மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

மிஸ்டர் க்ளீன் விவேக் : பர்சனல் & சினிமா லைஃப் !

மிஸ்டர் க்ளீன் விவேக் : பர்சனல் & சினிமா லைஃப் !

தமிழ் திரைப்படங்களில், இரட்டை அர்த்தங்கள் கொண்ட காமெடி காட்சிகளும், வசை மொழிகள் அதிகம் கொண்ட நகைச்சுவை வசனங்களும் அதிகரித்து விட்ட காலக்கட்டத்தில் சிரிப்புக்குள் சிந்தனைகளை புகுத்தியவர் விவேக். ஆம் நகைச்சுவையுடன் சேர்த்து சமூக விழிப்புணர்வையும் சேர்த்துக் கொடுப்பது தான் விவேக்கின் சக்சஸ் ஃபார்முலா. காமெடி நடிகர் என்று ஒரு வட்டத்துக்குள் அவரை அடக்கிவிட முடியாது. விவேக் சிறந்த குணசித்திர நடிகரும் கூட!

விவேக்கின் சொந்த ஊர் கோவில்பட்டி. மதுரையில் கல்லூரி படிப்பை முடித்த இவர், எம்.காம் வரை முடித்திருக்கிறார். மதுரையில் சிறிது காலம் வேலை பார்த்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார். விவேக்கை ஒரு நல்ல கலைஞனாகத் தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர் நல்ல படிப்பாளி. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றியவர். மேடை நாடகங்களின் மீது இருந்த ஆர்வம் இவரை சினிமாவிற்கு கொண்டு வந்து சேர்த்து விட்டது. 1987ல் வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் வாயிலாக சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார். இவரின் திறமை மீது நம்பிக்கை வைத்து முதன்முதலில் வாய்ப்புக் கொடுத்தவர் பாலச்சந்தர். சின்ன கதாப்பாத்திரம் தான், ஆனால் அபாரமாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அப்பாவித்தனமான பேச்சு, எப்போதுமே பதற்றம் நிறைந்த முகம் என்று அந்த கதாப்பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருப்பார். அதன் பின்னர், சின்ன சின்ன கேரக்டர்கள் அவரை தேடி வந்தன. சின்னக் கேரக்டர் என்றாலும் தனித்துவமாக தெரிவது தான் விவேக்கின் பிளஸ். எனவே, ஆரம்பத்தில் சில பல சறுக்கல்கள் ஏற்பட்டாலும், தன் நடிப்புத் திறமையால், தமிழ் சினிமாவில், தனக்கென ஒரு இடத்தை நிலைநிறுத்தினார்.

ஆரம்ப நாட்களில் காமெடி வசனங்களை மட்டுமே பேசிக் கொண்டிருந்த விவேக், சற்று வித்தியாசமாகச் சிந்தித்து காமெடிக்குள் சமூக மெசேஜ்களையும் புகுத்தினார். தனது நகைச்சுவை வாயிலாக மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதே அவரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. அவரின் இந்த சிந்தனை + சிரிப்பு ஃபார்முலாவை முதன்முதலில் ‘உன்னருகே நான் இருந்தால்’ என்னும் படத்தில் தான் செயல்படுத்தினார். இதில் பார்த்திபன், ரம்பா, விவேக் காம்போ சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் விவேக்கிற்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு ஸ்டேட் அவார்டை பெற்றுத்தந்தது.

அடுத்தடுத்து வந்த படங்களில், மூடநம்பிக்கை, லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், ஊழல் என அனைத்து சமூக பிரச்சனைகளை பற்றியும் தன் நகைச்சுவை காட்சிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், மூட நம்பிக்கைகளுக்குள் மக்களை தள்ளும் கூட்டம், சமூகத்துக்குள் பிரிவினை ஏற்படுத்தும் கூட்டம் என அனைவரையும் தன் காமெடி வசனங்களில் போறபோக்கில் கலாய்த்து தள்ளியிருக்கிறார். கலகலப்பான காலேஜ் மாணவன், காதல் அட்வைஸ்கள் தெறிக்க விடும் நண்பன், மனைவியிடம் அடி வாங்கும் கணவன் என எல்லா கதாபாத்திரங்களுக்கும் கனகச்சிதமாக பொருந்தியிருப்பார்.

கோலிவுட்டில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். ‘ரன்’ படத்தில் அம்மா அப்பாவுடன் சண்டைபோட்டு, சென்னைக்கு வந்து அவர் படும்பாடு சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும். இந்த படத்திற்காக விவேக்கிற்கு ஃபிலிம் பேர் சிறந்த காமெடியன் விருது, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட், ஐடிஎஃப்ஏ பெஸ்ட் காமெடியன் அவார்ட் என விருதுகளை வாங்கி குவித்தார். இதே போன்று சாமி படத்தில் பாரதியார் வழியில் சமத்துவம், பெண் முன்னேற்றம் பற்றி பேசி அசத்தியிருப்பார். இந்த படத்திற்காக இரண்டு முக்கிய விருதுகளை பெற்றார். மேலும் இவரின் நடிப்பாற்றலை கௌரவிக்கும் வகையில், 2009 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கியது.

சினிமாவில் காமெடி கலைஞனாகவும் குணச்சித்திர நடிகராகவும் கொடிகட்டி பறந்த விவேக் ஒரு கட்டத்தில் சினிமாவை விட சமூக சேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். திரையில் மட்டும் சமூக விழிப்புணர்வு வசனங்களை பேசாமல், நிஜ வாழ்க்கையில் பல சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் விவேக். விவேக் நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம் தான் காரணம் என சுட்டிக்காட்டி, ’அதற்கு பிராயசித்தமாக நான் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ என்று சவால்விட்டு, அதனை செயல்படுத்தியும் காட்டியிருக்கிறார். விவேக் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் செல்லப்பிள்ளை.

மற்றவர்களை சிரிக்க வைத்து, சோகங்களை மறைய வைக்கும், காமெடி கலைஞர்களுக்கு கண்டிப்பாக நிஜ வாழ்க்கையில் ஆற்ற முடியாத வலிகள் நிறைந்திருக்கும். விவேக்கின் வாழ்க்கையிலும் ஆறாத காயம் ஒன்றுஉள்ளது. 2015 ஆம் ஆண்டு விவேக்கின் 14 வயது மகன் பிரசன்னகுமார் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். மகனின் இறப்பு விவேக்கை நிலைகுலைய வைத்தது. அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டு வந்தார். மகனின் இழப்புக்கு சற்று ஆறுதலாக இருக்க, விவேக்கும், அவரது மனைவியும் இணைந்து செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். மேலும் மகன் நினைவாக சாய் பிரசன்னா பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி மரங்களை நடும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டார். விவேக்கிற்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வாரத்திற்கு ஒருமுறை நண்பர்களுடன் சின்ன சின்ன சந்திப்புகள் நடக்கும்போது மட்டும் கொஞ்சமாக மது அருந்துவாராம். மற்றபடி விவேக், மிஸ்டர் க்ளீன் என்கிறது அவரின் நெருங்கிய நட்பு வட்டாரம்.

சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக, சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்களை மேற்கொண்டு வந்த விவேக், நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அதனை தன் சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டார். இப்படி இறப்பதற்கு ஒருநாள் முன்னர் கூட சமூக நலனுக்காக செயல்பட்ட விவேக்கின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது!

-ஆதினி

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

சனி 17 ஏப் 2021