மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

தமிழக சுகாதாரத்துறையில் தனிப் பிரிவு வேண்டும்-எதற்காக?

தமிழக சுகாதாரத்துறையில் தனிப் பிரிவு வேண்டும்-எதற்காக?

நாடு முழுதும் இப்போது கொரோனா தடுப்பூசி, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவையே இப்போது எல்லா மொழிகளிலும் தலைப்புச் செய்திகளாக இருக்கின்றன.

எப்போதுமே நாம் வரும்முன் காத்தலை விட்டுவிட்டு, தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் கொரோனாவை ஒவ்வொரு உடலில் இருந்தும் அடித்து விரட்டும் ஆற்றல் மிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எவ்வித திட்டங்களையும் கடந்த ஒரு ஆண்டாக மத்திய, மாநில அர கள் தீட்டவில்லை என்ற குரல்கள் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் நோய் நாடி நோய் முதல் நாடி என்பதைப் போல, கொரோனா தாக்குவதற்கு காரணமாம நோய் எதிர்ப்பு சக்தியை அனைவருக்கும் அதிகப்படுத்திட வேண்டும். இதற்கு தமிழக சுகாதாரத்துறையில் தனிப்பிரிவை உருவாக்கிட வேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “ கொரோனா பெருந்தொற்றின் 2-ஆம் அலை மிக வேகமாக பரவுவதால் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. கொரோனா பரவலின் வேகத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறிக் கொண்டிருக்கின்றன.

முகக்கவசம் அணியாமல் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் வெளியில் நடமாடும் சிலருக்கு கொரோனா வருவது கிடையாது. ஆனால் முகக்கவசம் அணிந்து தகுந்த பாதுகாப்போடும், முன்னெச்சரிக்கையோடும் இருப்பவர்களுக்கு கொரோனா எப்படி வருகிறது என்று தெரியாமலேயே வந்துவிடுகிறது.

கொரோனா ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் பாதையை சரியாக யாராலும் கணிக்கவே முடியவில்லை. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு முயற்சி எடுக்கிறதே தவிர கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எந்தவொரு முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை.

ஒருபுறம் தடுப்பூசி இருந்தாலும் கூட மற்றொருபுறம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பையும், பாதிப்பையும் கட்டுப்படுத்த முடியும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு கொரோனாவினால் பெரியளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை”என்றவர் ஊடகங்களை நோக்கியும் சில ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.

“தொலைக்காட்சிகளில் கொரோனா தொற்று வந்துவிட்டால் என்னவாகும் என்பதையும், கொரோனா பரவல் பாதிப்பிலிருந்து தப்பிக்க வழியையும் சொல்கிறார்களே தவிர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. சித்தா மற்றும் ஆயுர்வேத முறைகளில் எந்தவொரு பக்கவிளைவும் இல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். ஆனால் அதற்கெல்லாம் எந்தவொரு முக்கியத்துவமும் கொடுக்காமல் தமிழக சுகாதாரத்துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது.

கொரோனா பரவுவதை தடுக்க போடப்படும் கட்டுப்பாடுகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் தமிழக அரசு முனைப்பு காட்ட முன்வர வேண்டும். தமிழக சுகாதாரத்துறையில் தனிப்பிரிவை உருவாக்கி தேவையான நிதியை ஒதுக்கி உடனடியாக செயல்படுத்துவதன் மூலம் பெரும்பாலான மக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறிப்பிட்ட நாட்களில் அதிகரித்திட முடியும். இதனால் கொரோனா பெருந்தொற்றின் 2-ஆம் அலை ஏற்படுத்தும் அதிதீவிர பாதிப்பை முடிந்தளவு தடுத்திட முடியும்”என்கிறார் ஈஸ்வரன்.

தேசிய அளவில் கொரோனா என்பது காங்கிரஸுக்கு பாஜக எதிர்ப்பு சக்தியாகவும், பாஜகவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு சக்தியாகவும் அரசியல் செய்யப்படுகிறது. இப்படி எதிர்க்கட்சிகளை எதிர்க்கும் சக்தியாக கொரோனாவை பயன்படுத்தாமல், மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதத்தில் அரசு உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக சுகாதாரத்துறைக்கு மற்ற மாநிலங்களை விட வலிமையான உட்கட்டமைப்பு இருக்கும் நிலையில், அனைத்து மக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு முயன்றால் எளிதில் மேற்கொள்ளலாம். இதனால் கொரோனா தொற்று உடலுக்குள் நுழையாமலயே தடுக்கலாம்.

நல்ல யோசனையை செயல்படுத்த அரசு முன் வரவேண்டும்.

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

சனி 24 ஏப் 2021