மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

கமலை விட்டு விலகிய கமீலா நாசர்: காரணம் சரத்குமார்?

கமலை விட்டு விலகிய கமீலா நாசர்: காரணம் சரத்குமார்?

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே அக்கட்சியில் துடிப்பாக இயங்கி வந்தவரான மாநிலச் செயலாளரும் சென்னை மண்டலப் பொறுப்பாளருமான கமீலா நாசர் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்து அண்மையில் கமலுக்கு கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து இன்று (ஏப்ரல் 21) அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட கட்சியில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சந்தோஷ்பாபு ஐஏஎஸ் அறிவித்திருக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் துவங்கியதில் இருந்தே அக்கட்சியில் ஆர்வத்தோடு செயல்பட்டவர் கமீலா நாசர். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னையில் போட்டியிட்டார் கமீலா நாசர். கமல்ஹாசனும் நாசரும் சினிமா உலகத்தைத் தாண்டிய நண்பர்கள். உலகின் மிகச் சிறந்த சினிமாக்களில் இருந்து புத்தகங்கள் வரை இருவரும் விவாதிப்பார்கள். அதை தங்கள் சினிமாக்களிலும் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் நெருங்கிய தோழரான நாசரின் மனைவி கமீலா நாசர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அரசியலில் ஒரு பெண் ஈடுபடுவது அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண் அரசியலில் ஈடுபடுவது என்பது பெருவாரியாக வரவேற்கப்பட்டது. கமல்ஹாசன் சிறந்த வேட்பாளரைத் தேர்வு செய்திருப்பதாக பலரும் அவரை அப்போது பாராட்டினார்கள். இந்நிலையில் தேர்தல் முடிவு மூலம் மேலும் ஆச்சரியங்களை அளித்தார் கமீலா நாசர்.

மத்திய சென்னை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு திமுகவின் தயாநிதிமாறன், அதிமுக கூட்டணியில் பாமக சாம் பால் ஆகியோரை அடுத்து மூன்றாம் இடத்தைப் பெற்றார் கமீலா நாசர். அதுவும் 92 ஆயிரத்து 249 வாக்குகள் பெற்று திமுக, அதிமுகவையே திரும்பிப் பார்க்க வைததார். முதன் முதலாக தேர்தலை சந்தித்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஒரு லட்சத்தையும், ஒரு லட்சத்துக்கு நெருக்கமான வாக்குகளையும் பெற்ற சில தொகுதிகளில் மத்திய சென்னையும் ஒன்றானது. கமலுக்கு தலைநகர் சென்னையில் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக இது கருதப்பட்டது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார் கமீலா நாசர். கமல்ஹாசன் தலைமையில் கூட்டணி என்ற பேச்சு தொடங்கி அதில் முதன் முதலில் சமத்துவ மக்கள் கட்சி இணைந்தது. அதற்குப் பின் இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்தன. கமல்ஹாசனும் சரத்குமாரும், ராதிகா சரத்குமாரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். இது ஆரம்பத்தில் இருந்தே கமீலா நாசருக்கு பிடிக்கவில்லை. அதற்கு தனிப்பட்ட காரணமும் உண்டு. தனிப்பட்ட காரணம் என்பதை விட அதுவும் பொது விஷயத்துக்கான காரணம்தான்.

“2015 நடிகர் சங்கத் தேர்தலின் போது அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் ராதாரவி,பொதுச் செயலாளர் சரத்குமார் ஆகியோரை எதிர்த்து நாசர்- விஷால் அணியினர் போட்டியிட்டனர். இதில் நாசர் -விஷால் அணியினரே வெற்றிபெற்றனர். இந்த தேர்தலுக்காக நடந்த பிரச்சாரத்தில் நாசரை ராதிகாவும், சரத்குமாரும் கடுமையாக விமர்சித்தனர். இந்த மோதல் நடிகர் சங்கத்தில் மட்டுமல்ல தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் தொடர்ந்தது. இந்தப் பின்னணியில்தான் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான அணியில் சரத்குமாரின் கட்சி வந்ததை கமீலா நாசர் விரும்பவில்லை. அவர் இதுகுறித்து தேர்தலுக்கு முன்பே கமலிடம் பேசியிருக்கிறார். ஆனால் கமலோ,’நம்மை விட வயதில் மூத்த கட்சி நம் தலைமையில் கூட்டணிக்கு வருவது நமக்கு சாதகம்தானே. பிற துறையில் நடந்த மோதல்களை எல்லாம் வைத்து இதைப் பார்க்க வேண்டாம்.என்னைக் கூடத்தான் சரத்குமார் விமர்சித்திருக்கிறார்’ என்று கமீலாவிடம் தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரிய அளவுக்கு கமீலா ஆர்வம் காட்டவில்லை. தன்னையும், தன் கணவரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிய ராதிகா, சரத்குமார் ஆகியோருடன் கமல் அரசியல் ரீதியாக நெருக்கம் காட்டுவதால் மெல்ல மெல்ல ஒதுங்கினார் கமீலா. சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்து கமலுக்கு கடிதம் அனுப்பினார் கமீலா. கட்சிக்கு கௌரவத்தைத் தேடித் தந்தவர் என்றாலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையில் செயல்படுகிறாரே என்று கருதிய கமல்ஹாசன், கமீலாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கியுள்ளார். இது கட்சிக்கு ஒரு இழப்புதான்” என்கிறார்கள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளே.

-வேந்தன்

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

புதன் 21 ஏப் 2021