மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

கொடைக்கானலில் ஸ்டாலினை அடைந்த எக்சிட் போல் ரிசல்ட்!

கொடைக்கானலில் ஸ்டாலினை அடைந்த எக்சிட் போல் ரிசல்ட்!

தேர்தல் பரபரப்பு இன்னும் முடியாத நிலையிலும், பயணக் களைப்புக்கான சிரம பரிகாரமாக ஏப்ரல் 16ஆம் தேதி குடும்பத்தோடு கொடைக்கானல் சென்றார் திமுக தலைவர் ஸ்டாலின். 19ஆம் தேதிவரை அங்கே கொடைக்கானலில் இருப்பதாகத் திட்டமிட்டிருந்த ஸ்டாலின், இரு நாட்கள் அதிகமாகவே இருந்துவிட்டு இன்று (ஏப்ரல் 21) சென்னை புறப்படுகிறார்.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், ஸ்டாலின் தங்கியிருப்பது ஸ்டார் ஹோட்டல் என்பதாலும், தங்கியிருப்பது ஸ்டாலின் என்பதாலும் உடனடியாக அவரை காலி செய்யச் சொல்லுதல் என்று எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

கொடைக்கானல் தாமரா ஹோட்டலில் தங்கிய ஸ்டாலின் குடும்பத்தோடு சில நாட்களை தொடர்ந்து செலவழித்ததில் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். பேரக் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடுதல், குடும்பத்தினரோடு விரிவாகப் பேசுதல், கலைஞர் பற்றிய நினைவலைகளில் மூழ்குதல் என்று ரொம்பவே மகிழ்ச்சியாகவே ஸ்டாலினின் கொடைக்கானல் நாட்கள் சென்றிருக்கின்றன. தேர்தல் பிரச்சாரத்தில் தனது அனுபவங்களையும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார் ஸ்டாலின்.

இன்னொரு பக்கம் மின்னம்பலத்தில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல தேர்தல் பணிகள் பற்றிய ஆய்வு, எக்சிட் போல் கணிப்புகளைப் பற்றிய விவாதம், அதை அடிப்படையாக வைத்து அடுத்து திமுகதான் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில் அமைச்சரவை, புதிய அரசின் அதிகாரிகள் என்பதுவரை ஸ்டாலினின் டிஸ்கஷன் போயிருக்கிறது.

ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் மீடியாக்களின் மேல்மட்டத்தினரோடு நல்ல தொடர்பில் இருப்பவர். இந்தியாவின் முக்கியமான மீடியாக்கள் தமிழகத் தேர்தலுக்குப் பிறகு நடத்திய எக்சிட் போல் வாக்குக்கணிப்புகளின் முடிவுகளை, தனது நட்புகள் மூலமாக முன்கூட்டியே பெற்று ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார் சபரீசன். அதையெல்லாம் பார்த்து மகிழ்ந்திருக்கிறார் ஸ்டாலின்.

அதேநேரம் எடப்பாடி பற்றியும் ஸ்டாலின் விவாதித்திருக்கிறார். ‘தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுல யாருக்குமே அவங்க ஜெயிக்கிறதைப் பத்தி நம்பிக்கை இல்லை. ஆனா, எடப்பாடி மட்டும் எப்படியாவது அதிமுகவே ஜெயிக்கும்னு தொடர்ந்து தனக்கு நெருக்கமான அதிகாரிகள்கிட்ட சொல்லிக்கிட்டிருக்காரு. அவர் எந்த அடிப்படையில இப்படி நம்புறாரு?’ என்று கேட்டிருக்கிறார் ஸ்டாலின். ஆனாலும் திமுகவுக்கு வழக்கமான எதிரான மனநிலை கொண்ட மீடியாக்கள்கூட எக்சிட் போல் கணிப்பில் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தியிருப்பதை அறிந்து மகிழ்ந்திருக்கிறார்.

ஸ்டாலின் கொடைக்கானலில் இப்படி ஆலோசனைகள் நடத்தி வரும் நிலையில், கொடைக்கானல் கேபினட் லிஸ்டில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பது பற்றி திமுக நிர்வாகிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அவர்கள் ஸ்டாலினின் உதவியாளர் தினேஷிடம் போன் மூலம் படையெடுத்து வருகின்றனர். ஆனால், தினேஷ் சென்னையில்தான் இருக்கிறார். ‘தலைவரே எனக்கு போன் பண்ணினால்தான் உண்டு. தலைவர் ஓய்வில் இருப்பதால் நான் அவரை தொடர்புகொள்ள முடியாது’ என்று தன்னிடம் பேசும் நிர்வாகிகளுக்கு பதில் அளித்து வருகிறார் தினேஷ்.

அவ்வப்போது தினேஷுக்கு போன் பண்ணி பேசும் ஸ்டாலினிடம், அன்றைய முக்கியத்துவமான நிகழ்வுகளை அப்டேட் செய்கிறார் தினேஷ். ‘எல்லாரையும் பாதுகாப்பா இருக்கச் சொல்லுங்க. ஆரோக்கியா இருக்கச் சொல்லுங்க’ என்று அறிவுரை கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

இப்படியாக கொடைக்கானல் நாட்களை ஓய்வும் பணியுமாக அனுபவித்துவிட்டு ஏப்ரல் 21ஆம் தேதி சென்னைக்குப் புறப்படுகிறார் ஸ்டாலின்.

-வேந்தன்

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

புதன் 21 ஏப் 2021