மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

இரவு நேர ஊரடங்கு: எச்சரிக்கும் போலீஸ்!

இரவு நேர ஊரடங்கு: எச்சரிக்கும்  போலீஸ்!

இரவு நேர ஊரடங்கை மீறி வெளியே செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று (ஏப்ரல் 20) இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. நேற்று இரவு 10 மணிக்கு மேல் 38 பெரிய மேம்பாலங்களும், 75 சிறிய மேம்பாலங்களும் மூடப்பட்டன. அண்ணாசாலை, 100 அடி சாலை, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை உள்பட அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருடுபோன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று (ஏப்ரல் 20) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்திய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பேசுகையில், “தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா தொற்றிலிருந்து விடுபட முடியும்.

சென்னையில் இரவு நேர ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 200 இடங்களில் வாகன சோதனை நடைபெறுகிறது. ஊரடங்கு உத்தரவை மீறி இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரின் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும். வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். அதுபோன்று, திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். அதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருமண நிகழ்ச்சிக்கு செல்வோர்கள் கட்டாயம் பத்திரிகைகளை வைத்திருக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், இரவு 10 மணிக்கு மேல் பொது இடங்களில் இருப்போரிடம் விசாரணை நடத்தி, அவர்கள் உரிய இடத்துக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். ரயில், விமான டிக்கெட்டுகள் இருந்தால் குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்படுவர்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த ஏழு மாதங்களில் மட்டும் ரூ.4.39 கோடி மதிப்புள்ள 4,000 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பண மோசடி தொடர்பான வந்த புகார்களின் அடிப்படையில், ரூ.2.80 லட்சம் பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் செயல்பட்டு வந்த 7 போலி கால் சென்டர்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் ரூ.10 கோடிக்கும் மேல் பண மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனக் கூறினார்.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 21 ஏப் 2021