மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

கும்பமேளாவை முடித்துக் கொள்ள வேண்டும்: பிரதமர்!

கும்பமேளாவை முடித்துக் கொள்ள வேண்டும்: பிரதமர்!

கொரோனா காரணமாக கும்பமேளா திருவிழாவில் அதிக அளவில் பக்தர்கள் கூடாமல் பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் கூட்டம் கூட்டமாக கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டு வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான கங்கை நீராடல் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியின்றி கலந்து கொள்வது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கிறது. கும்பமேளாவில் கடந்த வாரத்தில் 43 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியதாக, உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் நடந்து வரும் மெகா கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டவர்களில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிவேகத்தில் பரவி வரும் நிலையில், கும்பமேளா நிகழ்விற்கு ஏன் அனுமதி அளிக்க வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து இன்று(ஏப்ரல் 17) பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில்,” கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜூனா அகாதாவைச் சேர்ந்த சுவாமி அவ்தேஷானந்த் கிரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். மேலும் உள்ளூர் நிர்வாகத்துடன் அவர்கள் ஒத்துழைத்தமைக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தேன்.

கும்பமேளாவை இப்போது கொரோனாவுக்கு எதிரான போரை வலுப்படுத்தும் குறியீடாக வைத்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் அதிகளவிலான பக்தர்களுக்கு அனுமதி அளித்தால், கொரோனா பரவலுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துவிடும். அதனால், அதிகளவில் பக்தர்கள் கூடாமல் பெயரளவுக்கு கும்பமேளாவை நடத்துவதே சரியாக இருக்கும். அதனால், ஹரித்துவாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவை அதிக பக்தர்களின்றி முடித்துக்கொள்ள வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு பதிலளித்த சுவாமி அவ்தேஷானந்த் கிரி, ”பிரதமர் மோடியின் வேண்டுகோளை நாங்கள் மதிக்கிறோம். அதனால், கும்பமேளாவில் புனித நீராடல் நிகழ்வுக்கு மக்கள் அதிகளவில் கூட வேண்டாம் என்றும், கொரோனா நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உயிர்களைக் காப்பாற்றுவது புனிதமானது” என தெரிவித்துள்ளார்.

வழக்கமாக, இந்த நிகழ்வு ஜனவரி மத்தியில் ஆரம்பித்து ஏப்ரல் வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு மெகா கும்ப மேளா திருவிழா ஏற்கனவே தொற்றுநோய் காரணமாக ஏப்ரல் 1 முதல் 30 வரை என ஒரு மாதமாக சுருக்கப்பட்ட நிலையில், அதிக பக்தர்களின்றி கும்பமேளாவை முடித்துக் கொள்ள பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு, கும்பமேளா விழாவில் கலந்து கொண்ட பிறகு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

சனி 17 ஏப் 2021