 57லட்சத்து 76 ஆயிரத்து 311. இதில் ஆண்கள் 2 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரத்து 156 . பெண்கள் 2 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 736.

வாக்களித்தவர்களில் ஒரு கோடியே 26 லட்சம் பேர் 19 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில் 26 லட்சம் பேர் முதல் முறை வாக்களிப்பவர்கள். அதாவது கடந்த தேர்தலுக்குப் பிறகு 18 வயதைக் கடந்தவர்கள்.

இந்தப் புள்ளி விவரங்களில்தான் எக்சிட் போல் மேற்கொள்பவர்கள் மூழ்கியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக 19 முதல் 25 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களையும் உள்ளடக்கிய ஒரு கோடியே 26 லட்சம் வாக்குகள்தான் இந்த தேர்தலின் வெற்றி தோல்வி அடைபவர்களைத் தீர்மானிக்கப் போகிறது. அதனால் எக்சிட் போல் மேற்கொண்டவர்களின் முழு கவனமும் இவர்கள் மீதே இருந்தது. இந்த இளைஞர்கள் வாக்குகளை அடிப்படையாக வைத்துதான் தேர்தல் முடிவு இருக்கும் என்கிறார்கள் எக்சிட் போல் களத்தில் இறங்கியவர்கள்.

முதல்முறை வாக்காளர்கள், இளைய வாக்காளர்கள் ஆகியோரின் வாக்குகள் எந்தப் பக்கம் போயிருக்கின்றன என்பதில்தான் எக்சிட் போல் கணக்கீட்டாளர்களுக்கு கவனம் மட்டுமல்ல குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

திமுக, அதிமுக ஆகிய கூட்டணிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் இளைஞர்களின் கவனம் ஈர்க்கும் பல அம்சங்கள் இடபெற்றுள்ளன. கல்விக்கடன் ரத்து, அரசு வேலை வாய்ப்புகளை உடனடியாக நிரப்புதல் போன்ற திமுகவின் வாக்குறுதிகள் இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தன. அதேநேரம் மாணவர்களுக்கு இலவச டேட்டா, அரியர் மாணவர்கள் விஷயத்தில் அரசு எடுத்த முடிவு என அதிமுகவுக்கும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கவனம்பெற்றுள்ளது.

இவர்களை அடுத்து நாம் தமிழர் சீமானின் பரப்புரையை யு ட்யூப்பில் பார்த்த இளைஞர்கள், அதன் காரணமாகவே சீமானுக்கு வாக்களித்ததாக ஒரு தகவல் தேர்தலுக்கு அடுத்த நாள் முதல் பரவி வருகிறது. தேர்தலில் சீமானின் பேச்சு மற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சுகளை விட வித்தியாசமாகவும் தங்களைக் கவர்ந்தததாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர். இதனால் இளைய வாக்காளர்கள் சீமான் பக்கம் சரிந்துவிட்டார்களோ என்ற தோற்றமும் தேர்தலுக்கு சில நாட்கள் கழித்து ஏற்பட்டது.

சீமானுக்கு போட்டியாக இளைய வாக்காளர்களின் கவனம் கமல்ஹாசன் மீதும் இருக்கிறது. ஏற்கனவே மாணவர்களை தொடர்ச்சியாக சந்தித்துவரும் கமல்ஹாசன், தனது கட்சியை இளைஞர்களை நோக்கியே நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

அமமுக பொதுச் செயலாளர் தினகரன் மத்தியிலும் இளைஞர்களூக்கு பெரிய அளவு கிரேஸ் இருப்பதாகவும், அவரது அணுகுமுறை, மற்றவர்கள் மாதிரி நான் ஏமாற்றும் வாக்குறுதி அளிக்க மாட்டேன், வீட்டில் ஒருவருக்கு தனியார், அரசு வேலைவாய்ப்புகள் பெற்றுத் தருவேன் என்று தினகரன் அளித்த வாக்குறுதி முக்கியத்தும் வாய்ந்ததாக இளைஞர்கள் மத்தியில் பேசப்பட்டது.

இப்படி இளைய வாக்காளர்களை ஒவ்வொரு கட்சியும் சொந்தம் கொண்டாடும் நிலையில்....இளைஞர்கள் எந்த கட்சியியை தங்கள் சொந்தமாகக் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதுதான் எக்சிட் போல் கணக்கீட்டாளர்களின் முக்கிய கேள்வியாக இருக்கிறது. இதற்கான பதில் ஏப்ரல் 29 தேதிஓரளவுக்கும், மே 2 ஆம் தேதி தெளிவாகவும் தெரிந்துவிடும்.

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

சனி 24 ஏப் 2021