மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஏப் 2021

அமைச்சரவையில் இடம்பிடிக்க திமுக புள்ளிகளின் மும்முனை வேட்டை!

அமைச்சரவையில் இடம்பிடிக்க திமுக புள்ளிகளின் மும்முனை வேட்டை!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் கொடைக்கானலில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி முதல் ஓய்வெடுத்து வந்தவர் ஏப்ரல் 21 ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்பினார்.

கொடைக்கானலில் தங்கியிருந்தபோது அடுத்து அமையவிருக்கும் அரசு பற்றிய முக்கியமான ஆலோசனைகளையும் விவாதங்களிலும் திமுக தலைவர் ஈடுபட்டதாக தகவல்கள் வந்தன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பற்றி பிரத்யேகமாக தனக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் அடுத்து அமையவிருக்கும் ஆட்சி திமுக ஆட்சிதான் என்று தீவிரமாக நம்புகிறார் ஸ்டாலின். அதன் ஒரு பகுதியாகவே அமைச்சர்களாக இருக்கப் போகிறவர்கள் யார் யார் என்று ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாகவும் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஏப்ரல் 21ஆம் தேதி சென்னை திரும்பிய மு க ஸ்டாலின் அடுத்தடுத்து கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடங்கிவிட்டார். 22 ஆம் தேதி தடுப்பூசி இரண்டாம் டோஸ், செலுத்தி கொண்டவர் இன்று (ஏப்ரல் 23) அச்சம் தவிர்ப்போம், அறிவியலால் வெல்வோம் என்ற பெயரில் எழும்பூர், திருவிகநகர், வில்லிவாக்கம், கொளத்தூர் ஆகிய தொகுதிகள் கொரோனா தடுப்பு உபகரணங்கள், கபசுரக் குடிநீர் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

ஸ்டாலின் இவ்வாறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த ஆட்சி நாம்தான் என்ற நம்பிக்கையில் அமைச்சராக துடிக்கும் பல்வேறு திமுகவினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். கொரோனா பரவல் சென்னையில் அதிகமாக இருந்தபோதிலும் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் அமைச்சராகியே தீர்வது என்ற ஒற்றை அஜெண்டாவுடன் பல்வேறு திமுக பிரமுகர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

ஸ்டாலின் கொடைக்கானலில் இறுதி செய்த பட்டியல் என்ன என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டும் அவர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறோமா இல்லை என்றால் இனிமேல் இடம் பெறுவது எப்படி என்ற தீவிரமான முயற்சிகளில் இறங்கி விட்டனர்.

ஒரு பக்கம் ஸ்டாலின் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு முயற்சி செய்கிறார்கள். இன்னொரு பக்கம் ஸ்டாலினுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் மூலம் காய் நகர்த்துகிறார்கள். மேலும் பல திமுகவினர் தாங்கள் சார்ந்த சாதி சங்கங்கள் மூலம் ஸ்டாலினுக்கே கடிதம் எழுதி அமைச்சரவையில் சாதி கோட்டா மூலம் நுழைய முயற்சிக்கிறார்கள்.

திமுக வேட்பாளர் பட்டியல் பற்றி எப்படி பரபரப்பும் படபடப்பும் திமுகவினர் மத்தியில் நிலவியதோ, அதுபோலவே இப்போது அமைச்சரவை பட்டியல் பற்றிய பரபரப்பு நிலவி வருகிறது.

இதுபற்றி ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரத்தில் சிலரிடம் பேசியபோது..."அடுத்து திமுக தான் ஆட்சியமைக்கும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதன் அடிப்படையில்தான் கொடைக்கானலில் அமைச்சரவைப் பட்டியலையும் அடுத்த அரசு நிர்வாகத்தின் அதிகாரிகள் பட்டியலையும் தயாரித்துள்ளார். ஆனால் அந்தப் பட்டியலில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்ட சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை . இனிமேல் யார் என்ன முயற்சி எடுத்தாலும் பட்டியல் ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை" என்கிறார்கள்.

-வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வெள்ளி 23 ஏப் 2021