மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 ஏப் 2021

தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பா? எதேச்சதிகார அமைப்பா?

தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பா? எதேச்சதிகார அமைப்பா?

ராஜன் குறை

சமீபத்தில் இந்தியாவுக்கு அடுத்து மக்கள் தொகையில் பெரிய மக்களாட்சியான அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் பெரும் சிக்கலுக்கு உள்ளாயின. அமெரிக்க அதிபரே பல மாகாண தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார். காரணம் பெருந்தொற்றின் காரணமாக மக்களை தபாலில் வாக்களிக்க அனுமதித்ததில் ஏற்பட்ட சில விதிமுறை பிரச்சினைகள். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் மீண்டும் வாக்குகளை எண்ணி, சரி பார்த்து அவர் சுமத்திய குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நிரூபித்து மாநில நிர்வாகங்களும், நீதிமன்றங்களும் உறுதியாக நின்றன. இறுதியாக தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உளவியல் சிக்கலே அவரது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று நிரூபணமானது. தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க செனட் அவை கூடியபோது தன்னுடைய ஆதரவு கும்பலைத் தூண்டிவிட்டு அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தைத் தாக்கச் செய்தார். ஆனாலும் துணை அதிபர் மைக் பென்ஸ் அவையைத் தொடர்ந்து நடத்தி தேர்தல் முடிவுகளுக்கு இறுதி அங்கீகாரம் அளித்தார்.

இந்த நிகழ்ச்சிகளைக் கவனமாகப் படித்தால் ஒன்று புலனாகும். அது என்னவென்றால் தேர்தல் முடிவுகள் மீதான நம்பகத்தன்மை என்பது உறுதி செய்யப்பட வேண்டும். அது ஐயத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். ஐயம் ஏற்படுவதைப் பலவித சமூகவியல், உளவியல் காரணங்களால் தவிர்க்க முடியாது என்றாலும் கூடியவரை அதைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.

இந்திய தேர்தல் ஆணையம் சுயமாகச் செயல்படும் தன்னாட்சி பெற்ற அமைப்பு. ஆனால் அதன் முடிவுகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. அரசியல் கட்சிகளும், குடிமைச் சமூகமும் எழுப்பும் கேள்விகளுக்கு அது பதிலளிக்க வேண்டும். சமீபத்தில் நிகழ்ந்த தமிழக தேர்தலைப் பொறுத்தவரை இரண்டு பிரச்சினைகள் முக்கியமானவை.ஒன்று ஏன், விவிபாட் சீட்டுகளை முழுமையாக எண்ணக் கூடாது என்பது ஒரு கேள்வி; எதற்காக வாக்குப் பதிவு நடந்து ஒரு மாத காலம் வாக்குகள் எண்ணப்பட காத்திருக்க வேண்டும் என்பது மற்றொரு கேள்வி. இந்த இரண்டையும் பரிசீலிக்கும் முன் ஐயத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள மற்றோர் உதாரணத்தைப் பரிசீலிப்போம்.

1971: எதிர்பாராத முடிவும் ரஷ்ய மை குற்றச்சாட்டும்

இந்திரா பிரதமரான பிறகு 1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆனால், இந்திராவின் சோஷலிஸ முனைப்பும், வெகுஜன அரசியல் தன்மையும் பிடிக்காத தலைவர்கள் தனி அணியாக மாறினார்கள். கட்சி உடைந்தது. இந்திரா தலைமையிலான காங்கிரஸ் பொதுவாக இந்திரா காங்கிரஸ் அல்லது சீர்திருத்த காங்கிரஸ் என்றும் பழைய தலைவர்களின் காங்கிரஸ் பழைய காங்கிரஸ் அல்லது ஸ்தாபன காங்கிரஸ் அல்லது சிண்டிகேட் என்றும் அழைக்கப்பட்டது. காமராஜ், மொரார்ஜி தேசாய், சஞ்சீவ ரெட்டி எனப் பல செல்வாக்கு மிக்க தலைவர்கள் அதில் இருந்தார்கள். திமுக போன்ற கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவால் இந்திரா ஆட்சி தொடர்ந்தது. இந்திரா காந்தி 1971ஆம் ஆண்டே மீண்டும் தேர்தலை நடத்த முன்வந்தார். அவருக்கு எதிராக ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா கட்சியுடனும், ஜனசங்க கட்சியுடனும் மகா கூட்டணி அமைத்தது. (இன்றைய பாரதீய ஜனதாவின் அன்றைய வடிவம்தான் ஜனசங்கம்; அதனால் முதன் முதலில் ஜனசங்கத்துடன் கூட்டணி கண்டது ராஜாஜியும், காமராஜரும் என்பதை மறந்துவிடக் கூடாது.) இப்படி தமக்குள் எதிரும் புதிருமாக இருந்த பழம்பெரும் தலைவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்ததில், இளம் தலைமுறை பெண்ணான இந்திரா தோல்வியடைவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் இந்திரா மகத்தான வெற்றி பெற்றார்.

தமிழகத்திலும் திமுகவின் ஒப்பற்ற தலைவரான அண்ணா மறைந்து கலைஞர் ஆட்சிக்கும், கட்சிக்கும் பொறுப்பேற்றிருந்தார். அதுநாள் வரை எதிரிகளாக இருந்த ராஜாஜியும், காமராஜரும் இணைந்தது பெரும் அரசியல் ஆற்றலாக மாறும் என நம்பப்பட்டது. குறைந்தபட்சம் துக்ளக் பத்திரிகையாவது நம்பியது.

தமிழகத்தில் கலைஞரின் திமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்திரா காந்தி, கலைஞர் ஆகியோரின் வெகுஜன செல்வாக்கை மேல்தட்டு ஊடகர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் அந்த வெற்றியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தன.

அப்போதுதான் ‘ரஷ்ய மை’ குற்றச்சாட்டு எழுந்தது. இந்திரா சோஷலிஸ்டாக இருந்தாலும், சர்வதேச அளவில் சோவியத் யூனியனின் ஆதரவாளராக இருந்ததாலும், வாக்குச் சீட்டுகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட மையால் அச்சிடப்பட்டன என்றும், அந்த மையின் செயல்பாட்டால் வாக்காளர் எந்த சின்னத்தின் மேல் முத்திரை பதித்திருந்தாலும் அது மறைந்துபோய், இந்திரா காங்கிரஸ் சின்னத்தின் மீது முத்திரை தோன்றிவிடும் என்ற ஒரு கற்பனை அவிழ்த்துவிடப் பட்டது. ஆனால், இது அசாத்தியமான ஒரு கற்பனை என்பதால் மக்களிடையே எடுபடவில்லை. துக்ளக் மட்டும் ஓரிரு கட்டுரைகளை வெளியிட்டது.

டொனால்ட் டிரம்ப் 2020, ரஷ்ய மை 1971 போன்றவை எப்படி ஆதிக்க சக்திகளும் தேர்தல் முடிவுகளை சந்தேகிக்கின்றன என்பதற்கு உதாரணங்கள். இது இப்படியிருக்க பொதுவாக தேர்தலில் எதிர்க்கட்சிகள் தங்களிடம் போலீஸையும், உள்ளூர் நிர்வாகத்தையும் வைத்திருக்கும் ஆளும் கட்சி ஏதேனும் தில்லுமுல்லு செய்யலாம் என சந்தேகிப்பது தவிர்க்க முடியாதது.

மின்னணு இயந்திரங்களின் பிரச்சினை

மின்னணு இயந்திரம் ஒரு கால்குலேட்டர் போல, ஒரு சிறிய கம்ப்யூட்டர் போல. அது ஒவ்வொரு சின்னத்தின் அருகிலும் இருக்கும் பொத்தான் எத்தனை முறை அழுத்தப்படுகிறது என்பதைக் கணக்கிட்டு வைத்துக்கொள்கிறது. பின்னர் அதற்கான விசையை அழுத்தியவுடன் கூட்டுத்தொகையைக் கூறுகிறது. ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் வேட்பாளர்களின் முகவர்கள் முன் வாக்குச்சாவடியில் சோதனை ஓட்டம் நடத்தி பரிசீலித்துவிட்டுதான் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஒரு சில இடங்களில் இயந்திரம் பழுதானாலும், மாற்று இயந்திரம் வைத்து அல்லது பழுதை சரிசெய்து தேர்தலை நடத்தி முடிக்கிறார்கள். இதில் மிகப்பெரிய ஐயம் என்ன நிலவுகிறது என்றால், கணினிகளை வெளியிலிருந்து ஹாக் செய்து தகவல்களை எடுப்பது, மாற்றுவது போல மின்னணு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிலிருந்து மாற்ற முடியுமா என்ற கேள்விதான். முடியவே முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. முடியும் என்று வேறு கணினி வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதனால் தேர்தலுக்குப் பின் வாக்குகள் எண்ணப்படும் வரை மின்னணு பெட்டிகளை வைத்து பூட்டும் அறையின் அருகே தகவல் பரிமாற்றத்தைத் தடைசெய்யும் ஜாமர்களைப் பொருத்த வேண்டும் என கோருகிறார்கள். இன்னொரு அச்சம்... ஒன்றே போலிருக்கும் மின்னணு இயந்திரங்களை சுலபத்தில் மாற்றிவிடலாம் என நினைக்கிறார்கள். அதற்கேற்றாற்போல பயன்படுத்தப்படாத மின்னணு பெட்டிகளின் ஐயத்துக்குரிய நடமாட்டங்கள் அமைகின்றன.

இதற்கெல்லாம் முதலில் வாக்காளர் தான் அமுக்கிய பொத்தானுக்குரிய சின்னத்தில்தான் வாக்குப் பதிவாகியது என்பதை எப்படி உறுதி செய்துகொள்வது என்ற கேள்வி எழுந்தது. அதை உறுதி செய்யும் பொருட்டு விவிபாட் இயந்திரங்கள் உருவாயின. Voter Verifiable Paper Audit Trail என்பதன் சுருக்கம்தான் VVPAT என்னும் விவிபாட். வாக்காளர் மின்னணு இயந்திரத்தில் உள்ள பொத்தானை அமுக்கியவுடன் அவர் எந்த சின்னத்தின் பொத்தானை அமுக்கினாரோ அந்த சின்னம் ஒரு சிறிய தாளில் அச்சாகி அது விவிபாட் இயந்திரத்தின் கண்ணாடி திறப்புக்குப் பின்னால் தோன்றி ஏழு விநாடிகள் நிற்கும். அதற்குள் வாக்காளர் அது சரிதானா என்று பார்த்துக்கொள்வார். அதன் பின் அது விவிபாட் பெட்டிக்குள்ளேயே விழுந்துவிடும்.

அப்படியானால், விவிபாட் பெட்டியில் உள்ள வாக்குகளை எண்ணி அந்த எண்ணிக்கையுடன் மின்னணு இயந்திரம் கூறும் எண்ணிக்கையை சரிபார்த்தால் ஐயப்பாடு தீர்ந்துவிடும் அல்லவா? எந்த ஹாக்கரும், எந்த மின்னணு கோளாறும் சின்னங்கள் பதிவான காகிதச் சீட்டுகளை மாற்ற முடியாதே?

இங்கேதான் தேர்தல் ஆணையம் பிடிவாதம் பிடிக்கிறது. அது சாம்பிளுக்கு ஒரு சில பெட்டிகளில் மட்டும் காகித ஓட்டுக்களை எண்ணி சரிபார்க்கலாம். எல்லா பெட்டிகளிலும் எண்ணி சரிபார்க்க முடியாது; அதற்கு அதிகமான கால அவகாசம் வேண்டும் என்கிறது. உச்ச நீதிமன்றமும் ஐம்பது சதவிகிதம் பெட்டிகளை எண்ணி சரிபார்த்தால் போதும் என்று சொல்லிவிட்டது. ஏன் நூறு சதவிகிதப் பெட்டிகளிலும் விவிபாட் ஓட்டுகளை எண்ணி, மின்னணு இயந்திரம் கூறும் எண்ணிக்கையுடன் சரிபார்த்தால் என்ன குறைந்துபோய்விடும் என்பதற்கு சரியான விளக்கம் இல்லை.

ஒரு விவிபாட் பெட்டியில் சராசரியாக ஆயிரம் ஓட்டுகள் இருக்கலாம். இவற்றை வேட்பாளர் முகவர்கள் பார்வையில் துரிதமாக எண்ணுவதற்கு வசதியான கருவிகளை நிச்சயம் வடிவமைக்க முடியும். அப்படியும் கூட எண்ணுவதற்கு காலம் பிடித்தால் ஓரிரு நாள் கூடுதலாக ஆனால் பெரிய தீங்கு எதுவும் நடந்துவிடாது. வாக்குப்பதிவு நடந்து ஒருமாதம் காத்திருப்பவர்கள் மோசமான ஐயங்களிலிருந்து விடுபட மேலும் ஓரிரு நாட்கள் நிச்சயம் காத்திருப்பார்கள் எனலாம். தேர்தல் ஆணையம் தேவையில்லாமல் பிடிவாதம் செய்கிறது. நீதிமன்றத்தின் பின்னால் ஒளிந்துகொள்கிறது.

ஏன் ஒரு மாத தாமதம்?

தேர்தல் ஆணையம் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் அறிவிக்கிறது. இதனால் என்ன பலன் என்பதில் தெளிவில்லை. அந்த ஐந்து மாநிலங்களில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய தென்மாநிலங்களுக்குத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடந்தது. மேற்கு வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக தேர்தல் பல கட்டங்களாக நடக்கிறது. மேற்கு வங்காளத்தில் எட்டு கட்ட தேர்தலின் கடைசி கட்டம் ஏப்ரல் 29ஆம் தேதிதான் நடக்கிறது. அதனால் வாக்கு எண்ணிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் மே 2ஆம் தேதிதான் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. இது முற்றிலும் பொருளற்ற, அபத்தமான கொள்கையாகும். ஒவ்வொரு மாநில அரசியலும் தனித்தன்மை பெற்றவை. பெருவாரியான மக்கள் பிற மாநில அரசியல் பற்றி எதுவும் தெரிந்துகொள்ள முனையமாட்டார்கள். புரிந்துகொள்வதோ மிகவும் கடினம். கேரளாவில் போட்டியே சிபிஐ (எம்) அணிக்கும், காங்கிரஸ் அணிக்கும்தான். தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் இந்த இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் உள்ளன. தமிழகத்தின் பிரதான கட்சிகள் இரண்டும் வேறு மாநிலங்களில் இல்லவே இல்லை. இப்படிப்பட்ட நிலையில் ஒரு மாநிலத் தேர்தலின் முடிவுகள் இன்னொரு மாநிலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மாயை. ஒவ்வொரு மாநில அரசியலும் தனித்துவமானது; பிற மாநில அரசியலுக்குத் தொடர்பற்றது.

இந்த உண்மையை வேண்டுமென்றே புரிந்துகொள்ள மறுக்கும் தேர்தல் ஆணையம் மின்னணு இயந்திரங்களை தமிழகத்தில் ஒரு மாதக் காலம் அடைகாக்கச் சொல்கிறது. எதிர்க்கட்சிகள் எல்லாம் பலவித ஐயத்துக்குரிய நடவடிக்கைகளை இந்த வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் காண்கின்றன. நள்ளிரவில் கண்டெய்னர் லாரிகள் வளாகங்களுக்கு அருகில் நிற்கின்றன. கேட்டால் சரியான விளக்கங்கள் கொடுக்கப்படுவதில்லை. பெண் காவலர்களுக்கான நடமாடும் கழிப்பறை என்று பொய்யான காரணங்கள் கூறப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பார்வையிடும் சிசிடிவி கருவிகள் பழுதாவதாக வேட்பாளர்கள் புகார் அளிக்கின்றனர். இப்படி பலவிதமான ஐயங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. மக்களோ வெகுசகஜமாக மத்திய மாநில ஆளும் கட்சிகள் என்ன மோசடி வேண்டுமானால் செய்வார்கள் எனப் பகிரங்கமாகப் பேசிக்கொள்கிறார்கள். கொரோனாவை காரணம் காட்டி வாக்குகளை எண்ணாமலேயே விட்டுவிடுவார்கள் என்று ஓட்டுநர் ஒருவர் என்னிடம் தன் கவலையைக் கூறினார்.

தேர்தல் ஆணையம் 100% விவிபாட் வாக்குச்சீட்டுகளை எண்ணி மின்னணு இயந்திரத்தின் கூட்டுத்தொகையுடன் சரிபார்க்க வேண்டும்; வாக்குப்பதிவு முடிந்த ஓரிரு நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும். இதைக் குறித்தெல்லாம் பொதுமக்கள் கருத்தை அறிந்து செயல்பட தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். அது தன்னாட்சி பெற்ற அமைப்பே தவிர, யாரும் தட்டிக்கேட்க முடியாத எதேச்சதிகார அமைப்பல்ல, மக்களுக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டது.

கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

.

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

திங்கள் 19 ஏப் 2021