மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 ஏப் 2021

'#ResignModi': கொந்தளிக்கும் ட்விட்டர்வாசிகள்!

'#ResignModi': கொந்தளிக்கும் ட்விட்டர்வாசிகள்!

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த முடியாத பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் ட்விட்டரில் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் ட்விட்டரில் #ResignModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பரவியதைக் காட்டிலும் அதிவேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தையும், உயிரிழப்பு 2 ஆயிரத்தையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

குறிப்பாகக் குஜராத், உபி உள்ளிட்ட வட மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளில் ஒரே படுக்கையை இரண்டு, மூன்று பேர் பயன்படுத்துவதையும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் காண முடிகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கொரோனா மரணங்கள் அதிகரிக்கும் நிலையில், உடல்கள் பிணவறையில் குவிந்து வருவதாகவும், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கொரோனாவால் உயிரிழந்த 100க்கும் அதிகமானவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் எரியூட்டப்பட்டன என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கிறது,

அதுபோன்று, தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக அந்தந்த மாநில அரசுகள் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகின்றன. கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாமல், இந்தியாவில் அனைத்து மக்களுக்குச் செலுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றன.

அதேசமயம் இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி தவறவிட்டதாகவும், உடனே அவர் பதவி விலக வேண்டும் என்றும் கட்சித் தலைவர்கள் வலியுறுத்துகின்றன. விசிக தலைவர் தொல் திருமாவளவன், “நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு முறையாகப் போட்டிருந்தால் இந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. மாறாகத் தடுப்பூசிகளை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததோடு இந்திய நாட்டு மக்களின் பாதுகாப்பைப் பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதிலேயே மோடி கவனமாக இருந்தார். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் கொரோனா தொற்றுகள் கண்டறியப்படும் இந்தச் சூழலிலும் கூட மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

மாநில அரசுகள் சுயேச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் அவர்களது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மாநில அரசுகள் தடுப்பூசிகளை நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கென உருவாக்கப்பட்ட 'பிஎம்ஜிகேபி' இன்சூரன்ஸ் திட்டத்தையும் மோடி அரசு கடந்த மார்ச் 24 ஆம் தேதியோடு நிறுத்திவிட்டது. மோடி அரசு எந்த அளவுக்கு மக்களின் உயிர்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

கொரோனாவைக் எதிர்கொள்வதில் எந்தவொரு தொலைநோக்குப் பார்வையும் பிரதமர் மோடிக்கு இல்லை என்பதற்குக் கடந்த ஆண்டு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவர் எடுத்த ‘லாக்டவுன்’ முடிவு ஒரு சான்றாகும். மக்களின் உயிர்மீது எவ்வித அக்கறையும் இல்லாமல் நாட்டைக் கடுமையான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கும் மோடி, பிரதமர் பதவியில் நீடிப்பது இன்னும் பேராபத்தையே கொண்டுவரும்.

எனவே, தற்போது நாட்டில் நிலவும் சுகாதார நெருக்கடி நிலைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாக அவர் தனது பதவியிலிருந்து விலக முன்வரவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அதுபோன்று, கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு, பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் வலியுறுத்தினார்.

இந்தச்சூழலில் மக்கள் நலனில் அக்கறை காட்டாத பிரதமர் பதவி விலக வேண்டும் என்று நெட்டிசன்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருவதால் #ResignModi என்ற ஹேஷ்டேக் காலை முதல் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

திங்கள் 19 ஏப் 2021