மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 ஏப் 2021

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்: நூலோடு ஒரு நாள்!

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்: நூலோடு ஒரு நாள்!

நா.மணி - செ‌.கா

மலைத்தொடர், வனம் என்றாலே அது பேரழகுதான். நீண்ட நெடிய பசுமை மாறா மரங்களை உள்ளடக்கியிருந்தாலும் சரி , இலையுதிர்த்து கோடையை எதிர்க்கத் தயாராகும் வறண்ட புதர்க் காடுகளுமாக இருந்தாலும் சரி. ஈர்ப்பும் அதிசயமும் அற்புதமும் கலந்த ஆதிக் கவர்ச்சியாக மனிதர்களைக் கவர்ந்திழுப்பதில் வல்லவை.

தினமும் இவற்றைப் பார்த்து இன்புற்று வந்தாலும்கூட , தினந்தோறும் புதுவகையான இன்பத்தை அள்ளித் தர வல்லது. அழகின் பல பரிமாணங்களைத் தரிசிக்க இயலும். தரிசிப்பதையும், உள்ளூர உணர்வதையும் எழுத்துகள் மூலம் கடத்துவதென்பது மிக சவாலான ஒன்று. ஒவ்வொரு பருவத்திலும் காடு, அதற்கேற்ற இன்பத்தையும் , மலர்ச்சியையும் தருகின்றன.

தமிழ்நாடு, கர்நாடக மாநில எல்லையின் விளிம்புநிலை வறண்ட காடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அப்படியான பாலாறுக்கும் , ஹொகேனக்கலுக்கும் இடையிலான காட்டுப்பகுதி, 15 ஆண்டுகளாக மனிதர்கள் அஞ்சி நடுங்கி ஒடுங்குவதற்கு உகந்ததாக இருந்தது. குறிப்பாக யானைகளும், சந்தன மரங்களுமே நடுங்கினால், அப்பாவி மனிதர்களின் நிலையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

பகல்,இரவு என எந்த நேரத்திலும் காட்டு மக்கள் அஞ்சிக் கொண்டே இருந்தனர். நிலையற்ற வாழ்க்கையில், சுட்டுக்கொல்லப்பட்ட சடலங்களை முறையாக அடக்கம் செய்யக்கூட வழியில்லா அவலநிலையில் தவித்துக் கொண்டிருந்தனர்.

இதற்கு காரணம், வீரப்பனும் அவனைப் பிடிக்கப் போகிறோம் என்று புறப்பட்ட கர்நாடக, தமிழக காவல் மற்றும் வனத்துறையினர் செய்த அராஜக செயல்களும்தான்.

வீரப்பன் கொல்லப்பட்டு, 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும்கூட வீரப்பனின் மரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. வீரப்பன் கதைகளோ அல்லது வீரப்பனைப் பற்றிய கதைகளோ சாகசம் நிறைந்த வீரதீரக் கதைகளாகக் கட்டமைக்கப்பட்டுக் கொண்டுவருகின்றன. ஆனால், இருமாநில வனத்துறை - காவல்துறை அட்டூழியங்களோ கடுகளவுக்குக் கூட பொதுத் தளத்தில் புழங்கப்படவில்லை (சில விதிவிலக்குகளைத் தவிர).

வீரப்பனை சுற்றி வளைக்க முயன்ற அதிகாரிகள், வீரப்பனோடு வாழ்ந்தவர்கள், அவரைப் பற்றி அறிந்தவர்கள் இன்னும் வாழும் காலத்திலேயே , வாய்மொழி பகிர்தலின் வழியேயும், இருமாநில அரசு ஆவணக் காப்பகங்களில்இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் ,தமது நேரடிக்கள அனுபவத்தில் கண்டறிந்தவற்றின் மூலம் , திரட்டப்பட்ட தகவல்களை, காலவரிசையோடு, சுவாரஸ்யமாக தொகுத்து, புலனாய்வுத் தன்மையோடு வரலாற்றை அணுகுகின்ற புதிய பரிமாணத்தில், கடுமையாக உழைத்து சிவா மீடியா சிவசுப்பிரமணியம் அவர்கள் மூன்று பாகங்களாக வீரப்பனின் வரலாற்றை வெளியிட்டு இருக்கிறார். அதிகாரக் கொடுமைகளுக்கெதிரான செயல்பாடுகளில் இது மிக முக்கியமான நகர்வு.

முதல் பாகத்தைப் படித்து முடித்ததுமே , வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார் DCF ஸ்ரீநிவாஸ். அதுவரை நம்முள் எஞ்சியிருந்த வீரப்பனைப் பற்றிய நாயகபிம்பம் ஸ்ரீநிவாஸ் சாய்ப்ரூவின் காந்திய அணுகுமுறைகளுக்கு முன்னே உடைந்து நொறுங்கிவிடுகிறது.

வீரப்பனின் சொந்த ஊர் செங்கம்பாடி.மேட்டூர் அணை கட்டப்பட்ட 1900களின் தொடக்கக்காலத்தில் மூழ்கடிக்கப்பட்ட 66 ஊர்களில் வீரப்பனின் பூர்வீகமும் அடங்கும். பிழைப்புக்காக செங்கம்பாடிக்கு நகர்ந்து அதை உருவாக்கி வாழ்ந்தனர். அவ்வூரின் வழிபாட்டுக் கடவுள் மாரியம்மன். அதிகாரக் கொடுமைகளுக்குப் பயந்து சிதறிக்கிடந்த ஊர் மக்களை அழைத்து , இருக்க வீடுகள் தந்து , குடிசை மாரியம்மனை கோபுரத்தில் வைத்து அழகு பார்க்கிறார் DCF ஸ்ரீநிவாஸ். வீரப்பன் குடும்பத்தால், ஒட்டுமொத்த செங்கம்பாடியும் அழிந்து வருவதை ஸ்ரீநிவாஸ் விரும்பவில்லை. வேதனைப்பட்டார். அதைத் தடுக்க தம்மாலான சாத்வீக அணுகுமுறைகளை, வாய்ப்புள்ள அனைத்து வழிகளிலும் மேற்கொள்கிறார்.

இவற்றையெல்லாம் படித்துக்கொண்டு வரும் வாசகர்கள், ‘நம்பவைத்துக் கழுத்தறுத்தலின்’ மூலம், கொழுந்தனால் சுடப்பட்டு, பின் வீரப்பனால் தலையைக் கொய்து எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியைத் தருகிறது.

அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் கர்நாடக வனத்துறை ஒரு சிறிய நினைவிடத்தை எழுப்பியுள்ளது.வீரப்பனின் சொந்த ஊர் மக்களும் கூட ‘கோபுர மாரியம்மனுக்கு’ நிகராக கருவறைக்கு நெருக்கத்தில் DCF ஸ்ரீநிவாஸின் உருவப்படத்தை வைத்து வணங்கியும் வருகின்றனர் என்கிற தகவலைப் படித்த உடனே, அந்த இடத்தை நானும் பார்த்து வணங்கவேண்டுமென்கிற எண்ணம் நெஞ்சைக் கவ்விப் பற்றிக்கொண்டது

மூன்று பாகத்தையும் படித்து முடித்தவுடன், ஒரு காத்திரமான மதிப்புரையை வழங்கிய நண்பர் செ.கா, மூன்று பாகங்களையும் எனக்கு முன்பே படித்துவிட்டு எந்நேரமும் அதைப்பற்றியே பேசி வந்த என் மகன் சச்சின் , நாங்கள் பேசிய கதைகளைத் தொடர்ந்து கேட்டு ஆர்வமாகி , உடன்வர ஒப்புக்கொண்ட என் மனைவி என மூவரும் இணைந்து நூலாசிரியர் பெ.சிவசுப்பிரமணியம் அவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு மார்ச் 7ஆம் தேதி ‘வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்’ நூலின் பிரதான கதைக்களம் தேடி புறப்பட்டோம்.

ஈரோடு – பவானி – வெள்ளித்திருப்பூர் – சென்னம்பட்டி - கொளத்தூர் வழியாக செங்கம்பாடி செல்ல, அடிவாரம் கோவிந்தபாடிதான். அங்கு மிக நிறைவான காலை உணவு. அந்த சிற்றுண்டிச் சாலையில், குடல் குழம்பு வெறியரான செ.காவை 70 ரூபாயில் சாய்த்தே விட்டார்கள்.

பாலாற்றுப் பாலம்.தமிழக,கர்நாடக எல்லையைப் பிரிக்கும் இடம். கார்டு மோகனய்யாவை வீரப்பன் சுட்டுக்கொன்ற இடம். நூலாசிரியரின் விவரிப்பின் வழியே , அந்த இடத்தையும் சம்பவத்தையும் மனதில் காட்சிப் படிமங்களாக செதுக்கிவைத்துக் கொண்டதெல்லாம் சுக்கு நூறாக உடைந்துவிடுகின்றன. பாலத்தின் மேல் அவர் சுடப்பட்ட இடம், தொலைவில் இருந்து சுட மிக சவாலான ஒன்று. இந்த ஒரு நிகழ்விலேயே வீரப்பனின் துல்லியமான குறிவைக்கும் திறமை வியக்கவைத்து விட்டது.

அவ்வளவு தேடுதல் வேட்டைகளுக்கும் தப்பி, அவ்வளவு பெரிய கொலைகளையெல்லாம் செய்து, எப்படி அவ்வளவு காலம் வீரப்பன் வாழ்ந்தார் என்பதற்கு அந்தக் கொலைக்களத்தை ஒரு குறியீடாகவும் கொள்ளலாம். இதுவே கதைக்களப் பயணத்தின் காட்சி இன்பத்தின் ஒரு துளி.

இந்த இன்பத்துளியைச் சுவைத்தவாறே செங்கம்பாடிப் புதூரைச் சென்றடைந்தோம். அங்கு அபி (எ) அபிமன்னனின் அருமையான தேநீர் உபசரிப்போடு, எறக்கியம் பள்ளத்தில் DCF சாய்ப்ரூ நினைவிடத்தை நோக்கி நகர்ந்தோம். கரடு முரடான சாலைகளும், யானை லத்திகளும் பயணத்தை திகிலூட்டின.

ஸ்ரீநிவாஸ் யார் யாரோடு எந்தெந்த இடத்தில் சேர்ந்து வீரப்பன் பேச்சை நம்பி , எந்த வழியாக எறக்கியம் நோக்கி வந்தார்?

எல்லோரும் வீரப்பன் பேச்சை நம்ப வேண்டாம் என சொல்லியும்கூட,

"அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது, அவற்றை மதிப்பது, அவை எல்லாவற்றையும் ஒரு குழந்தையைப் போல் நம்பும் உள்ளம் படைத்த ஸ்ரீநிவாஸ், வழிநெடுக என்னவெல்லாம் நினைத்துக்கொண்டு நடந்து வந்திருப்பார். வீரப்பனை மட்டும் அழைத்து வந்து அவரைத் திருத்திவிட்டால், ‘எல்லோரும் இன்புற்று இருக்கும் காலம் வந்துவிடும்’ என்றல்லவா மகிழ்ச்சியோடு நடந்துகொண்டு வந்திருப்பார் என்கிற என் கற்பனை சித்திரங்களில் பொய் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

நினைவுகள் ஒருபக்கம் , யானை நடமாட்டங்கள் பற்றிய பேச்சு மறுபக்கம். இவற்றினூடே அவர் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்த ஸ்தூபியைப் பார்த்தோம். வாழ்நாளில் முக்கிய தருணங்களில் ஒன்றாகவே அதனை உணர்ந்தோம். அன்று புதர் மண்டிக்கிடந்த அந்தப் பகுதி, இன்று வெட்டவெளிப் பகுதியாக காட்சி அளிக்கிறது.

ஸ்ரீநிவாஸை நேசித்த, பூஜித்த , அவரோடு உடன் இருந்த அங்குராஜ் என்பவர் இப்போது DCF வரை பதவி உயர்வு பெற்று வந்துள்ளார். அவரது ஆர்வமிகு முயற்சியால், அருமையான நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. வனத்துறையினர், காட்டுயிர்க் காவலர்கள், அந்த மண்ணில் அவர் நேசித்த மக்கள் என எல்லோரும், அவர் சுட்டுக் கொல்லப்பட்ட ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி அங்கு வந்து நிம்மதியாக நினைவஞ்சலி செலுத்த வேண்டும் என தீவிரமாக ஏற்பாடு செய்து வருவதை நேரடியாகக் கண்டு உணர முடிந்தது.

DCF நினைவிடத்துக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது , செங்கம்பாடி அணைக்கரை முனியப்பன் கோயிலைப் பார்த்தோம்.இந்தக் கோயிலில்தான் வீரப்பன் தலைமையில் முக்கிய முடிவுகளும், ஊர் பஞ்சாயத்தும் எடுக்கப்பட்டதாக அபியும், மற்றுமொரு ஊர்க்காரரும் கூறினர். இவற்றை அசைபோட்டவாறே செங்கம்பாடி ஊருக்குள் சென்றோம்.

ஊரின் முகப்பிலேயே இருந்தது மாரியம்மன் கோயில். அதன் வெளிப்புற வாயில் அருகிலும், உள்ளே கருவறைக்கு அருகிலும் முழு உருவ சாந்த ரூபத்தில் DCF சாய்ப்ரூவின் படம் மாட்டப்பட்டு வணங்கி வருகின்றனர். அதனருகே நின்று நாங்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். எனது உள்ளத்தில் எழுந்து அடங்கிய உணர்வுகளை இங்கே சாதாரணமாக விவரிக்க முடியாது. உணர்வதன் வழி மட்டுமே உள்வாங்க முடியும். புரட்டாசியில் நடைபெறும் கோயில் திருவிழாவில் மாரியம்மனுடன் இணைந்து அவருக்கும் பூஜை செய்து வழிபடும் மக்களைக் காண வர வேண்டும் என்று உறுதியேற்றுக் கொண்டோம்.

எதிரே இருந்த தேநீர் கடையில் நல்லூர் மாதையன் அமர்ந்து இருந்தார். முன்னே இவர் வீரப்பனின் உற்ற நண்பனாக இருந்தவர். பின்னர் இவரது உயிரை எடுக்கவும் வீரப்பன் திட்டமிட்டுள்ளார். எனவே, உயிருக்கு பயந்து 15 ஆண்டுகளுக்கு மாதேஸ்வரன் மலையில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பின்கீழ் வாழ்ந்து வந்தவன். தற்போதுதான் ஊரில் வாழ்கிறார். அப்படியான ஒரு கதை மாந்தரை சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி மிகுந்த தருணம்.

நூலாசிரியர் தனது நூலை அவருக்குக் கொடுத்தார். ஆசையாகப் பக்கம் பக்கமாக ஆர்வத்துடன் புரட்டிக்கொண்டே வந்தார். DCF ஸ்ரீநிவாஸ் சுட்டுக் கொல்லப்பட்டு உடல் முண்டமாகக் கிடப்பதைப் பார்த்தவுடன் சிரித்தார். ‘நானும் அன்று உடன் சென்றிருந்தால் என் உடம்பும் இப்படித்தான் கிடந்திருக்கும்’ என்று கூறி சிரித்தார். கதையின் களத்தில் இதுபோன்ற உரையாடல்கள் கிடைப்பது அரிதிலும் அரிது. அந்த வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியது.

உதவிக் காவல் ஆய்வாளர் தினேஷ் கொல்லப்பட்ட இடம், செங்கம்பாடி இரட்டைப் படுகொலைகளான கோட்டையூர் மாதையன், தங்கவேலு படுகொலை செய்யப்பட்ட இடம் உள்ளிட்டவற்றையும் பார்த்தோம். அங்கே சில எஞ்சிய சான்றுகளும் பாறையிலும், மரத்திலும் இன்னும் இருப்பதைக் கண்டோம்.ஏன் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது ? எப்படி குறி வைத்தார்கள்? எப்படி தப்பிச் சென்றனர்? என்பதையெல்லாம் அபியும்,சிவாவும் விளக்கிக் கொண்டே வந்தனர்.

இக்கரை ஒகேனக்கல்லில் மதிய உணவை ஆர்டர் செய்துவிட்டு,மீண்டும் ஆலாம்பாடி கோட்டையைப் போகும்போது நாங்கள் பார்த்த காட்சி அதிர்ச்சியாக இருந்தது.

சாலையின் வலது புறத்தில் கொடுமணலில் கண்டது போன்ற கல்திட்டைகள் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கில் மலைச்சரிவில் ஆற்றை நோக்கியவாறு அமைந்திருந்தன. புனைபாவை தந்த ஆச்சரியத்தால் நாங்களும் தொல்லியாளர்களாக மாறினோம். அந்த இட அமைப்பு குறித்து பல்வேறு அனுமானங்களை தர்க்க ரீதியாக விவாதித்துக்கொண்டோம். இவ்வளவு எண்ணிக்கையிலான இந்த சான்றுகளின்மீது இதுவரை கர்நாடக அரசு எவ்வித ஆய்வும் மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமாக இருந்தது.

கல்திட்டைகளைக் கடந்த பின் ஆஞ்சநேயர் கோயிலைக் கடந்தோம். அந்த கோயில் பூசாரியான ராசுக்கவுண்டரைத்தான் தினேஷ் விரட்டி விரட்டி அடித்துக் கொன்றது. வீரப்பன் கோயிலுக்கு வரும்போது தீப ஆராதனை காட்டியதுதான் அவர் செய்த உச்சபட்ச குற்றம். கூட இருந்த அவர் மனைவி கோவிந்தம்மாவும் அவன் தாக்குதலுக்குத் தப்பவில்லை.உயிர்

மட்டும் போகவில்லை. இந்த சம்பவம் நடக்கையில் சுற்றி இருந்த மக்கள் ஓடி ஒளிந்து தம்மை தற்காத்துக் கொண்டனர். ராசுக்கவுண்டரின் மரண ஓலம் அனைவரின் காதுகளுக்கும் கேட்டவாறே இருந்ததையும் பலர் பதிவு செய்து இருக்கின்றனர். இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட அவரது அலறல் என் காதுக்குக் கேட்பது போல திடீர் பிரமை ஏற்பட்டது.

ஆலம்பாடியில் இரண்டு கிடங்குகளும், சில வழிபாட்டுச் சிலைகளும் உடைய, அகழி வெட்டப்பட்ட சிதிலமான கருங்கல் கோட்டையை நாம் யாருக்கு உரிமை கொண்டாடுவது எனத் தெரியவில்லை. திப்பு சுல்தானா அல்லது விஜயநகரப் பேரரசா? அதுபோல பரந்து விரிந்துகிடந்த கல்திட்டைகளும். குடித்து குளித்துக் கூத்தாடிக் கொண்டிருந்த தமிழக ஹொகேனக்கல்லை,

இக்கரையில் சலசலவென ஓடும் காவிரி ஓசையோடு மட்டும் இணைந்து பார்த்தது எங்கள் பசியை மறக்கச் செய்துவிட்டது.

அதுமட்டுமா?அதே இக்கரை ஹொகேனக்கல்லிலும் சிறந்த சுவையுடன் பரிமாறப்பட்ட சூடான மீன் குழம்பும் வறுவலும், பயணத்தை குழம்பைப் போலவே சுவையுள்ளதாக்கியது.

இவை யாவும் நூலைக் கடந்து எங்களுக்குக் கிடைத்த இலவச இணைப்புகள்.

‘வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்’ நூலில் நாம் காணும் ஒரு முக்கியமான கதை மாந்தரில் ஒருவர் ‘காமராஜ்பேட்டை கோவிந்தன்’. அவர் காவிரி ஆற்றின் மறுகரையில் முழுவடைக்காடுகளில் விவசாயம் செய்து வருகிறார். பரிசல் பயணம் வழியே அவரை சந்தித்து உரையாடுவது, மாலைவேளையை மேலும் இனிமையாக்கும் என நம்பினோம். ஆனால் அவர் , அவசர வேலை காரணமாக கோவிந்தபாடி சென்றுவிட்டதால், திரும்ப வரும் வழியில் அங்கே அவரை சந்தித்துவிட்டு தேநீர் நினைவோடே வீடு திரும்பினோம்.

மலைகள் விழிக்கத் தொடங்குகையில் உள்நுழைந்து,அவை மீண்டும் துயிலுக்குச் செல்லும்போது அவற்றைவிட்டு விலகிச் சென்றது,

பொருத்தமாகவும், பொறாமையாகவும் இருந்தது. ஏனெனில்,

ஊராட்சிக் கோட்டை தாண்டியதும் வீசத் தொடங்கிய இனம்புரியா தோல் ஆலை நெடி, சூளை வரையிலும் தொடர்ந்ததை என்னவென்று சொல்ல?

பாலாறும் காவிரியும் சந்திக்கும் பகுதியில் ஒரு தனி யானை ஒன்று நீண்ட தந்தங்களுடன் குதியாட்டம் போட்டது இதுவரை வேறெங்கும் கண்டிராத அரிதான நிகழ்வு. அதையும் கண்டுகளித்து , பின் கண்டவனவற்றையெல்லாம் ஒருவருக்கொருவர் விவாதித்துப் பேசிவர, மணி ஒன்பதாகிவிட்டது. ஆனாலும் உரையாடல்கள் தீர்ந்தவாறில்லை. தீரப்போவதுமில்லை.

"வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்" நூல் திறனாய்வு!

கட்டுரையாளர்கள்:

தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர். மாநில செயற்குழு உறுப்பினர்.

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

வியாழன் 22 ஏப் 2021