மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி: ரூ.5 லட்சம் நிதியுதவி!

ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி:  ரூ.5 லட்சம் நிதியுதவி!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு உயிரிழந்த 22 பேர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக நாட்டில் பல இடங்களில் ஆக்சிஜன், தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, வெளி மாநிலங்களிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஜாஹிர் உசேன் மாநகராட்சி மருத்துவமனையில் டேங்கரிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டருக்கு ஆக்சிஜன் மாற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக, ஆக்சிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டு, நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தால் 22 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். இதனால் மருத்துவமனையை சுற்றிலும் ஆக்சிஜன் வாயு புகை மண்டலமாக காட்சியளித்தது. இம்மருத்துவமனையில் 171 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆக்சிஜன் வாயு கசிவை கட்டுப்படுத்தினர். ஆக்சிஜன் டேங்கரின் வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக கசிவு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாசிக் மாவட்ட ஆட்சியர் சூரஜ் மந்தாரே, “ ஆக்சிஜன் கசிவு காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நோயாளிகள் ஆக்சிஜனை முறையாகப் பெறுகின்றனர்” என தெரிவித்தார்.

மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில், ஆக்சிஜன் கசிவு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் விசாரணை முடிந்ததும் நாங்கள் முழு தகவலை வெளியிடுவோம் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைச்சர் டாக்டர் ராஜேந்திர ஷிங்கானே, “ இந்த சம்பவம் "துரதிர்ஷ்டவசமானது", இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

”நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு காரணமாக 22 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் மனதில் வலியை ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

”விபத்து செய்தியைக் கேட்டு மன உளைச்சலுக்கு ஆளானேன். இந்த சம்பவத்தில்தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

”நாசிக்கில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பயங்கரமானது. சிகிச்சை பெறும் மற்ற நோயாளிகளுக்கு உடனடியாக உதவி செய்வதுடன், தேவைப்படும் பட்சத்தில் வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்” என மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 21 ஏப் 2021