மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 ஏப் 2021

வாக்கு எண்ணிக்கை: சுற்றுகளைக் குறைக்கத் திட்டமிடும் தேர்தல் ஆணையம் - ஏன்?

வாக்கு எண்ணிக்கை: சுற்றுகளைக் குறைக்கத் திட்டமிடும் தேர்தல் ஆணையம் - ஏன்?

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி முடிந்துவிட்ட நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு அச்சங்களும், சந்தேகங்களும் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டு வரும் நிலையில், நேற்று (ஏப்ரல் 21) மாலை 4 மணிக்கு சென்னை மாநகரத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நாளன்று பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து, தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது.

சென்னை மாநகராட்சியில் இருக்கும் அம்மா மாளிகையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் பாலகங்கா உள்ளிட்ட குழுவினர், திமுக சார்பில் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், வேட்பாளரும் மாசெவுமான சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அமமுக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன், மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி வேட்பாளருமான எல்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பொதுவாகவே தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 14 சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றுக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும். இப்போது கொரோனா காரணமாக ஒரே இடத்தில் அதிக பேர் கூடுவதைத் தவிர்க்க அந்த 14 சுற்றுகளையும் டேபிள்களையும் குறைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம் என்று தேர்தல் அதிகாரி பிரகாஷ் சொல்ல, அதற்கு திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக திமுக சார்பில் பேசிய கிரிராஜனும், சேகர்பாபுவும், “வாக்கு எண்ணிக்கையில் சுற்றுகளைக் குறைக்கக் கூடாது. வேண்டுமானால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை விசாலமாக வைக்க வேண்டும்” என்று கூறினார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தின் பரப்பை விரிவாக்க வேண்டும் என்பதே மேலும் பல கட்சியினரின் கருத்தாக இருந்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், ‘சுற்றுகள் எண்ணிக்கைக் குறைப்பு பற்றி கூறியிருக்கிறார்கள்.

மார்க்சிஸ்ட் கட்சியும் வாக்கு எண்ணிக்கையில் சுற்றுகளைக் குறைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையருக்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில்,

“வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படும் முகவர்கள் அனைவரும் கொரோனா சோதனை செய்து நெகட்டிவ் சான்று பெற்றிருக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிற நிலையில், வாக்கு எண்ணிக்கை மேஜைகளைக் குறைப்பது பொருத்தமற்றது. இப்படிச் சுற்றுகளின் மேஜைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது வாக்கு எண்ணிக்கை நேரத்தை பல மணி நேரம் நீடிக்க வழி செய்யும். சில தொகுதிகளில் இரு நாட்கள் நீடிக்கும் என்று தெரிகிறது. அவ்வாறு அதிக நேரம் ஒரே இடத்தில் இருந்தால்தான் தொற்று பரவ வாய்ப்பு ஏற்படும்.

மேலும் வாக்கு எண்ணிக்கை முடிவில் தாமதம் ஏற்பட்டு முடிவுகளை அறிவிப்பதில் முறைகேடுகளுக்கு வழி வகுக்கும்.மேலும் இது தொடர்பாக மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை விரிவுபடுத்தலாமா என்று இன்று அந்தந்த தேர்தல் அதிகாரிகள் பார்வையிடுகின்றனர்.

-வேந்தன்

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

வியாழன் 22 ஏப் 2021