மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 ஏப் 2021

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டும்- ராமதாஸ்

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டும்- ராமதாஸ்

தமிழ்நாட்டை வட தமிழ் நாடு, தென் தமிழ்நாடு என பிரிக்க வேண்டும் என்று நீண்டநெடுங்காலமாக வலியுறுத்தி வருகிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். மேற்கு வங்காளத்தில் எட்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வரும் இந்த நிலையில், தமிழகத்துக்கு மட்டுமல்ல...இந்தியாவில் பிரிக்கப்பட வேண்டிய பல மாநிலங்கள் குறித்து விரிவான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் ராமதாஸ்.

அதில் சிறிய மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டியதன் தேவையையும், அவசியத்தையும் தக்க காரணிகளோடு சுட்டிக் காட்டியுள்ளார் பாமக நிறுவனர். அவரது அறிக்கையில்...

404 தொகுதிகளில் ஒரே நாளில் தேர்தல்

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு 17.04.2021 சனிக்கிழமை நடைபெற்று முடிந்திருக்கிறது. எட்டாம் கட்டத் தேர்தல் வரும் 29&ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கு இன்னும் 12 நாட்கள் உள்ளன. சுனில் அரோரா தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில் தொடங்கிய மேற்குவங்கத் தேர்தல் அவர் ஓய்வு பெற்று சுஷில் சந்திரா தலைமைத் தேர்தல் ஆணையராகிய நிலையில், அவர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் எப்போது சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது என்பதே மறந்து போய்விட்டது. மக்கள் தீர்ப்பை அளித்த பிறகு அதை அறிந்து கொள்வதற்கான காத்திருப்பு மிகவும் நீண்ட நெடியதாக உள்ளது. ஆனாலும், பலவகைப் பட்ட மாநிலங்களைக் கொண்டுள்ள இந்தியாவில், ஜனநாயகத்தின் தன்மைகளைக் காப்பாற்றுவதற்காக தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி பார்த்தால் இந்தக் காத்திருப்பு தவிர்க்க முடியாதது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 234. அத்தனைத் தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. கேரளத்தில் 140 தொகுதிகள், புதுச்சேரியில் 30 தொகுதிகள் இந்த மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இன்னும் கேட்டால் மொத்தம் 404 தொகுதிகள் கொண்ட இந்த 3 மாநிலங்களிலும் ஒரே நாளில் அமைதியாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இதை சாதனையாக கூற முடியாது. ஏனெனில் இவை அமைதியான மாநிலங்கள்.

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் மட்டும் ஏன் பல கட்டத் தேர்தல்?

ஆனால், 126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் 3 கட்டங்களாகவும், தமிழகத்தை விட சற்று அதிகமாக 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் வாக்குப்பதிவுகள் நடத்தப்படுகின்றன. இதற்கு காரணம் அங்கு நிலவும் தீவிரவாதமும், அமைதியின்மையும் தான். தீவிரவாதத்திற்கும், அமைதியின்மைக்கும் காரணம் அங்கு நிலவும் வளர்ச்சியின்மையே. பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பை சிறப்பாக நிர்வகிக்க முடியாததே இதற்கு காரணம் என்றால் அது மிகையல்ல.

மேற்கு வங்கத்தின் வளர்ச்சியின்மைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று அதன் மிகப்பெரிய நிலப்பரப்பு ஆகும். மேற்கு வங்கத்தின் மொத்த மக்கள்தொகை சுமார் 10 கோடி. தமிழ்நாட்டில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதன்படி கடந்த இரு ஆண்டுகளில் 6 புதிய மாவட்டங்கள் உருவாகியுள்ளன. தமிழகத்தில் இப்போது 38 மாவட்டங்கள் உள்ளன. அடுத்த சில மாதங்களில் இது 40-ஆக உயரும். ஆனால், மேற்குவங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மொத்தம் 20 மாவட்டங்கள் மட்டும் தான் இருந்தன. இப்போது தான் 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் உள்ள 23 மாவட்டங்களில் 11 மாவட்டங்களின் மக்கள்தொகை 50 லட்சத்திற்கும் அதிகம். வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் மக்கள்தொகை ஒரு கோடியே 10 லட்சம். தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் மக்கள்தொகை ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தை மூன்றாக பிரித்து மேற்குவங்கம், கூர்க்காலாந்து, காம்தாப்பூர் ஆகிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மேற்கு வங்க மாநிலத்தில் வளர்ச்சி சாத்தியமாகும்.

உத்தரப்பிரதேசம்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அம்மாநிலத்தின் மக்கள்தொகை 19.98 கோடி ஆகும். இப்போது குறைந்தது 21 கோடிக்கும் கூடுதலாக இருக்கும். இவ்வளவு மக்கள்தொகையுடன் கூடிய உத்தரப்பிரதேசத்தை தனி நாடாக அறிவித்தால், சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இருக்கும். பாகிஸ்தான், ரஷ்யா, ஜப்பான், பிரேசில், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உத்தரப்பிரதேசத்தை விட சிறிய நாடுகளாக இருக்கும். சிங்கப்பூர், டென்மார்க் உள்ளிட்ட உலக மக்கள்தொகையில் கடைசியில் உள்ள 125 நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையைக் கூட்டினாலும் அது உத்தரப்பிரதேசத்தை விட குறைவாகத் தான் இருக்கும்.

125 நாடுகளாக இருக்க வேண்டிய ஒரு நிலப்பகுதியை ஒரே மாநிலமாக வைத்திருப்பது எவ்வளவு பெரிய அநீதி. 125 அதிபர்கள் அல்லது பிரதமர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நிலப்பரப்பை ஒரு முதலமைச்சர் நிர்வகித்தால் அந்த மாநிலத்தில் வளர்ச்சி எவ்வாறு சாத்தியமாகும். உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஏற்கனவே உத்தர்காண்ட் என்ற மாநிலம் 20 ஆண்டுகளுக்கு முன் பிரிக்கப்பட்டு விட்டது.

உத்தரப்பிரதேசத்தை ஐந்தாக பிரித்து உத்தரப்பிரதேசம், ஆவாத் பிரதேசம், பிராஜ் பிரதேசம், புந்தல் காண்ட், பூர்வாஞ்சல் ஆகிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மராட்டியம்

மராட்டிய மாநிலத்திலுள்ள விதர்பா பகுதியில் தான் உழவர்கள் தற்கொலை அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருகின்றன. விதர்பாவை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்தே சுமார் 60 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. மராட்டியத்தைப் பிரித்து கந்தேஷ், மராத்வாடா, கொங்கன் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும்; இன்றைய மராட்டியம் 5 மாநிலங்களாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

குஜராத்

குஜராத் மாநிலத்தையும் ஐந்தாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. பிலிஸ்தான், கட்ச், சவுராஷ்ட்ரா, சவுராஷ்ட்ரா & கட்ச் ஆகியவை தான் குஜராத் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட வேண்டிய புதிய மாநிலங்களாகும்.

அசாம் மாநிலத்திலிருந்து போடோலாந்து, கர்பி ஆங்லாங், திமராஜி, போரயில்பூம் ஆகிய மாநிலங்களும், கர்நாடகத்திலிருந்து குடகு, துளு நாடு ஆகிய மாநிலங்களும், பிகாரிலிருந்து மிதிலை, போஜ்பூர் ஆகிய மாநிலங்களும், மத்தியப் பிரதேசத்திலிருந்து பகேல்கந்த், கோந்த்வானா மற்றும் மகாகோசலை , மால்வா, ரேவாகந்த் ஆகிய மாநிலங்களும், ஒதிஷாவிலிருந்து கோசலை ஆகிய மாநிலங்கள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

வடகிழக்கு மாநிலங்கள்

இந்தியாவின் மிகச்சிறிய மாநிலங்கள் எனப்படுபவை வடகிழக்கு மாநிலங்கள். அவற்றில் முறையே மேகாலயா, திரிபுரா, மிசோராம் ஆகிய மாநிலங்களின் மக்கள்தொகை முறையே 32 லட்சம், 36 லட்சம், 10 லட்சம் மட்டும் தான். ஆனால், அந்த மாநிலங்களைக் கூட பிரித்து முறையே கராலாந்து, திப்ராலாந்து, சக்மாலாந்து ஆகிய புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளன.

புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவது நல்லதா? என்றால் நிச்சயம் நல்லது தான். கடந்த 2000&ஆவது ஆண்டில் பிகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைப் பிரித்து ஜார்க்கண்ட், உத்தர்காண்ட், சத்தீஸ்கர் ஆகிய 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. புதிதாக பிரிக்கப்பட்ட 3 மாநிலங்களும் அவற்றின் தாய் மாநிலங்களை விட அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. 2014ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களும் கூட போட்டிப்போட்டுக் கொண்டு வளர்ச்சியடைந்து வருகின்றன. ஆகவே மாநிலங்கள் பிரிக்கப்படுவது மிகவும் நல்லது. அது வளர்ச்சிக்கு நிச்சயமாக வழி வகுக்கும்.

மற்ற மாநிலங்கள் மட்டும் அல்ல.... தமிழ்நாட்டில் கூட சென்னை, கோவை ஆகியவற்றுக்கு இணையாக மதுரையில் தொழிற்சாலைகள் இல்லை என்பதால் தென் மாவட்டங்களை தனியாக பிரிக்க வேண்டும் என்று அங்குள்ளவர்களும், கொங்கு நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கொங்கு மண்டலத்தில் உள்ளவர்களும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது நினைவு கூறத்தக்கது. சிறியவையே அழகானவை”என்று ஒரு கட்டுரை போலவே அறிக்கையை வெள்யிட்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

ஏற்கனவே வட தமிழ்நாடு கோரிக்கையை நீண்ட நெடுங்காலமாக எழுப்பி வருபவர் ராமதாஸ் என்பது குறிப்பிடத் தக்கது.

-வேந்தன்

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

ஞாயிறு 18 ஏப் 2021