மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

விடைபெற்றார் விவேக்: 72 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

விடைபெற்றார் விவேக்: 72 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

நடிகர் விவேக்கின் உடல் இரண்டு மணி நேர இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு தகனம் செய்யப்பட்டது.

மாரடைப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக், இன்று காலமானார். அவருக்கு வயது 59.

அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள், இயக்குநர்கள், நடிகைகள், நடிகர்கள் எனப் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர். அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார்.

கவிஞர் வைரமுத்துவும் நேரில் அஞ்சலி செலுத்தினார் முன்னதாக அவர், “அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!

எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்

அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

திரையில் இனி பகுத்தறிவுக்குப்

பஞ்சம் வந்துவிடுமே!

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!

நீ நட்ட மரங்களும் உனக்காக

துக்கம் அனுசரிக்கின்றன.

கலைச் சரித்திரம் சொல்லும் :

நீ ‘காமெடி’க் கதாநாயகன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் சரத்குமார் என ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு” என்று இரங்கல் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. விவேக்கின் புகழுக்குப் பெருமை சேர்க்க, அவரது கலை, சமூக சேவையை கௌரவிக்க காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்தது.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், விவேக்கிற்குக் காவல் துறை மரியாதை வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் வீட்டிலிருந்து நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணி வாக்கில் தொடங்கியது. விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், நண்பர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பலர் மரக்கன்றுகளை ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

மேட்டுக்குப்பம் மின் மயானத்துக்கு எடுத்து வரப்பட்ட அவரது உடலுக்கு குடும்ப வழக்கப்படி குடும்பத்தினரால் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. விவேக்கின் மகள் தேஜஸ்வினி இறுதிச் சடங்கைச் செய்தார். அதுபோன்று, விவேக்கின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செலுத்தினர். 24 காவலர்கள் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்த விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 17 ஏப் 2021