மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

சாலைகள் பெயர் மாற்றம்: தமிழக அரசு என்ன செய்கிறது?

சாலைகள் பெயர் மாற்றம்: தமிழக அரசு என்ன செய்கிறது?

தமிழகத்தில் முக்கிய சாலைகளின் பெயர்களுக்கு வைக்கப்பட்டிருந்த பெரியார், காமராஜர், அண்ணா பெயர்கள் மாற்றப்பட்டது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் அரசுத் தரப்பு இன்னும் மௌனம் காக்கிறது. இந்நிலையில் திராவிட இயக்கங்களோடு காங்கிரஸ் கட்சியும் இந்த விஷயத்தில் எதிர்ப்பைக் கூர்மையாக்கியிருக்கிறது.

ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் அழகிரி இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று (ஏப்ரல் 16) காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், “ஒரு புத்திசாலி அரசு என்ன செய்ய வேண்டும்? தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்ட நெடுஞ்சாலைகளின் பெயர்களில் எந்த மாற்றமும் கிடையாது என்று உடனே அறிவிக்க வேண்டும். இந்தச் சர்ச்சையை இன்றிரவே முடிக்க வேண்டும்”என்று வலியுறுத்தியிருக்கிறார்.

மாற்றப்பட்ட சாலைகளின் பெயரை மீண்டும் வைக்க வேண்டுமென்பதற்காகவும், இது யார் உத்தரவில் மாற்றப்படுகிறது என்பதை அறிவதற்காகவும் திமுக எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி,என்.ஆர். இளங்கோ, வில்சன் ஆகியோர் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனை சந்தித்தனர்.

அதிகாரிகள் வட்டாரத்தில் இதுகுறித்து பேசியபோது, “ஒரு காபந்து அரசு இருக்கும்போது இதுபோன்ற கொள்கை முடிவுகளை மேற்கொள்ளாது, மேற்கொள்ள முடியாது. ஆனால் இதுவரைக்கும் தமிழ்நாட்டில் இல்லாத முன் மாதிரியாக இப்போது இந்த பெயர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

1979 ஆம் ஆண்டு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு பெரியாருடைய பெயரை அப்போதைய முதல்வர் எம்ஜி.ஆர். சூட்டினார். இந்த சாலை 14 கிலோ மீட்டர் நீளமுடையது. அந்த சாலைக்கு ஏற்கனவே இருந்த பெயர் கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் சாலை என்பதாகும். இப்போது சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால்,, ‘1979 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அந்த சாலைக்கு பெரியார் பெயர் வைத்தபோது அது நெடுஞ்சாலையே இல்லை. அப்போது சாலைகள் துறை பொதுப்பணித்துறையில்தான் இருந்தது. அதன் பிறகே நெடுஞ்சாலைத் துறைஎன்று தனிதுறை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பதிவுகளில் பெரியார் சாலை என்ற பெயர் இல்லை’ என்கிறார்கள்.

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் இருக்கும் அதிகாரிகள் சிலர் இப்படி சில டெக்னிக்கல் காரணங்களை சொன்னாலும், பெரியார், காமராஜர், அண்ணா ஆகியோரது பெயர்களை தமிழகத்தில் சாலைகளுக்கு வைக்கப்பட்டதில் அதிகாரிகள் மூலமாக அரசியல் நடப்பதாகவே தெரிகிறது. ஒரு சில அதிகாரிகள் மூலம் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கொரோனா பாதுகாப்பு பணிகளுக்காக கோட்டையில் ஏப்ரல் 12 ஆம் தேதி ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் இந்த பெயர் மாற்ற விவகாரத்தில் மௌனம் காப்பது கவலையளிப்பதாக இருக்கிறது. கொரோனா என்பது மக்களின் ஆரோக்கியம் சார்ந்த விஷயமென்றால், பெரியார், காமராஜர், அண்ணா ஆகியோரது பெயர்களை நீக்குவது என்பதும் தமிழ்நாட்டின் கொள்கை மீதான கொரோனா தொற்று போன்றதுதான். முதல்வரின் மௌனத்துக்குப் பின்னால் மத்திய அரசின் அழுத்தம் இருக்கிறதோ என்றும் கோட்டையில் பேச்சு அதிகமாகவே இருக்கிறது” என்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று பெயர் மாற்றப்பட்ட சாலையின் மீது மீண்டும் பெரியார் சாலை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அரசுதான் எதிர்ப்புக்கு பணிந்து இப்படி செய்திருக்கிறதோ என்ற முதல் கட்ட தகவல்கள் பரவிய நிலையில் அது அரசு செய்யவில்லை என்பது தெரியவந்திருக்கிறது.

பெரியார் பெயர் நீக்கப்பட்டு கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் சாலை என்று பெயர் சூட்டப்பட்ட பலகையை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கறுப்பு மை பூசி அழித்தனர். அவர்கள்தான் நேற்று முன் தினம் இரவோடு இரவாக பெரியார் ஈவெரா சாலை என்று ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள்.

காபந்து அரசாக இருந்தாலும் தமிழக அரசு இந்த பெயர் மாற்ற விவகாரத்தில் உரிய விளக்கமும் நடவடிக்கையும் எடுக்க வேண்டியது கடமையாகிறது.

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

சனி 17 ஏப் 2021