மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 ஏப் 2021

சினிமாவைக் கடந்து மக்கள் மனங்களை ஆக்கிரமித்த விவேக்

சினிமாவைக் கடந்து மக்கள் மனங்களை ஆக்கிரமித்த விவேக்

தமிழ் சினிமாவில் 1980களுக்குப் பிந்தைய காலகட்டத்தில் நகைச்சுவை நடிகராகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகர் விவேக். தனது நகைச்சுவையின் மூலமாக சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முற்போக்கு, மூட நம்பிக்கை, சமகால அரசியல் நையாண்டி எனக் கருத்துகளைச் சொல்ல முயற்சி செய்து வெற்றி கண்டவர்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்பது மறைந்த முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு நடிப்பு பாடம் சொல்லிக்கொடுத்த காளி என்.ரத்தினம் நடிக்க தொடங்கிய 1936இல் இருந்து தொடங்கும்.

கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமா வரலாற்றில் இடம்பெற்ற நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் விவேகானந்தன் @விவேக் என்கிற பெயர் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்று. 1970களின் பிற்பகுதியில் தொடங்கி மெல்ல மெல்ல உச்சம்பெற்ற கவுண்டமணி - செந்தில் ஜோடி, 90களின் முற்பகுதியில் மங்கத் தொடங்கியபோது புதிய வரவுகளான விவேக்கும் வடிவேலுவும்தான் அந்த இடத்துக்குத் துண்டு போட்டு இடம்பிடித்தனர். வடிவேலுவுக்குச் சில ஆண்டுகள் முன்பாகவே சினிமாவில் அறிமுகமானவர் விவேக்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிப்பை முடித்து சென்னையில் அரசுப் பணியில் இருந்த விவேக்குக்கு நடிப்பின் மீதும் நகைச்சுவையின் மீதும் பெரும் ஆர்வம் இருந்துவந்தது. மெட்ராஸ் ஹுயூமர் கிளப்பில் இணைந்து செயல்பட்ட விவேக்குக்கு ஒருகட்டத்தில் இயக்குநர் கே. பாலசந்தரின் அறிமுகம் கிடைக்க, அவரது வாழ்வில் வேறு ஒரு கதவு திறந்தது.

1987இல் பாலசந்தர் இயக்கி வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் சுஹாசினி நடித்த நந்தினி என்ற பாத்திரத்தின் தம்பியாக அறிமுகமான விவேக், முதல் படத்திலேயே கவனத்தைக் கவர்ந்தார். அந்தப் படத்தில் விவேக் தவிர, மேலும் பலர் அறிமுகமானாலும் கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக, கதாநாயகனாகப் பிரகாசித்தது விவேக் மட்டும்தான்.

இதற்கு அடுத்த படமான புதுப்புது அர்த்தங்கள் படத்திலும் மீண்டும் வாய்ப்பளித்தார் கே.பாலசந்தர். அந்தப் படத்தில் விவேக் பேசிய 'இன்னிக்குச் செத்தா நாளைக்குப் பால்' என்ற வசனம் தலைமுறை கடந்து நகரம் முதல் குக்கிராமம் வரை இன்றும் பேசக் கூடியதாக இருக்கிறது.

அதற்குப் பிறகு, ஒரு வீடு இரு வாசல், கேளடி கண்மணி என அவரது திரையுலகப் பயணம் வேகம் எடுத்தது. ஆனால், அவருடைய சிறந்த ஆண்டுகள் என்றால், 1990களின் பிற்பகுதி மற்றும் 21ஆம் நூற்றாண்டின் முதல் பத்து வருடங்களும்தான். வீரா, உழைப்பாளி போன்ற ரஜினிகாந்த் படங்களில் அவர் நடித்துவிட்டாலும், அதில் கிடைத்த அடையாளத்தைவிட காதல் மன்னன், வாலி, கண்ணெதிரே தோன்றினால், பூ மகள் ஊர்வலம் போன்ற படங்களில்தான் விவேக் என்கிற நடிகனுக்கான தனித்துவம் மிக்க அடையாளத்தை உருவாக்க முடிந்தது அவரால்.

விவேக் உச்சக்கட்ட சாதனைகளை நிகழ்த்திய படங்களாக விஜய் நடித்த குஷி, மாதவன் நடிப்பில் மின்னலே, டும்...டும்...டும்..., ரன், விக்ரம் நடிப்பில் தூள், சாமி ஆகிய படங்கள் அவரை வேறு ஒரு உயரத்தில் கொண்டு நிலைநிறுத்தின.

இதே காலகட்டத்தில், விவேக் - வடிவேலு இருவரும் கவுண்டமணி - செந்தில் போன்று நீண்டகாலம் திரையில் பிரகாசிக்க முடியாமல் போனது படித்தவரான விவேக் - படிக்காதவரான வடிவேல் இருவரது காமெடிகளும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கத் தொடங்கியது. அது தமிழ் சினிமாவுக்கான கொடை என்றுகூட கூறலாம். கவுண்டமணி - செந்தில் ஜோடி தனி ஆவர்த்தனம் செய்ய முடியவில்லை. ஆனால், விவேக் - வடிவேலு ஜோடியால் அது சாத்தியமானது.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என கதாநாயகர்களை அடிப்படையாக வைத்தே இரு துருவ ரசிகர்கள் உருவாகியிருந்த நிலையில், முதன்முறையாக வடிவேலுவும் விவேக்கும் நகைச்சுவை பாத்திரங்களின் மூலம் இரு துருவ ரசிக மனநிலையை உருவாக்கினர்.

இதன் மூலம் இந்திய சினிமாவில் வேறு எந்த மொழித் திரைப்படங்களிலும் இல்லாதவிதமாக, நகைச்சுவை என்பது தமிழ் சினிமாவின் ஓர் அங்கமாகிப்போனது. இவர்கள் ஏற்று நடித்த பாத்திரங்கள், அவர்கள் பேசிய வசனங்கள் ஆகியவை தமிழ் மக்களின் வாழ்வில் நகரம் - கிராமம், ஏழை - பணக்காரன் என்ற வித்தியாசமின்றி பரவ ஆரம்பித்தது.

பெரும்பாலும் கதாநாயக நடிகர்களின் நண்பராகவே வந்து போய்க்கொண்டிருந்த விவேக் ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொள்ள ஆரம்பித்தார். அவரது வசனங்களில் அரசியல்வாதிகள், அரசு எந்திரம் செயல்படாதது, மக்களின் பொறுப்பின்மை பற்றியே அதிகம் இடம்பெற்றன. மூட நம்பிக்கைகளைக் கடுமையாக விமர்சிக்க தொடங்கியதால் அவருக்கு சின்னக் கலைவாணர் என்ற பட்டத்தை பொது சமூகம் அங்கீகரித்தது.

இதன் காரணமாக மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா பாணியில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவர் தொடர்ந்து தனது படங்களில் பேசிவந்தார். விவேக் நடித்திருந்தால் படம் வியாபாரமாகி விடும், திரையரங்குகளில் கூட்டம் கூடும் என்கிற உச்சத்தைத் தொட்டார் விவேக். இதன் காரணமாக எடுத்து முடிக்கப்பட்ட பிறகு, அவை விற்பனையாகாத நிலையில், தனியாக விவேக்கின் காமெடியை எடுத்து சேர்த்து விற்பனை செய்யப்பட்டு வெற்றிபெற்ற படங்களும் உண்டு. விவேக்கின் காமெடி என்பது யாரையும் புண்படுத்தாத நகைச்சுவை. அதன் மூலம் அவர் பகுத்தறிவுக் கருத்துகளையும் சொன்னார். சில படங்களில் இரட்டை அர்த்த வசனங்களில் பேசி விமர்சனத்துக்கு உள்ளானது உண்டு.

தமிழ் சினிமாவின் தொடக்கக் காலங்களிலும், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கருணாநிதி போன்றவர்கள் காமெடி நடிகர்களாக வெளிப்படாத காலகட்டங்களில் வெளிவந்த திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளை இப்போது பார்த்தால் சிரிப்பு வராது. ஆனால், அதன்பின் தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரம் ஏற்று நடித்தவர்கள் எல்லாம் உச்சம் தொட்டார்கள். அதேபோன்று கவுண்டமணி, வடிவேலு, விவேக் காலகட்டத்தின் நகைச்சுவை தீராத மகிழ்ச்சியைத் தன்னகத்தே கொண்டிருந்தது. வேறு மொழிகளில் இல்லாதவகையில் தமிழில் மட்டுமே நகைச்சுவைக் காட்சிகளுக்காக இயங்கிவரும் இரண்டு தொலைக்காட்சிகள் இதற்குச் சான்று.

நான்தான் பாலா, வெள்ளைப் பூக்கள் போன்ற சில படங்களில் தனியாக கதாநாயகனாக நடித்திருக்கிறார் விவேக் என்றாலும் பிற நடிகர்களுடன் சேர்ந்து முன்னணி பாத்திரமாக அவர் நடித்த பொங்கலோ பொங்கல், விரலுக்கேத்த வீக்கம், நம்ம வீட்டுக் கல்யாணம், மிடில் கிளாஸ் மாதவன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகிய படங்கள் அவரை ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக அடையாளம் காட்டின. உண்மையில் ஆரம்பக்காலத்தைவிட, அவரது திரைவாழ்வின் பிற்பகுதியில்தான் அவரது சிறந்த திரைப்படங்கள் வெளிவந்தன. தனுஷ் நடித்த படிக்காதவன், உத்தமபுத்திரன் போன்ற படங்களில் நகைச்சுவையின் உச்சத்தைத் தொட்டிருந்தார் விவேக். நடிகர் என்பதை கடந்து சமூக ஆர்வலர் என்ற முகமும் விவேக்குக்கு உண்டு.

சினிமா மூலம் கிடைத்த பிரபல்யத்தை மற்ற நடிகர்கள் அரசியலுக்குப் பயன்படுத்தி வரும் குழலில் அதை சமூகத்தில் ஆக்கபூர்வமான செயல்களுக்குப் பயன்படுத்திய முதன்மையான நடிகர் விவேக். மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமுடன் ஏற்பட்ட நெருக்கம் அவரை புதிய மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நடுவதற்கு ஆர்வம்கொள்ளச் செய்தது.

எண்ணற்ற தனி மனிதர்கள், தன்னார்வ அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகளோடு இணைந்து மரம் நடும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தமிழ்நாட்டில் இவர் இப்படி வளர்த்த மரங்களின் எண்ணிக்கை இன்றுவரை 30 லட்சம் இருக்கும். கிரீன் கலாம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழகமெங்கும் மரம் வளர்ப்பை முன்னெடுத்து வந்தார். கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற தொடர்ந்து இயங்கி வந்தார்.

அதேபோன்று சுற்றுச்சூழல், புவி வெப்பமயமாதல் போன்ற விஷயங்கள் பற்றி அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

அதேபோன்று உலக வன நாள், சுற்றுச்சூழல் தினம் என எந்தத் தினங்கள் வந்தாலும் அன்று மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும்விதமாக ஏதாவது ஒன்றைச் செய்வார். அதேபோன்று சிறுதானியங்கள் சாப்பிடுவதும் பற்றியும் வலியுறுத்தி வந்தார்.

நடிகர் விவேக் 2011இல் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதன்முதலில் தொடங்கியபோது அளித்த பேட்டியில், "நாட்டில் தண்ணீர் வேண்டுமென்றால் மழை வேண்டும். மழை வேண்டுமென்றால் மரங்கள் இருக்க வேண்டும். நாட்டில், விவசாயம் செய்வதற்கான மண் வளம், மனிதர்களுக்குத் தேவையான தூய்மையான ஆக்சிஜன் ஆகியவை குறைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் என்னிடம் கூறினார். 10 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஏற்று, திருச்சியில் பசுமை கலாம் (கிரீன் கலாம்) திட்டம் தொடங்கப்பட்டது.

சென்னையில் 10,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளேன். கோவையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, சேலத்தில் 25,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்படும். தொடர்ந்து வேலூர், வேதாரண்யம், தஞ்சாவூர், அடுத்து நான் பிறந்த திருநெல்வேலி என ஒவ்வோர் ஊராக இந்தத் திட்டம் நிறைவேற உள்ளது.

இறுதியாக 10 லட்சம் மரக்கன்றுகளின் இறுதி மரக் கன்றை கடலூரில் உள்ள கிராமம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நட்டு வைப்பார். வீட்டுக்கு இரண்டு மரம்... ஒவ்வொருவரும் வீட்டில் இரண்டு மரக்கன்றுகளை நடவேண்டும். இந்த விஷயம் மக்கள் மனதில் பதிய வேண்டும். இவ்வாறு மரக்கன்றுகள் நட்டால் காற்றில் நச்சுத் தன்மை குறையும். எனவே, தமிழகத்திலிருந்து மரங்களின் பசுமைப் புரட்சி தொடங்க வேண்டும்” என்று பேசினார்.

தமிழ் சினிமாவில் நடிப்பு, புகழ், வருமானம் என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கிவந்த நடிகர் விவேக். அவரது ஒரேமகன் மூளைக்காய்ச்சல் காரணமாக மரணத்தைத் தழுவியபோது 'என்னிடம் கோடிகள் இருந்தபோதும் என் மகனைக் காப்பாற்ற முடியவில்லையே' எனக் கதறி அழுதவர் நடிகர் விவேக்.

அந்த இழப்பு அவரை முற்றிலும் மாற்றியது திரையில் பேசிய கருத்துகள் சிலவற்றை நடைமுறைப்படுத்த தீவிரமாகக் களப்பணியாற்ற தொடங்கினார். நடிகன் என்பதை கடந்து அவரை தமிழகத்தின் மரம் மனிதனாக மக்களைப் பார்க்க வைத்தது.

சினிமா என்கிற காட்சி ஊடகம் மூலம் நடிகர்களுக்குக் கிடைக்கக்கூடிய பிரபல்யத்தை சமூக நலன்களுக்காக எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதைத் தனது செயல்கள் மூலம் உணர்த்தியிருக்கிறார் விவேக். அதனை ஏனைய நடிகர்களும் கடைப்பிடித்தால் அதுவே அவருக்குச் செலுத்தும் கெளரவமான அஞ்சலியாகும்.

-இராமானுஜம்

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

ஞாயிறு 18 ஏப் 2021