lஎடப்பாடிக்கு நன்றி சொன்ன வாசன், எதற்காக?

politics

தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்துவிட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்த இடைவெளியில் தேர்தலை எதிர்கொண்ட அனைத்து கட்சிகளும் தாங்கள் எவ்வளவு தொகுதியில் வெற்றி பெறுவோம் என்ற கணக்கீடுகளும் மதிப்பீடுகளும் போட்டுக் கொண்டுள்ளன.

இரு முக்கிய கூட்டணிகளுக்கு தலைமை வகித்த திமுகவும் அதிமுகவும் இந்த கணக்கை தீவிரமாகவே போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான இப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்குப் பிறகு… தனது கட்சி, கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களை சந்தித்து பேசி வருகிறார். தேர்தல் களம் எப்படி இருந்தது என்பது குறித்தும், கூட்டணி கட்சிகள் பரஸ்பரம் எவ்வாறு ஒத்துழைத்தார்கள் என்பது பற்றியும் விவாதித்துள்ளார்.

இந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்.

தேர்தலுக்கு முன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக மீது கடுமையான வருத்தத்தில் இருந்தது. கூட்டணிக் கட்சிகளில் கடைசியாக ஒப்பந்தம் போடப்பட்டது தமாகாவுடன் தான். அதுவும் இரட்டை இலக்கங்களில் தொகுதிகள் கேட்ட ஜி.கே வாசனுக்கு ஆறு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது அதிமுக. இது வாசனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி என்றால், அதைவிட அந்த ஆறு தொகுதிகளில் ஓரிரு தொகுதிகள் தான் தமாகா கேட்ட தொகுதிகள். மற்ற அனைத்தும் அதிமுகவே கொடுத்த தொகுதிகள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஆராய்ந்து அறிந்து வாசன் ஒரு பட்டியலை அதிமுகவிடம் கொடுத்திருந்தார். ஆனால் அந்த தொகுதிகளில் எல்லாம் அதிமுகவே போட்டியிட்டது வாசனுக்கு அதிர்ச்சியாகவும் தனது கட்சி நிர்வாகிகளை சமாளிக்க கடினமாகவும் இருந்தது. தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த நிர்வாகியான மாநிலத் துணைத் தலைவர் கோவை தங்கம் போன்றோர் போட்டியிடும் வாய்ப்பை இழந்து கட்சியிலிருந்து வெளியேறி விட்டனர்.

இப்படியாக தேர்தலுக்கு முன் அதிமுகவோடு வருத்தத்தில் இருந்த வாசன் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சில விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரத்தில் பேசியபோது….தேர்தலுக்கு முன்பு தொகுதிகள் விஷயத்தில் அதிமுக கடுமையாக நடந்து கொண்டாலும் தேர்தல் நேரத்தில் தேவையான உதவிகளை குறிப்பாக பண உதவியை தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சளைக்காமல் செய்தது.

வாசன் அண்மையில் முதல்வரை சந்தித்த போது தேர்தல் களத்தில் அதிமுகவினரின் அனைத்து வகையான ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். தமாகா போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் முதல்வரிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பதிலுக்கு முதல்வரும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று உறுதியாக வாசனிடம் தெரிவித்துள்ளார். முதல்வரை சந்தித்து விட்டு கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேசிய ஜி கே வாசன்… மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற முதல்வரின் நம்பிக்கையை குறிப்பிட்டு பேசியதோடு தமிழ் மாநில காங்கிரசும் இனி தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்”என்கிறார்கள்.

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *