மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

நீங்கள் யார் பக்கம்?

நீங்கள் யார் பக்கம்?

மு.இராமனாதன்

தேர்தல் முடிந்துவிட்டது. பரப்புரையில் அனல் பறந்தது, களை கட்டியிருந்தது, நாடு திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. இந்தப் பரப்புரையில் தொடர்ந்து அடிபட்ட ஒரு பெயர் - எம்.ஜி.ஆர். அவர் காலமாகி 34 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு புதிய தலைமுறையே உருவாகிவிட்டது. எனினும் எம்.ஜி.ஆர் இந்தத் தேர்தலிலும் பேசுபொருளாக இருந்தார்.

இவர்களில் யார் அடுத்த எம்.ஜி.ஆர்?

“எங்கள் கட்சியின் இலச்சினையில் ‘நாளை நமதே’ என்று எழுதி வைத்திருக்கிறோம், அது எம்.ஜி.ஆர் நடித்த படம்” என்றார் கமல்ஹாசன். சில வாரங்களுக்கு முன்னால், தான் எம்.ஜி. ஆர் மடியில் வளர்ந்தவன் என்றுகூடச் சொன்னார். “எம்.ஜி.ஆர் ஆட்சியைத் தன்னால்தான் தரமுடியும்” என்று சொல்லிக் கொண்டிருந்த ரஜினிகாந்த் தமிழர்களின் கெடுவாய்ப்பாக அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். விஜய் ரசிகர்கள் ‘எம்.ஜி. ஆரின் மறு உருவமே’ என்று சுவரொட்டி அடித்தார்கள். குகையிலிருந்து புறப்பட்டு வந்த கார்த்திக் பரப்புரையில் எம்.ஜி.ஆர் படப்பாடலைப் பாடினார். கே.பாக்யராஜ், ‘நான் எம்.ஜி.ஆரின் கலை வாரிசு மட்டுமில்லை, அரசியல் வாரிசும்தான்’ என்று சொல்லியவர்; எம்.ஜி.ஆர் பெயரிலேயே கட்சி ஆரம்பித்தவர்; அது பழைய கதை. இப்போது விஜயகாந்த் தனது சுகவீனத்தைப் பொருட்படுத்தாமல் வாக்குக் கோரினார். அவரது வாகனத்தைச் சுற்றிலும் நின்ற தொண்டர்கள் ‘கறுப்பு எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று முழங்கினார்கள். எல்லோரும் எம்.ஜி.ஆரைக் கையில் எடுத்துக்கொண்டதைச் சகிக்க முடியாத ஓர் அதிமுக தலைவர், எம்.ஜி.ஆர் எங்களுக்கு மட்டுமே உரியவரென்று அறிவித்தார்.

குஷ்பு, வானதி முதலான வேட்பாளர்கள் தங்களது துண்டுப் பிரசுரங்களில் பாஜக தலைவர்களின் படங்களைப் போடவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு. அது பரவாயில்லை. அண்ணாமலை தனது சுவர் விளம்பரத்தில் எழுதியிருந்த மோடியின் பெயரை அழித்துவிட்டார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. அதுவும் பரவாயில்லை. வினோஜ் செல்வம் என்கிற பாஜக வேட்பாளர் ‘எம்.ஜி.ஆரின் ஆசி பெற்ற’ என்ற முன்னொட்டைச் சேர்த்துக்கொள்கிறாராம். பல பாஜக வேட்பாளர்களும் இப்படிச் செய்வதாகச் சமூக வலைதளங்களில் எழுதுகிறார்கள். இவர்களில் யாரெல்லாம் எம்.ஜி.ஆரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்?

எம்.ஜி.ஆரின் பிம்பம்

ஊடகவியலாளர்கள் இந்தச் சூழலில் உற்சாகம் அடைந்தார்கள். அவர்கள் எம்.ஜி.ஆரின் அரசியல் செல்வாக்குக்கான காரணங்களை எழுதியும் பேசியும் குவித்தார்கள். எம்.ஜி.ஆர் திரையுலகில் மன்னாதி மன்னனாக, தாய் சொல்லைத் தட்டாதவராக, எங்க வீட்டுப் பிள்ளையாகத் திகழ்ந்தார். அந்தப் புகழோடு அரசியலுக்கும் வந்தார் என்கிற ரீதியில் சிலர் விளக்கினார்கள். இது பலருக்கும் தெரிந்ததுதான். அவர் மேலவை உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, வாரியத் தலைவராக, கட்சிப் பொருளாளராக அரசிலும் கட்சியிலும் பல பதவிகள் வகித்துப் படிப்படியாக முன்னேறியவர் என்பது இன்னொரு சாரரின் விளக்கமாக இருந்தது. இதுவும் தெரிந்ததுதான். ஓர் இதழாளர், எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்றங்கள் திமுகவின் கரங்களாகச் செயல்பட்டன என்று எழுதியிருந்தார். உண்மைதான். எம்.ஜி.ஆர் மன்றங்கள் ஊக்கத்தோடு செயல்பட ஒரு முக்கியமான காரணம் இருந்தது. அதை அவர் குறிப்பிடவில்லை. அந்த மன்றங்களின் ஜீவன் எம்.ஜி.ஆராக இருந்திருக்கலாம், ஆனால், அதன் உந்து சக்தியாக விளங்கியது சிவாஜி ரசிகர் மன்றங்கள் என்பதை இப்போது பலரும் மறந்துவிட்டார்கள். அதை நினைவூட்டுகிற வரலாற்றுக் கடமையை எனக்கு நானே விதித்துக்கொண்டேன்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சிவாஜி ரசிகர்களும் தத்தமது அபிமான நட்சத்திரங்களுக்குக் குலவையிடுவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மாற்றுத் தரப்பினருக்கு எதிராக லாவணி பாடவும் செய்தார்கள்.

எம்.ஜி.ஆரின் தலைவர் அண்ணா (நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்). சிவாஜியின் தலைவர் காமராஜ் (சிவகாமி உமையவளே முத்துமாரி / உன் செல்வனுக்குக் காலமுண்டு முத்துமாரி). முன்னவரின் கொள்கை திராவிடம் (அச்சம் என்பது மடமையடா/அஞ்சாமை திராவிடர் உரிமையடா). பின்னவருக்குத் தேசியம் (இந்திய நாடு என் வீடு / இந்தியன் என்பது என் பேரு). இரண்டு பேருக்கும் வெவ்வேறு கருத்தியல்கள் இருந்தன. ஆனால் ரசிகர்களுக்கு அதைப் பற்றிக் கவலை இருக்கவில்லை. இரு தரப்பு ரசிகர்களுக்கும் திரையில் தோன்றிய அவரவர் நாயகர்களே திரைக்கு வெளியேயும் நாயகர்களாக இருந்தனர். எனில் திரையில் வில்லன்கள் மாறினார்கள். எம்.ஆர்.ராதா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன் என்று அவர்களுக்கு வெவ்வேறு பெயர்கள் இருந்தன. ஆனால், திரைக்கு வெளியே தங்களது வில்லன் யார் என்பதில் ரசிகர்கள் தெளிவாக இருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் இரண்டு நிறங்கள் இருந்தன. ஒன்று வெள்ளை, இன்னொன்று கறுப்பு. ஒருவரது வெள்ளை, மற்றவருக்குக் கறுப்பாக இருந்தது. விளையாட்டின் விதிகள் எளிதாக இருந்தன.

ஜெயகாந்தனின் 'சினிமாவுக்குப் போன சித்தாளு' (மீனாட்சி புத்தக நிலையம், 1972) நாவலில் மனைவி கம்சலை, சித்தாள்; கணவன் செல்லமுத்து, ரிக்‌ஷாக்காரன். இருவரும் வாத்தியார் ரசிகர்கள். ஓரிடத்தில் கம்சலை கேட்பாள்: "...அங்கே போட்டிக்கு வெச்சிருக்கானுவளே. அந்த மன்றத்திலே சேந்துக்கினியா? துட்டு கிட்டு கொடுத்தானுங்களா?". செல்லமுத்து பதறிப் போவான். "முடூமே வாயெ. துட்டாம் துட்டு! யாருக்குமே வேணும் அவனுங்க எச்சித் துட்டு? அதுக்கு வேற ஆளைப் பாரும்மே, எங்க வாத்தியாருக்காக உசிரை வேண்ணாலும் குடுப்பேன்"

செல்லமுத்து ஒரு சோற்றுப் பதம். ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர், அந்தப் பொறுப்பைச் சுவீகரிக்கிறபோது இயல்பாகவே சிவாஜி அவரது எதிரியாகிவிடுவார். இந்தத் தோற்றத்தின் மறுதலையும் உண்மை என்றறிக.

2001ஆம் ஆண்டு, 9/11 தாக்குதல் நடந்த சில நாட்களில் ஜார்ஜ் புஷ், காங்கிரஸ் அவையில் தனது பிரபலமான முத்துகளை உதிர்த்தார்: ‘உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் இப்போது ஒரு முடிவை எடுத்தாக வேண்டும். நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள்? நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் எதிரிகளுடன் இருக்கிறீர்கள் என்று பொருள்.’ இந்த வசனம் மிகுந்த விவாதத்துக்கு உள்ளாகியது. எனக்கென்னவோ இந்த வசனத்தை எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்களிடமிருந்துதான் புஷ் எடுத்துக்கொண்டு போயிருப்பார் என்றோர் ஐயம் இருக்கிறது. இந்த வசனத்தை புஷ்ஷைப் போல எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ உரக்கச் சொன்னதில்லை. அதற்கு அவசியம் இல்லாமல் ரசிகர்கள் செயலாற்றினார்கள். நல்ல ரசிகர்கள் கற்புள்ள பெண்களைப்போல. ஒருவருக்குத்தான் வாக்கப்பட முடியும். அதே வேளையில் அடுத்தவருக்கு எதிராகக் குரல் கொடுக்கிற கடனும் அவர்களுக்கு இருந்தது.

இந்தக் கடனை நிறைவேற்றுவதற்கு உதவியாக அப்போது இரு தரப்பு ரசிகர்களுக்காகவும் பிரத்யேக ஆதரவு இதழ்கள் வெளியாயின. எங்கள் ஊரில் சிவாஜி ரசிகர் மன்றம் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்துப் படிப்பகம் ஒன்று நடத்திவந்தது. பல பத்திரிகைகளும் வந்தன. சிவாஜி ரசிகர்களுக்காகவே நடத்தப்பட்ட இதழ்கள் பிரதான இடம் வகித்தன. இந்த இதழ்கள் சிவாஜியை நடிகர் திலகம், பத்மஸ்ரீ, சிம்மக் குரலோன், கலைக் குரிசில் முதலான பெயர்களிலும், எம்.ஜி.ஆரை டோப்பா, புஷ்குல்லா முதலான பெயர்களிலும் அழைத்து வந்தன. பல இதழ்கள் வந்தன. சில இலக்கியச் சிற்றிதழ்கள் போல வந்த வேகத்தில் நின்றும் போயின. எனில், 'மதி ஒளி' சண்முகமும் சின்ன அண்ணாமலையும் நடத்தி வந்த இதழ்கள், முறையே ‘மதி ஒளி’ மற்றும் ‘சிவாஜி ரசிகன்’ நீண்ட நாட்கள் தொடர்ந்து வந்தன. சின்ன அண்ணாமலைதான் சிவாஜி ரசிகர் மன்றங்களின் தலைவராக இருந்தார்.

இதைப் போலவே பல எம்.ஜி.ஆர் ஆதரவு இதழ்களும் வந்தன. அவை எம்.ஜி.ஆரைப் புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் என்றும் சிவாஜியைத் தொந்தி கணேசன், பப்டு முதலான பெயர்களிலும் விளித்தன. அப்போது நான் ஒரு சிவாஜி ரசிகனாக விளங்கினேன். ஆதலால் எம்.ஜி.ஆர் ஆதரவு இதழ்களைப் புறக்கணித்தேன். எனவே, அந்த இதழ்களின் பெயர்களை நினைவுகூர முடியவில்லை. இந்தப் புறக்கணிப்பு, இதழ்களோடு நின்று போவதில்லை. அது எம்.ஜி.ஆர் படங்களுக்கும் நீளும். நல்ல சிவாஜி ரசிகன் மானஸ்தன். அவன் எம்.ஜி.ஆர் படத்தை ஏறெடுத்தும் பாரான். நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனால் சோதனைகள் பாண்டிய நாட்டுக்கு மட்டுமில்லை, சின்னப் பையன்களுக்கும் வரத்தானே செய்யும்? எனக்கு அது கருப்பையாவின் உருவில் வந்தது.

நம் நாடு - சிவந்த மண்

கருப்பையா, என் அப்பாவின் நண்பரின் மகன். நண்பர் குடும்பத்தோடு வண்டி கட்டிக்கொண்டு எங்கள் ஊருக்கு வந்திருந்தார். கருப்பையாவுக்கு இரண்டு அக்கா, ஒரு தங்கை. கருப்பையாதான் என் வயதுக்காரன். ஆனால் அவன் எம்.ஜி.ஆர் ரசிகனாக இருந்தான். கொள்கை ரீதியாக முரண்பாடுகள் இருந்தாலும் இருவரும் சேர்ந்துதான் விளையாடினோம். விருந்தினர்கள் வந்த மூன்றாவது நாள் சினிமாவுக்குப் போவது என்று முடிவானது. காரைக்குடி ராமவிலாஸ் தியேட்டரில் எம்.ஜி.ஆரின் ‘நம் நாடு’ ஓடிக்கொண்டிருந்தது. சரஸ்வதி டாக்கீஸில் சிவாஜியின் ‘சிவந்த மண்’. நான் சிவந்த மண்ணைப் பார்த்திருந்தேன். இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பதற்குச் சித்தமாகவும் இருந்தேன். ஆனால் கருப்பையா நம் நாட்டில் குறியாக இருந்தான். இரு வீட்டார் ஆதரவும் அவனுக்கு இருந்தது. ஒரு பலகீனமான கணத்தில் நானும் சம்மதித்தேன். அதற்காக நான் வருந்த வேண்டியிருக்கும் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.

இடைவேளையின் போதுதான் அழகப்பனைப் பார்த்தேன். அவன் வகுப்புத் தோழன். எம்.ஜி.ஆர் ரசிகன். என்னை ஒரு எம்.ஜி.ஆர் படத்தில் பார்த்ததும் அவனுக்குக் கொண்டாட்டமாகப் போய்விட்டது. கருப்பையாவின் அப்பா பிள்ளைகளுக்கெல்லாம் முறுக்கும் காளிமார்க் கலரும் வாங்கிக் கொடுத்தார். எனது கலரை அழகப்பனுக்குக் கொடுத்தேன். எவ்வளவு பெரிய பரிசு? ஒரு சிவாஜி ரசிகன் களவாக எம்.ஜி.ஆர் படம் பார்த்த விஷயத்தை ஒரு போத்தல் கலரில் ஒதுக்கிவிடலாம் என்று நம்பினேன். தவறு. அழகப்பன் நன்றி பாராட்டவில்லை. இரண்டு நாள் கழித்து எனது ராமவிலாஸ் விஜயத்தை நண்பர்களிடம் சொன்னால் என்ன தப்பு என்று அப்பாவியாகக் கேட்டான். அவன் துப்பறியும் சங்கர்லாலைத் தொடர்ந்து படித்து வந்தான். பிளாக் மெயில் என்ற பதம் அவனுக்குத் தெரிந்திருந்தது. அதை என்னிடத்தில் பரீட்சித்தான். ஒரு சிவாஜி ரசிகனின் பிரதிமையைக் கலைப்பதற்கு நான் காரணமாகலாமா? வரலாறு என்னை மன்னிக்குமா? அழகப்பனை நல்ல வார்த்தை சொல்லியும் சேமியா ஐஸ் வாங்கிக் கொடுத்தும் சமாளித்தேன்.

ரிக்‌ஷாக்காரன் - பாபு

இப்படியாக எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சிவாஜி ரசிகர்களாலும் எதிராளிகளாக இருந்தார்கள். ஒரு வகையில் அதுவே இரண்டு மன்றங்களின் இயங்கு சக்தியாகவும் விளங்கியது. இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டையும் சொல்லலாம். 1971இல் எம்.ஜி.ஆரின் ‘ரிக்‌ஷாக்காரன்’ வெளியானது. சிவாஜி ரிக்‌ஷாக்காரனாக நடித்த 'பாபு' திரைப்படமும் அதே ஆண்டில் வெளியானது. ரிக்‌ஷாக்காரனில் எம்.ஜி. ஆர் பல வண்ண மேல் சட்டையும் நீளம் குறைவான கால் சட்டையும் அணிந்துகொண்டு, ‘அறிமுகம்’ மஞ்சுளாவிடம், ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு; இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு’ என்று பாடினார். பாபுவில் சிவாஜி ஐம்பது வயதிலேயே முதுமையாலும் காச நோயாலும் பீடிக்கப்பட்டபோதும், செஞ்சோற்றுக் கடனுக்காக இருமல்களுக்கிடையில் நெஞ்சை உருக்கும் வசனங்கள் பேசினார். 1971இன் சிறந்த நடிகருக்கான தேசிய விருது எம்.ஜி. ஆருக்குக் கிடைத்தது. அப்போது இந்த விருதுக்கு பாரத் என்று பெயர். எம்.ஜி. ஆரின் பட்டப்பெயர்களில் இன்னுமொன்று கூடியது. இந்த விருது அப்போதைய திமுக அரசுக்கு, இந்திரா காந்தியின் ஒன்றிய அரசில் இருந்த செல்வாக்கினால்தான் சாத்தியமானது என்று துக்ளக் சோ எழுதினார். சிவாஜி ஆதரவு இதழ்களுக்கும் அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவை ஒன்றிய - மாநில அரசுகளையும் தேர்வுக் குழுவையும் பிடிபிடியென்று பிடித்தன.

அப்போது சென்னை வானொலி நிலையம் ஞாயிற்றுக்கிழமை தோறும் நேயர்களின் தேர்வின் அடிப்படையில் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பி வந்தது. இதில் ‘அழகிய தமிழ் மகள் இவள்’ (ரிக்‌ஷாக்காரன்) பாடல் முதலிடத்திலும் ‘இதோ எந்தன் தெய்வம்’ (பாபு) பாடல் இரண்டாம் இடத்திலும் நீண்ட நாள்கள் தொடர்ந்தன. ஒரு சிவாஜி ஆதரவு இதழ் இதை வானொலி நிலையத்தின் சதி என்று சாடியது.

அரசியல் எதிரி

ஆனால் எம்.ஜி.ஆரின் வெற்றி ஏன் சிவாஜிக்குக் கிட்டவில்லை? ‘பிம்பச் சிறை’ (பிரக்ஞை, 2016) நூலில் எம்.எஸ்.எஸ். பாண்டியன் சொல்கிறார்: “எம்.ஜி.ஆர் தன்னுடைய பிம்பத்தை முன்னிறுத்துவதே தன்னுடைய நடிப்பாற்றலைத் திரையில் காட்டுவதை விடவும் முக்கியம் என்று எண்ணினார். சிவாஜி இதற்கு நேர்மாறாக எண்ணினார். எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மற்றும் அரசியல் இரண்டிலும் வெற்றி பெற்றபோது, சிவாஜி அவரின் அரசியல் லட்சியங்கள், அசைக்க முடியாத நட்சத்திர அந்தஸ்து ஆகியவற்றைத் தாண்டியும் ஓர் அரசியல்வாதியாகத் தோல்வியடைந்தார்.”

எம்.ஜி.ஆர் 1972இல் அதிமுகவைத் தொடங்கினார். திரையுலகில் தனது எதிரியாக இருந்த சிவாஜியை அரசியல் அரங்கில் எதிரி ஸ்தானத்தில் நிறுத்தவில்லை எம்.ஜி.ஆர். அந்த இடத்தைக் கருணாநிதிக்கு வழங்கினார். அவரது ரசிகர்களும் கட்சிக்காரர்களும் புதிய எதிரியை எம்.ஜி.ஆரின் மரணம் (1987) வரை எதிர்கொண்டனர்.

எங்கேயோ கேட்ட குரல் - சகலகலா வல்லவன்

எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்களின் பாரம்பரியத்தையே ஆரம்பகாலத்தில் கமல் - ரஜினி ரசிகர்கள் பின்பற்றினார்கள். ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம்.

ஆண்டு: 1982. நாள்: சுதந்திர தினம். இரண்டு படங்கள் வெளியாயின. ரஜினியின் ‘எங்கேயோ கேட்ட குரல்’. கமலின் ‘சகலகலா வல்லவன்’. கமலுக்கேற்ற பாத்திரத்தில் ரஜினியும் ரஜினிக்கேற்ற பாத்திரத்தில் கமலும் நடித்திருந்ததாகப் பேசிக்கொண்டார்கள். அப்போது நான் மதுரையில் வேலை பார்த்தேன். கமலின் படம் ‘சென்ட்ர’லில் திரையிடப்பட்டது. ஒவ்வொரு காட்சியிலும் அரங்கு நிறைந்தது. ரஜினியின் படம் ‘தங்க’த்தில் வெளியானது. பெரிய அரங்கம். 2500க்கும் மேற்பட்ட இருக்கைகள். இரண்டாம் வாரத்தில் அரங்கு நிறையவில்லை. ரஜினி ரசிகர்கள் கமலுக்கு முன்னால் தோற்றுக் கொடுக்க மாட்டோம் என்று முடிவெடுத்தார்கள். ரஜினி ரசிகர் மன்றங்கள் இருக்கைகளை மொத்தமாக முன்பதிவு செய்தன. டிக்கெட்டுகளை உறுப்பினர்கள் பிரித்துக்கொண்டார்கள். இரண்டு படங்களும் நூறு நாட்களைக் கடந்தன. இரண்டு படங்களுக்கும் ஒரே கதாசிரியர். ஒரே இயக்குநர். அவர்கள் மதுரையிலிருந்து சில நூறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தார்கள்; கமுக்கமாகச் சிரித்துக்கொண்டு இருந்திருப்பார்கள்!

சிவாஜி தி பாஸ் - வேட்டையாடு விளையாடு

‘எங்கேயோ கேட்ட குரல்’ வெளியாகி கால் நூற்றாண்டுக்குப் பிறகு வெளியான படம் ரஜினியின் ‘சிவாஜி - தி பாஸ்’ . அப்போது ரீல்கள் மாறி எல்லாம் டிஜிட்டல் யுகமாகிவிட்டது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பிரதிகள் எடுப்பதும் அவை உலகெங்கும் திரையிடப்படுவதும் ஆரம்பமாகிவிட்டன. அப்போது நான் ஹாங்காங்கில் இருந்தேன். ஒரு படப்பிரதி ஹாங்காங் வந்தது. தோரணங்கள், கோலங்கள், ரஜினியின் படம் பொறித்த டி-ஷர்டுகள் சகிதம் படம் வரவேற்கப்பட்டது. எல்லோரும் ரஜினி ரசிகர்கள் போல என்று நினைத்தேன். அடுத்த சில வாரங்களில் கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ வந்தது. மறுபடியும் கோலங்கள், மறுபடியும் தோரணங்கள், ஆனால் மிகுதியும் அதே ரசிகர்கள். கமல் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் ஏதோ ஒரு புள்ளியில் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஐக்கியமாகி விட்டார்கள். ரசிகர்கள் தாங்கள் யாரோடு இருக்கிறோம் என்று இப்போது சொல்ல வேண்டியதில்லை. யாரும் யாரோடும் இருக்கலாம். கமல் ரசிகன் களவாக ரஜினி படம் பார்க்க வேண்டாம்; யாருக்கும் சேமியா ஐஸ் வாங்கித்தர வேண்டாம். ரசிகர்கள் தங்கள் ஆதர்ச நடிகருக்குத் தாலி கட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இனி இல்லை.

சில மாதங்களுக்கு முன்னால் ரஜினி எல்லாவற்றையும் மாற்றச் சித்தமாக இருந்தபோது அவரது கூட்டணியில் சேர்ந்துகொள்ள கமல் ஆர்வத்தோடு இருந்தார். அது நடக்காமல் போய்விட்டது. இந்தக் காலத்தில் விஜய்க்கும் அஜீத்துக்கும் ஒருவர் ஒரே நேரத்தில் ரசிகராக இருக்க முடிகிறது.

இந்த மாற்றம் படிப்படியாகத்தான் நிகழ்ந்தது. நாற்பதாண்டுகளுக்கு முன்னால் ரஜினி - கமல் ரசிகர்கள் எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்களையே தங்களது முன்மாதிரியாகப் பின்பற்றினார்கள். கமல் படத்தை ரஜினி படம் முந்த வேண்டும் என்றுதான் ரஜினி ரசிகர்கள் நினைத்தார்கள். ரஜினி சிஸ்டத்தைக் குறைசொல்லிக் கொண்டிருந்த சமீப காலத்தில் அவரது ரசிகர் மன்றங்களில் இருந்தவர்களில் அதிகமும் அவரது ‘முரட்டுக் காளை’ (1980) காலத்திய ரசிகர்கள். ரஜினியைப் போலவே அவர்களுக்கும் வயதாகியிருந்தது. அதனால்தான் ‘இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை’ என்று அவர்கள் ரஜினியை உற்சாகப்படுத்தினார்கள். ஆனால் ரஜினியின் முடிவு அவர்களுக்குச் சாதகமாக அமையவில்லை. மறுபக்கம் கமலின் ரசிகர்களுக்கும் வயதாகிவிட்டது. ஆனால் அவரது வேட்பாளர்களில் பலரும் அவரது சகலகலா வல்லவன் காலத்திய ரசிகர்கள் அல்லர். இளைஞர்கள், நடுத்தர வயதினர், உள்ளூர் பிரச்சினைகளில் குரல் கொடுக்கும் சமூகச் செயற்பாட்டாளர்கள். அவர்களுக்கு கமல் ஒரு டிக்கெட்டும் ஒரு சின்னமும் வழங்கியிருக்கிறார். அந்த மய்யப் புள்ளியில்தான் கட்சியின் தலைவரும் வேட்பாளர்களும் இணைந்தனர்.

எம்.ஜி.ஆரைப் போல் அவருக்குப் பிறகு யாரும் திரையில் அவர்களுக்கேயான ஒரு பிம்பத்தைச் செதுக்கிச் செதுக்கி உருவாக்கவில்லை. அரைகுறையாகச் செதுக்கியவர்களாலும் அதை அரசியலுக்குக் கடத்த முடியவில்லை. ஆகவே அடுத்த எம்.ஜி.ஆர் என்று இங்கு யாரும் இல்லை. தாங்கள் அவரது ஆசி பெற்றவர்கள் என்று சிலர் சொல்லிக்கொள்ளலாம். எம்.ஜி.ஆர் மறுக்கப் போவதில்லை.

‘சினிமாவுக்குப் போன சித்தாளு’வை ஜெயகாந்தன் ‘கண்ணதாசன்’ இதழில் தொடராக எழுதினார். ஆனால் அதைப் புத்தகமாக வெளியிடத் தாமதித்தார். ஏன்? முன்னுரையில் அவரே சொல்கிறார். “காரணம், இந்தக் கதையைப் பாராட்டியவர்களும், இதனைக் குறை கூறியவர்கள் – பெரும்பாலோர் - தவறான காரணம் கொண்டிருந்தமையே. யாரையோ எதிர்த்து அந்த யாருக்கோ சமதையான இன்னும் பல யார் யாரோ எனது எழுத்தை ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பதா என்று தயங்கினேன்”.

வாத்தியார் பட மோகத்துக்கு ஆளான ஒரு ‘நகரத்துக் கூலிக்கார வர்க்கத்து’ப் பெண்ணொருத்தியைப் பற்றிப் பேசுகிற தன்னுடைய கதை எதிர் முகாமில் இருப்பவர்களின் கைகளில் ஆயுதமாகப் போய்ச் சேர்ந்து விடுமோ என்பது ஜெயகாந்தனின் கவலையாக இருந்திருக்கிறது. ஏனெனில் இரு சாராருக்கும் இடையில் உயர்வு தாழ்வு இல்லை. இவர்கள் எல்லோரும் 'சமதை'யானவர்கள். ஜெயகாந்தன் இப்படி எழுதி ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது அந்தப் புரிதல் நம் சமூகத்துக்கு வரத் தொடங்கியிருக்கிறது. ரஜினி பால்கே விருது பெற்றால், அது வாக்குப் பதிவுக்கு நான்கே நாட்கள் முன்பாக இருந்தாலும்கூட, அதை கமல் ரசிகர்கள் விமர்சிப்பதில்லை. சமீபத்தில் சிம்பு, ‘என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள்; விஜய் ரசிகர்கள் ஈஸ்வரன் படம் பாருங்கள்’ என்று பேசினார். தானும் விஜய்யும் சமதையானவர்கள் என்பது சிம்புவுக்குத் தெரிந்திருக்கிறது. இப்போது ரசிகர்களுக்கும்.

திரையில் தோன்றும் உருவங்கள் திரைக்கு வெளியேயும் நீளும் எனும் மூடநம்பிக்கை ஒரு முடிவுக்கு வருமென்றால் அது நல்லதுதானே? கருத்தியல்களை முன்வைக்காமல் பிம்பங்களை முன்வைத்து அரசியலுக்கு வந்துவிடலாம் என்கிற நம்பிக்கை பொய்க்குமானால் அதுவும் நல்லதுதானே? ஒரே மண்ணின் மைந்தர்கள் நடிகர்களின் பெயரால் வழக்காடுவது நின்றுவிட்டதெனில் அது ஆரோக்கியமானதுதானே?இவையெல்லாம் எப்போதாவது முடிவுக்கு வந்துதானே ஆக வேண்டும்? இப்போதும் எம்.ஜி.ஆர் பெயர் பயன்படுத்தப்படுவதற்கு காரணம், பிறகொரு எம்.ஜி.ஆர் வரவில்லை. இனி வரவும் மாட்டார். அதற்கான அறிகுறிகள் 2021 தேர்தல் பரப்புரையில் காணக்கிடைத்தன. பிம்ப அரசியலின் முடிவுக்கு இது ஒரு தொடக்கமாகட்டும்.

கட்டுரையாளர்:

மு இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: [email protected]

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

செவ்வாய் 20 ஏப் 2021