மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

நான் சொன்னதைக் கேட்டிருந்தால்... எடப்பாடிக்கு எதிராக பன்னீரின் ஆக்‌ஷன் பிளான்?

நான் சொன்னதைக் கேட்டிருந்தால்... எடப்பாடிக்கு எதிராக  பன்னீரின் ஆக்‌ஷன் பிளான்?

சட்டமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகமே காத்திருக்கும் நிலையில், கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு கணக்குகளைப் போட்டு வருகின்றனர்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேர்தலுக்காக தமிழகத்தின் பல பகுதிகளுக்கு பரவலாக பிரச்சாரம் சென்றார். எடப்பாடியும் அவரும் இணைந்து பிரச்சாரம் செய்வது என்ற உத்தியைக் கைவிட்டு, இருவருமே தனித்தனியாகவே பிரச்சாரங்களில் பங்கேற்றார்கள்.

இந்த நிலையில் தேர்தலுக்குப் பின் தனக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகளிடமும், நெருக்கமான பத்திரிகையாளர்களிடமும் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் சிலர் பன்னீரிடம், ‘அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்’ என்று சொல்ல தனக்கே உரித்தான டிரேட் மார்க் புன்னகையை உதிர்த்திருக்கிறார் ஓபிஎஸ்.

அதேநேரம் தன்னை சந்திக்க வரும் அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்களிடம், ‘அம்மா இருக்கும்போது ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் என்னைக் கூப்பிட்டுப் பேசுவாங்க, ‘தமிழ்நாடு ஃபுல்லா என்ன நிலைமை’னு கேட்பாங்க. அம்மா கேட்குறாங்கனு தயங்காம நான் உண்மைகளைச் சொல்லிவிடுவேன். ஜெயிக்குற மாதிரி இருக்கும்மா, கஷ்டமா இருக்கும்மானு அம்மாகிட்ட சொல்லுவேன்.

அந்த அனுபவத்துல சொல்றேன். இந்தத் தேர்தல் அதிமுகவுக்கு கஷ்டமான ரிசல்ட்டைதான் கொடுக்கும். நான் தேர்தலுக்கு முன்னாடி சொன்ன எதையுமே எடப்பாடி பழனிசாமி கேட்கலை. அமமுகவை நம்மளோட வைச்சிக்கிட்டு தேர்தலை சந்திக்கலாம்னு நினைச்சேன். இதப் பத்தி கூட்டணி பேச வந்த அமித் ஷாவிடம் கூட பேசினேன். ஆனால், எடப்பாடி அதுக்கு சம்மதிக்கலை. அப்புறம் தேர்தல் நெருங்குற நேரத்துல தேமுதிக நம் கூட்டணியை விட்டுப் போச்சு. அது எவ்வளவு சின்ன கட்சியா இருந்தாலும், தேர்தல் நேரத்துல கூட்டணி உடைஞ்சது நமக்கு மைனஸ்தான். தேமுதிகவைக் கூட்டணியில் வைச்சிக்கறதைப் பத்தி எடப்பாடிக்கு ஆரம்பத்துலயே அபிப்ராயம் இல்லை.

பிரேமலதா தேர்தலுக்கு முன்னாடி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துனப்ப எடப்பாடியைப் போய் பார்த்தாங்க. அவரைப் பார்த்துட்டு என்னை பார்க்க வந்தாங்க. அவங்க என்னைப் பார்க்க வர்றதுக்குள்ளயே எனக்கு போன் பண்ணி, ‘அவங்ககிட்ட பார்த்து பேசுங்க. அவங்க நாலு எம்.எல்.ஏ. ஜெயிச்சா கூட நம்மளை மிரட்டுவாங்க’னு சொல்றாரு. பிரேமலதா பதினைஞ்சு சீட்டுக்குத் தயாரா இருந்தாங்க. ஆனா, அவங்களை கூட்டணியில சேர்க்கக் கூடாதுங்கறதுல எடப்பாடி தெளிவா இருந்தாரு. இப்படி அமமுகவைக் சேர்க்கக் கூடாது, தேமுதிகவைக் சேர்க்கக் கூடாதுனு சொன்னவர். இப்ப தேர்தலுக்குப் பிறகு மீண்டும் நாமதான் ஆட்சியை பிடிப்போம்னு நம்பிக்கையா சொல்லிக்கிட்டிருக்காரு. எப்படி சொல்றாருன்னு எனக்கும் புரியலை’ என்று சொல்லியிருக்கிறார் ஓ.பன்னீர்.

ஆக, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை கார்னர் செய்வதற்குத் தயாராகிறாரோ பன்னீர் என்ற விவாதங்கள் இப்போது அதிமுகவின் டாப் லெவலில் நடந்துகொண்டிருக்கின்றன.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 21 ஏப் 2021