மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

அப்பல்லோ வகையறாவும் ஆரம்ப சுகாதார தொகையறாவும்!

அப்பல்லோ வகையறாவும் ஆரம்ப சுகாதார தொகையறாவும்!

- உலக சுகாதார நாள் சிறப்புக் கட்டுரை

உலகையே உலுக்கியெடுத்துக்கொண்டிருக்கும் இந்தக் கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில், இரண்டாவது உலக நல(சுகாதார) நாளும் (ஏப்ரல் 7) வந்துசென்றுவிட்டது. கடந்த ஆண்டு உலக நல நாளின் நோக்க முழக்கம், செவிலியர்களையும் பேறுகால உதவியாளர்களையும் கவனித்துக்கொள்ளுமாறு அறைகூவல் விடுத்தது. அவர்களுடைய பணியின் உன்னதத்தை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வலியுறுத்தியது.

இதோ அதோ என போய்விடுவதைப் போல போக்கு காட்டிக்கொண்டிருக்கும் கோவிட் பெருந்தொற்று, இரண்டாவது அலையாக இன்னும் வாட்டிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இனிதான் அதன் உச்சம் இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறியிருப்பது, கலக்கத்தை சற்றேனும் அதிகரிக்கத்தான் செய்கிறது. இந்த நிலைமையில், ’பாகுபாடில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவதை’ இந்த ஆண்டுக்கான உலக நல நாள் நோக்கமாக உலக நல நிறுவனம் (டபிள்யூ.எச்.ஓ.) அறிவித்துள்ளது. இதையொட்டி அந்த நிறுவனம் முன்வைத்திருக்கும் கருத்துகளும் விவரங்களும் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டுப் பார்க்கச்செய்கின்றன.

கடந்த 1ஆம் தேதி நிலவரப்படி, உலக அளவில் 28 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 13 கோடி பேர் தொற்றுக்கு ஆளாகி, அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நீடிக்கும் நலிவுகள் பீடித்துள்ளன.

பத்து லட்சக்கணக்கானவர்கள் தங்களின் உணர்வுகள், சமூக, பொருளாதார நலன்களை இந்தப் பெருந்தொற்றுக்கு விலையாகக் கொடுத்துள்ளனர். வேலையின்மை, வருவாய் இழப்பு ஆகியவற்றால் உணவுப் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. உலகம் முழுவதும் பகுதியளவோ முழுமையாகவோ சுகாதார சேவை சீர்குலைந்து போயிருக்கிறது. இதனால் மக்களின் மன, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. கோவிட் நோய்க்கு கொடுக்கப்படும் விலை மிகவும் அதிகமானது. அது மக்களுக்கு பலவிதமான பிரச்னைகளைக் கொண்டுவந்துள்ளது. ஆகவே, அதன் சமூக பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்வதைவிட சுகாதார சமத்துவத்தை மிகமிக முக்கியமானதாகக் கருதுகிறோம். இதுவே இந்த சுகாதார தினத்தின் நோக்கம் என நீள்கிறது உ.சு.நிறுவனத்தின் நிகழாண்டு நல நாள் பிரகடனம்.

கொரோனாவை எதிர்கொள்வதில், ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி 50 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், 86% அதிக வருவாய் ஈட்டும் நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன; இதேவேளையில், 0.1% தடுப்பூசிகளே குறைந்த வருவாய் நாடுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த அளவுக்குதான் இந்த நாடுகளுக்கு கிடைத்திருக்கின்றன.

இந்த நாடுகள் தடுப்பூசி வருகைக்காகக் காத்திருக்கின்றன. நவீன உலகத்தில் சுகாதார சமத்துவத்தை உண்டாக்கும் வளங்களைக் கொண்ட நவீன காலகட்டத்தில், இந்த அநீதி ஏற்றுக்கொள்ளமுடியாதது ஆகும்.

சுகாதார சமத்துவமில்லாத தன்மையானது நாடுகளுக்கிடையே மட்டுமல்ல, நாட்டுக்கு உள்ளேயும், வீடுகளுக்கு ஏற்பவும் நிலவுகிறது என்பதற்கும், உலக சுகாதார நிறுவனம் சான்றுகளைக் காட்டுகிறது.

நாடுகளுக்கு இடையே

ஆப்பிரிக்காவின் லெசாத்தோ நாட்டில் பிறக்கும் குழந்தைக்கு 51 வயதுதான் அதிகபட்ச ஆயுள்காலம்; இதுவே, ஜப்பானில் பிறக்கும் குழந்தைக்கோ 84 ஆண்டுகள்! 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் உயிரிழக்கும் துயரம், ஐரோப்பாவைவிட ஆப்பிரிக்காவில் 8 மடங்கு அதிகம். பெரும்பாலான - 99% பேறுகால மரணங்கள் வளரும் நாடுகளில்தான் நிகழ்கின்றன.

நாடுகளுக்குள்

5 வயதுக்கு முன்னரே உயிரிழக்கநேரும் சூழல், பணக்காரக் குடியிருப்புகளைவிட ஏழ்மைநிலையில் உள்ள குழந்தைகளின் குடியிருப்புப் பகுதிகளில் 2 மடங்கு அதிகமாக இருக்கிறது. சிறார் தொகையில் 20 % ஆக இருக்கும் மிக வறிய குழந்தைகள், 20% பணக்காரராக இருக்கும் குழந்தைகளைவிட தீவிர மன நலச் சிக்கல்களுக்கு ஆளாகின்றன.

குடியிருப்புகளுக்கு இடையே

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் குறைந்த வசதிகளைக் கொண்ட பகுதிகளில் ஆண்களின் வாழ்நாள் காலம் 66.2 ஆண்டுகள். இதுவே, நகரின் அதிக வசதிகள் உள்ள இடங்களில் 81.7 ஆண்டுகள்வரை வாழ்நாள் காலம். லண்டனில் வெஸ்ட்மினிஸ்டரிலிருந்து கிழக்குக்கு நிலத்தடி ரயிலில் போகையில் ஒவ்வொரு நிறுத்தம் உள்ள பகுதியும் ஓராண்டு வாழ்நாள் காலம் குறையும்படியாக இருக்கிறது.

அனைவருக்குமான சுகாதார சேவை

ஒவ்வொருவருக்கும் அவருக்கு தேவைப்படும்போது அவர்கள் பெறக்கூடிய கட்டணத்தில் உயர்தர சுகாதார சேவையைப் பெறும் நிலையை ஏற்படுத்துவதே, அனைவருக்குமான சுகாதார சேவை எனப்படுகிறது. வரும் 2030-க்குள் இந்த நிலையை அடைவது என உ.சு.நி. குறிக்கோளாக வரித்திருக்கிறது.

சுகாதாரம் தொடர்பான செலவுகளால் 10 கோடி பேர் ஆண்டுக்கு ஏழ்மை நிலையை அடைகின்றனர். உலக மக்களில் பாதி பேரால் அத்தியாவசிய சுகாதார சேவைகளைப் பெறமுடியவில்லை. கட்டணமோ தொலைவோ மட்டும் இதற்கு காரணம் இல்லை; பாகுபாடு காட்டப்படுவதும் உரிய சிகிச்சையைப் பெறமுடியாதபடி செய்துகிறது. சுகாதாரம் பற்றிய போதுமான அறிவில்லாமையும் இன்னொரு முக்கிய காரணம் என்று கூறுகிறது, உ.சு.நி.

சுகாதார சமத்துவம் என்றால்

பாகுபாடில்லாத, மக்கள் பிரிவினரிடையே தவிர்க்கக்கூடியதும் சரிசெய்யக்கூடியதுமான வேறுபாடுகள் இல்லாமலும் சுகாதாரமாக இருக்கக்கூடிய ஒரு நிலைமை. ஒவ்வொருவரும் சுகாதாரம், நலமான வாழ்வை அடையும் செயல்பாடு எனலாம்.

ஆரம்ப சுகாதார சேவைக்கு முன்னுரிமை

இந்தப் பார்வை, சுகாதாரத்தை மனிதவுரிமையாகக் கருதச்செய்கிறது. மக்கள் வசிக்கும் இடங்களில் சிகிச்சை அளிப்பது பற்றி அந்த குறிப்பிட்ட மக்களே தீர்மானிக்கக்கூடிய நிலை. சுகாதாரத்தைப் பேணுகின்ற, மேம்படுத்துகின்ற துறைகளைச் சேர்ந்தவர்களிடம் ஒத்துழைப்பு வேண்டும். இதுவே அனைவருக்குமான சுகாதாரத்தை வழங்குவதற்கான சரிசமமான ஒரு வழிமுறையாக விளங்கும்.

சுகாதார சமத்துவம் இல்லாமையை துறைரீதியாக கண்காணித்துவரவேண்டும். சேவைகளின் பலன்களைக் கண்டறிவது, மற்ற துறைகளுடன் இணைந்து வேலைசெய்வதன் மூலம் இதைச் செய்யமுடியும்.

வயது, பாலினம், கல்வி மற்றும் வருவாய் போன்றவற்றின் அடிப்படையில் சமமில்லாமல் நடத்தப்படுவதால் பல்வேறு மக்கள் பிரிவினர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களைக் கண்டறியக்கூடிய தரவுகளை குறிப்பானவையாகத் திரட்டவேண்டும்.

மூன்றாவதாக, மற்ற துறைகளுடன் சுகாதாரத் துறையும் கைகோர்த்து செயல்படவேண்டும். சமூகசேவைகள், மக்களின் வாழ்நிலை, கல்வி, விவசாயம், சுற்றுச்சூழல், அடிப்படைக் கட்டமைப்பு, போக்குவரத்து, நிதி, சமூகப் பாதுகாப்பு ஆகியவை இதில் முதன்மையானவை.

சுகாதாரம் வலுவாகப் பேணப்படும் இடங்களை உற்றுநோக்கும் ஆய்வானது, அதன் பின்னால் இருக்கும் சமூக, பொருளாதாரக் காரணிகளை எடுத்துக்காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, 1990ஆம் ஆண்டு முதல் 2010வரையிலான காலகட்டத்தில், சுகாதாரத் துறையில் -அதாவது, தடுப்பூசி, சுகாதார வழிகாட்டல், அறிவுறுத்தல், குழந்தைநலப் பராமரிப்பு, ஆரோக்கியமான குழந்தைப்பேறு, பேறுகால, பிரசவகால சேவை மற்றும் குடும்பக்கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலமாக செய்யப்பட்ட செலவானது, 5 வயதுக்குக் குறைவான இறப்புவீதத்தை பாதியளவு குறைத்திருந்தது. மீதிப் பாதியளவைக் குறைத்தது, சுகாதாரம் தொடர்புடைய பிரிவுகளில்- அதாவது, கல்வி, பெண்களின் அரசியல் சமூகபொருளாதாரப் பங்கேற்பு மற்றும் (தூய்மையான குடிநீர், எரிபொருள்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பெறும் வசதி கொண்ட) சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றின் மேம்பாடு, இனப்பெருக்கம், ஏழ்மை இரண்டையும் குறைத்ததும் ஆகும். எல்லா துறைகளும் எப்படி சுகாதாரம், நலவாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்பதை இது காட்டுகிறது. அத்துடன், சுகாதார சமத்துவமின்மையைக் குறைக்கும் கடப்பாட்டையும் நமக்கு உணர்த்துகிறது.

குறிப்பாக, இந்த பெருந்தொற்றுக் காலத்தில் என்னமாதிரியான நிலைமைகள் எல்லாம் சுகாதார சமமின்மையை உண்டாக்குகின்றன என்பதை கூடுதலாக கவனத்துக்கு கொண்டுவருகிறது. அவற்றில் சில:

1. பாதுகாப்பற்ற, தரம் குறைவான, அடர்த்தியான குடியிருப்புகள் வன்முறைக்கும் காயங்கள் ஏற்படவும் தொற்றுகின்ற தொற்றாத நோய்களை உருவாக்கி உடல்நலிவுக்கு காரணமாகவும் காரணமாகின்றன. வீட்டிலேயே அதிக நேரம் இருக்கின்றவர்கள் குறிப்பாக உடல் இயலாமை கொண்ட முதியோர், சிறு பிள்ளைகள், பல இடங்களில் மொத்த குடும்பமுமேகூட உடலளவிலும் மனதளவிலும் பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். அதிகப்படியான வீட்டு வெம்மை சூட்டுத்தாக்குதலுக்கும் இதய நோய்கள், பக்கவாதம் ஏற்படவும் வழிவகுக்கிறது. மோசமான வீடமைப்புகளில் நச்சுத்தன்மை வாய்ந்த பொருள்கள், காற்றுமாசுபாடு, பராமரிப்பு அபாயங்கள் போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.

குறிப்பாக கோவிட் காலத்தில், ‘வீட்டுக்கு உள்ளேயே இருங்கள்’ எனும் உலகளாவிய வழிகாட்டலால், மோசமான வீட்டுவசதி உடையவர்கள் கூடுதலான சுகாதார இடர்களை எதிர்கொள்கின்றனர். நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் வாழும் 100 கோடி பேர் மோசமான குடியிருப்பு, தூய்மையின்மையால் கோவிட் தொற்றுக்கு ஆளாகும் நிலைமையில் உள்ளனர். வீடற்றோரின் நிலைமை இதைவிட மோசம். தொற்றும் நோய்கள், தொற்றா நோய்கள், உடல், மன நலிவுகளை எதிர்கொள்கின்றனர்.

இதற்கு மாற்று?

பாதுகாப்பான, ஆரோக்கியமான, அணுகக்கூடிய வகையில் இருக்கும்படி வீடுகளை அமைப்பதை உறுதிசெய்யவேண்டும். இதை சமூக வீடமைப்பு என்று கூறலாம். இப்படியான தேவை உள்ளவர்களுக்கு கடனும் மானியமும் வழங்கப்படவேண்டும். ஆரோக்கியமான வீடமைப்பானது அண்டை அயலார் இருப்பதை உறுதிப்படுத்தக்கூடியதும் ஆகும். குறிப்பாக முதியோர் தனித்துவிடப்படும் இடங்களில் இதன் தேவை மிகமுக்கியமானதாகும். இந்த ஆரோக்கியமான வீடமைப்பில் சுகாதாரத் துறையும் மற்ற துறைகளும் கைகோர்த்த கூட்டு முயற்சி அவசியமானதாகும்.

2. உணவு, சத்து, சுகாதாரம்

ஆரோக்கியமான நல்ல சத்தான உணவு எல்லா வயதினரின் நலத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமானதாகும். குறைந்த வருவாய் கொண்டவர்கள், விளிம்புநிலை மக்கள் பிரிவினருக்கு பாதுகாப்பான, சத்தான உணவு கிடைப்பது சிரமமாக இருக்கிறது. நல்ல காய்கனிகளை வாங்குவதற்கு இவர்கள் நெடுந்தொலைவு செல்லவேண்டியுள்ளது. ஆரோக்கியமற்ற உணவுகளை -அதீதமான சர்க்கரையும் உப்பும்கொண்ட- இனிப்பூட்டப்பட்ட பானங்களை சந்தைப்படுத்தல் போன்ற கார்ப்பரேட் பணிகளில் விளிம்புநிலை மக்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதையொட்டி மோசமான ஊட்டக்குறைபாட்டுக்கு ஆளாகின்றனர். இப்போதைக்கு ஐந்து வயதுக்குக் குறைவான 4.7 கோடி குழந்தைகள் அவர்களின் உயரத்தைவிட மிகவும் குறைந்தவீதத்தில் ஒல்லியாக இருக்கின்றனர்; இதேவேளையில் 3.83 கோடி குழந்தைகள் இதே வயதுப் பிரிவில் அதீத எடை கொண்டவர்களாக இருக்கின்றனர். ஒற்றைப் பெற்றோர் அல்லது குறைந்த வருவாய் குடும்பங்களில் ஆரோக்கியமான உணவை குழந்தைக்கு தருவதற்கான நேரமோ பணமோ இல்லாமல், கடைகளில் குறைந்த விலைக்கு அடைக்கப்பட்ட உணவுகளை வாங்கித்தருகின்றனர். அவற்றில் அதிகமாக இருக்கும் உப்பும் சர்க்கரையும் கொழுப்பும்கூட குழந்தைகளுக்கு சத்துக்குறைவை உண்டாக்குகின்றன.

கோவிட் தொற்றானது கடந்த ஆண்டுக்குள் சத்தில்லாதவர்களின் எண்ணிக்கையை 69 கோடியிலிருந்து இன்னும் 13.2 கோடி பேர் எனும் அளவுக்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பல நாடுகளில் குழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினர் இடையே அதீத எடையையும் உடல் பருமனையும் அதிகரித்தும் உள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னர் 67.2 கோடி விடலையர் உடல்பருமன் கொண்டவர்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். கோவிட் தொற்றால் மோசமான நலிவை உண்டாக்கும் அபாயத்தை உடல்பருமன் அதிகரிக்கிறது. எல்லை மூடல், வர்த்தகத் தடைகள், கட்டுப்பாட்டு வரம்புகள் ஆகியன விவசாயிகளுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்துகின்றன. அவர்களால் தங்களின் விளைச்சலை விற்கமுடியாமலும் தேவையான இடுபொருள்களை வாங்கமுடியாமலும் அறுவடை போன்றவற்றுக்கு உரிய விவசாயப் பணியாளர்களை வேலைக்கு அழைக்கமுடியாமலும் போகிறது. இதனால் உள்நாட்டு, பன்னாட்டு உணவு வழங்கல் கண்ணியும் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பான, விதவிதமான ஆரோக்கியமான உணவுவகைகள் கிடைக்காமலும் ஆனது.

இதற்கான முக்கிய தீர்வாக, இப்போது குறைந்த வருவாய்ப் பிரிவினரின் குடும்பங்களில் நிதியுதவி அளிப்பதன் மூலம் பச்சிளம் குழந்தைகளின் 7 சதவீத சத்துக்குறைபாட்டை மேலும் குறைக்கமுடியும். இது சரியாக நடைபெறுவதற்கு குடும்பத் தலைவியர்களிடம் தொகையைக் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும். (அதாவது குடும்பத்தலைவராக இருக்கும் ஆண்களிடம் நிதி தரப்படுவதால் குழந்தைகளின் சத்துக்குறைபாட்டை அது போக்கவில்லை என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.) இது மட்டுமின்றி, பணியாற்றும் தாய்மார்கள் முதலியவர்களுக்கு தாய்ப்பால் ஊட்ட ஆதரவளிப்பது, அதை அதிகப்படுத்துவது போன்றவை, குழந்தைகளுக்கான படிகள், ஆரோக்கியமான பள்ளி உணவுகள், குடியிருப்பு, உணவுப்பொருள் வழங்கல் முயற்சிகள், கோவிட் காலத்திய வேலைவாய்ப்பு தக்கவைப்பு, மீட்பு ஆகியவை துணைநிற்கும்.

3. கல்வியும் சுகாதாரமும்

கல்வி பெறாதவர்களின் உடல்நலமானது ஓரளவுக்கு கல்வி பெற்றவர்களை ஒப்பிட இரண்டு மடங்கு மோசமாக இருக்கிறது. கல்வியானது நீடித்த வேலைவாய்ப்புக்கும் கற்றலுக்கும் சமூகப் பங்களிப்புக்கும் முடிவெடுப்பதற்கும் குறிப்பாக பெண்கல்வியானது குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, வாழ்க்கைவசதிகள், குடும்ப வன்முறைக் குறைப்பு, நலவியலை அறிந்துகொண்டு சிறந்த சிகிச்சைகளைப் பெறுவதற்கும் பயன்படுகிறது.

கோவிட், கல்வி, சுகாதாரம்:

ஐநா பொருளாதார கல்விப் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவின் கணக்குப்படி உலக அளவில் 2.38 கோடி குழந்தைகள், விடலையர், இளைஞர்கள் கோவிட் காரணமாக பள்ளிக்கு திரும்பிவர முடியாதநிலையில் உள்ளனர்; அவர்களில் 1.12 பேர் பெண் பிள்ளைகள். பள்ளிக்குப் போகாதநிலையில் சுகாதார, ஊட்டச்சத்து கிடைக்காத நிலையில் கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பசியிலும் ஏழ்மையிலும் சத்துக்குறைபாட்டாலும் மனநலிவாலும் மோசமாகத் துன்பப்படுகின்றனர். கோவிட் தொற்றிலிருந்து இவர்கள் மீளும் வழிவகைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

4. பாதுகாப்பான சூழலும் சுகாதாரமும்

உலக மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர்- 300 கோடி பேர் தங்கள் வீட்டில் கைகழுவுவதற்கு போதுமான தண்ணீரும் சோப்பும் இல்லாமல்தான் வாழ்கின்றனர். பாதிக்குப் பாதி பள்ளிகளிலும் இதைப்போலவே கைகழுவும் சோப்பும் போதுமான தண்ணீரும் இல்லை. இதனால் 90 கோடி பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவக் கட்டமைப்புகளில் 43 சதவீதம் இடங்களில் கைகழுவும் வசதியே இல்லை. சமூகத் தீங்கானது குடும்பத்திலோ அவர்களின் சுற்றத்திலோ வன்முறைக்கு ஆளாவதை அதிகரிக்கிறது.

தற்போதைக்கு ஆண்டுதோறும் காற்றுமாசுபாட்டின் காரணமாக 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதாவது எட்டு மரணங்களில் ஒன்று. வெளிப்புறக் காற்றில் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்திருக்கும் வரம்பைவிட அதிகமாக மாசுபட்ட காற்றையே 90 சதவீத மக்கள் சுவாசிக்கின்றனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு மாசுபாடு, புதைம எரிபொருள்களை எரிப்பதால் உண்டாவதாகும். இது பருவநிலை தப்புதலுக்கு வழிவகுக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க, 28 லட்சம் மக்கள் சமைப்பதற்கு மாசுபாடு தரக்கூடிய எரிபொருளையே சார்ந்திருக்கின்றனர். இதனால் சமையலறைப் புகையால் வீடுகளில் 38 லட்சம் பேர் உயிரிழக்க நேர்கிறது.

கோவிட், பாதுகாப்பான சூழல், சுகாதாரம்:

கைகழுவும் வசதி இல்லாததால் மட்டுமே 100 கோடி பேர் உடனடியாக கொரோனாவால் பாதிப்படையும் நிலையில் இருக்கின்றனர். சமையலறை புகைச் சூழலில் நீண்ட காலம் இருப்பவர்களுக்கு மற்ற நோய்களைவிட கோவிட் தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பும் நோயேற்புத்தன்மையும் அதிகரிக்கிறது. மேலும் கோவிட் காரணமான வருவாய்க் குறைவும் மாசில்லா எரிபொருளைப் பயன்படுத்தமுடியாதபடி கொண்டுவருகிறது. பல நாடுகளில் வீட்டுக்குள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மீதான வன்முறையை இந்தக் கொரோனா அதிகரித்துவிட்டது.

மாசுதராத எரிபொருள்களை வழங்குவதன் மூலம் உடனடி சுவாசத் தொற்று, நாள்பட்ட நெஞ்சக நோய்கள், இதயநோய்கள், பக்கவாதம், புற்றுநோய், தீக்காயங்கள் ஏற்படாமல் தடுக்கமுடியும். தண்ணீரையும் துப்புரவான சுற்றுப்புறத்தையும் உறுதிசெய்யவும் வன்முறையைக் குறைக்கவும் பலதுறைகளின் கூட்டுச்செயல்பாடு அவசியம். தெருக்கள், கட்டடங்கள், விளையாட்டுவசதிகளை நவீனப்படுத்த வகைசெய்யும் நகர்ப்புற வளர்ச்சிக் கொள்கைகள் தனிநபர்களுக்கிடையிலான வன்முறையைக் குறைக்கமுடியும்.

5. போக்குவரத்தும் சுகாதாரமும்

போக்குவரத்து தொடர்பான சுகாதார சவால்களால் ஆண்டுதோறும் பத்து லட்சக்கணக்கானவர்களின் உயிரிழப்புக்குக் காரணமாகின்றன. எடுத்துக்காட்டாக, ஆண்டுதோறும் 13 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்; இவை பெரும்பாலும் குறைந்த, மைய அளவு வருவாய் கொண்ட நாடுகளில்தான் நிகழ்கின்றன என்கிறது உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிவரம். இன்னொரு முக்கிய விவரம், 32 லட்சம் பேர் உடல் இயக்கம் போதுமானதாக இல்லாத காரணத்தாலேயே இறந்துபோகின்றனர். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் சமூகப் பங்களிப்பில் ஈடுபடமுடியாதபடி போக்குவரத்து வசதி நெருக்கடியாக இருக்கிறது.

கோவிட், போக்குவரத்து, சுகாதாரம்:

கோவிட் காலத்தில் தனிநபர் இடைவெளி நடைமுறைக்கு வந்தபிறகு பொதுப்போக்குவரத்துப் பயன்பாடு குறைவு போன்ற முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிந்தங்கிய நிலையில் உள்ள மக்கள் இதனால் வேலைக்குப் போய்வருவது சிரமமாகியுள்ளது. இதில் சாதகமான மாற்றம் உண்டு என்றால், ஏராளமானவர்களை மிதிவண்டி ஓட்டவைத்திருக்கிறது, கொரோனா பெருந்தொற்று.

நெரிசலைக் குறைப்பது, பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதால் மாசுபாட்டைக் குறைக்கமுடியும். போக்குவரத்து முறைகளை வடிவமைக்கும்போது இதன் அடிப்படையில் செயல்படுத்தவேண்டும். இப்படிச் செய்தால் பொதுப்போக்குவரத்து நீடித்ததாகவும் சுகாதார சமூக ஒன்றிணைவை மேம்படுத்துவதாகவும் மனிதவள மேம்பாட்டுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிபுரியும்.

ஆரோக்கிய சமநிலை கொண்ட ஒரு வாழ்க்கையைக் கட்டமைப்பதற்காக, உ.சு.நி வெளியிட்டிருக்கும் இந்த ’உலக சுகாதார நாள்’ விளக்கக் கோவை, தமிழ்நாட்டு சுகாதார, மருத்துவக் கட்டமைப்பையும் இயல்பாகவே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. அகில இந்திய அளவில் ஒப்பிட தனித்தன்மை வாய்ந்ததாகவும் ஊராட்சிகள் அளவில் சுகாதார நிலையங்களைக் கொண்ட ஒரு கட்டமைப்பை தமிழ்நாடு உருவாக்கி, பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. வட்டார மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், சில மாவட்டங்களைத் தவிர்த்து மாவட்டநிலையில் மருத்துவக்கல்லூரிகள் என தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பு பலம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான பராமரிப்பு சமூகநலத் துறையின் சத்துணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் மூலமாக ஓரளவுக்கு பலமான அடிப்படைகளைக் கொண்டதாக இருக்கிறது. பள்ளிகளில் உயர்நிலை மாணவர்கள்வரை மதிய உணவு வழங்கப்படுகிறது.

குடியிருப்புகளைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே குறிப்பிட்டுச் சொல்லும்படியாக, சென்னை போன்ற இடங்களில் குடிசைமாற்று வாரியம் அமைக்கப்பட்டு அடிப்படை வசதிகளற்ற குடிசைப்பகுதிகள் ஒரு படி மேல் கொண்டுசெல்லப்பட்டது. வளர்ச்சியடைந்த பல மாநிலங்களை ஒப்பிட இங்கு பொதுப்போக்குவரத்தானது, அகில இந்திய அளவில் திறனைக் காட்டி பரிசுகளை தொடர்ச்சியாக வெல்லும் அளவுக்கு மேம்பட்ட நிலையில் இருக்கிறது.

பட்டதாரிப் பெண் திருமணத்துக்கு அரசு நிதியுதவி எனும் திட்டத்தால் கல்லூரிப் பக்கம் எட்டிப்பார்த்த எத்தனையோ ஆயிரம் குடும்பங்களின் ஏற்றம், ஐநா சொல்லும் முன்னரே தமிழ்நாடு சாதித்து எட்டிய ஒரு முக்கிய உயர்நிலை.

இன்னும் தொடர்ந்தால் இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும் என்பது ஒரு புறம். ஒரு நூற்றாண்டைக் கடந்துவிட்ட தமிழ்நாட்டின் சமூக நீதி இயக்கம் தொடங்கிவைத்த - இன்றைக்கு ஐநா அமைப்பு முழங்குகின்ற- வளம்குன்றா வளர்ச்சிக்கான தொடர்ச்சி இருக்கிறதா? சீராக இருக்கிறதா? என்றால், சாதகமான விடை ஒன்றும் இல்லை.

நரசிம்மராவ் ஆட்சியில் வந்த புதிய புதிய கொள்கைகள், கல்வி, பொருளாதாரம் மட்டுமில்லாமல், சமூகத்தின் சகலத்தையும் கலைத்துப்போட்டுவிட்டது. மனிதர்களின் மன, உடல் சுகத்துக்கான எந்த ஆதாரத்தையும் அது விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் அது பாதிப்படையச் செய்துவிட்டது. விளைவு, அப்பல்லோ வரிசை மருத்துவமனைகளில் சிகிச்சைபெறுவோரும் ஆரம்ப சுகாதார நிலையமே நம்பிக்கை நட்சத்திரம் என்பதுமாக இருப்போருமாக எதிரெதிர்த் திசைப் பயணிகளாக, ஒரே நாட்டின் மக்களாக இருக்கிறார்கள்.

இதிலிருந்து மீள அகில உலகப் பாடமெல்லாம் நமக்கு தேவையே இல்லை; ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட சமூக நீதி இயக்கமே நமக்கு சரியான வழிகாட்டல்!

பாகுபாடு இல்லாத நலமான உலகம்? - ஐநாவின் கனவு நனவாகுமா?

- இர.இரா.தமிழ்க்கனல், பத்திரிகையாளர் மற்றும் ஆட்சியியல் விமர்சகர்

தகவல் மூலம்: உலக சுகாதார நிறுவனத்தின் ‘ஆரோக்கிய சமநிலையும் அதற்கான காரணிகளும்’ வெளியீடு.

.

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

புதன் 21 ஏப் 2021