மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

’திருப்தியுடன் வெளியேறுகிறேன்’!

’திருப்தியுடன் வெளியேறுகிறேன்’!

சிறப்பாக பணியாற்றிய திருப்பதியுடனும், இனிய நினைவுகளுடன் ஓய்வு பெறுகிறேன் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவியேற்றார். 47வது தலைமை நீதிபதியான அவர், அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். நேற்றுடன் அவர் பணி நிறைவு பெற்றது.

இந்நிலையில், நேற்று(ஏப்ரல் 23) நடந்த பிரிவு உபசார விழாவில் அவர் பேசியபோது,” இந்த கடைசி நாள் எனக்கு கலவையான உணர்வுகளைத் தந்துள்ளது. இதை விவரித்து சொல்வது கடினம். 21 ஆண்டுகளாக நீதிபதியாக பணியாற்றியுள்ளேன்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சிறப்பாக பணியாற்றிய திருப்தியுடனும், மலரும் இனிமையான நினைவுகளுடனும் ஓய்வு பெறுகிறேன். தலைமை நீதிபதியாக பணியாற்றிய போது, எனக்கு சக நீதிபதிகள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். அதனால், பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க முடிந்தது. கொரோனா பரவல் காலத்தில் விசாரணை காணொலி மூலமாக நடைபெற்றது. அதிலும், சிக்கல்கள் இருந்தாலும், உச்ச நீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டது.

பதிவாளர் உதவியில்லாமல், 50 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகளை, காணொலி மூலமாக நீதிபதிகளால் விசாரித்திருக்க முடியாது. நான் என்னால் முடிந்ததைச் செய்தேன் என்ற திருப்தியுடன் புறப்படுகிறேன். நீதிபதி என்.வி.ரமணாவிடம் செங்கோலை ஒப்படைக்கிறேன். அவர் நீதிமன்றத்தை மிகவும் சிறப்பாக வழிநடத்துவார் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

விழாவில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பேசும்போது, ” கொரோனா தொற்றால் உலகமே முடங்கியிருந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி காணொலி வாயிலாக விசாரணையை தொடங்கிவைத்தார். அதன்மூலம் 50 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காண முடிந்தது. இது பெரிய சாதனை” என்றார்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசுகையில், ”தலைமை நீதிபதி ஒரு புத்திசாலியான நீதிபதி மட்டுமின்றி, அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்ட, அன்பான அக்கறை கொண்ட மனிதர்” என்று கூறினார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் பேசுகையில், “இது (65) ஓய்வு பெறும் வயதே இல்லை. நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை அதிகரித்து அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். கடைசி நாளிலும் கூட கொரோனா தொடர்பான வழக்கை விசாரித்துள்ளார். நாட்டில் என்ன நடக்கிறது, என்ன செய்யலாம் என கடைசிநாள் வரை பொறுப்புடன் பணியாற்றினார். இது நீதிபதிகள் ஈடுபாட்டை காட்டுகிறது” என கூறினார்.

இதைத் தொடர்ந்து, இன்று என்.வி.ரமணா உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 24 ஏப் 2021