மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 ஏப் 2021

பஸ், ஹோட்டல்கள்: அடுத்த பிரச்சினை!

பஸ், ஹோட்டல்கள்: அடுத்த பிரச்சினை!

தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் உணவகத் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்.

உணவகங்கள்,டீக்கடைகளில் ஏற்கனவே 50 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கடைக்கும் வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவது, கைகளைச் சுத்தம் செய்வது, பொது இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றை பின்பற்றுவதை உணவக உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இனி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அமலுக்கு கொண்டுவரப்படும் என நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் உணவகங்களில் பார்சலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்விகி, சொமாட்டோ போன்ற உணவு விநியோக நிறுவனங்களுக்கும் அதே நேரங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உணவகங்கள் சங்கத் தலைவர் ரவி கூறுகையில், “கடந்தாண்டு போடப்பட்ட ஊரடங்குக்கு பிறகு தற்போதுதான் தொழில் ஒரளவு நடந்து கொண்டிருக்கிறது. இந்த வேளையில் உணவகங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது மிகப் பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும்.

உணவகங்களுக்கு வாடகை கட்டுவது, வங்கிகளின் கடனை திருப்பி செலுத்துவது, தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பது போன்றவற்றில் சிரமம் ஏற்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியே வரமாட்டார்கள். இதனால் வியாபாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். இதற்கு மேலும் பார்சல் வழங்குவதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் உணவகங்கள் செயல்பட முடியாது. அதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமும் உணவகங்களில் பார்சல் வழங்க அனுமதி வழங்க வேண்டும்”என தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகள்

இரவு நேர ஊரடங்கின்போது வெளி மாநிலம், வெளி மாவட்டம், செல்ல, அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது என்று அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் கூறுகையில், " முதல் ஊரடங்குக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் அதிகபட்சமாக 650 பேருந்துகள் இயக்கப்பட்டன. கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் மக்களின் பயணங்கள் குறைந்து வருகின்றன. நேற்று முன்தினம் வெறும் 180 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. தற்போது இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் பயணம் முழுமையாக நின்றுவிடும். இதிலும், இரவு நேரத்தில் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இரவு நேரங்களில்தான் மக்கள் பயணம் மேற்கொள்வர். அருகிலுள்ள பகுதிகளுக்கு மட்டுமே பகல் நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொலைவிலுள்ள பகுதிகளுக்கு இரவு நேரத்தில் மட்டுமே பேருந்துகளை இயக்க முடியும். அரசின் தற்போதை அறிவிப்பால் தனியார் பேருந்துகளை முற்றிலும் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

திங்கள் 19 ஏப் 2021