மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஏப் 2021

நாடகக் காதல் கும்பல் மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்

நாடகக் காதல் கும்பல் மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காதலிக்க மறுத்த காரணத்திற்காக இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகள் சரஸ்வதி. சரஸ்வதிக்கு அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

சரஸ்வதி நர்சிங் டிப்ளமோ படித்து வந்த நிலையில், அவருக்குத் திருமணமும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் ரங்கசாமி தொல்லை கொடுத்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி அவரது வீட்டு வாசல் முன் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்திருக்கிறார் சரஸ்வதி.

இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதலில் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், விசாரணையில், ரங்கசாமி கொலை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.

‘சம்பவத்தன்று சரஸ்வதியின் வீட்டுக்கு அருகில், அவரை வழிமறித்து தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ரங்கசாமி எச்சரித்திருக்கிறார். ரங்கசாமியுடன், அவரது சகோதரர் கிருஷ்ணசாமி, நண்பர் ரவீந்திரன் ஆகியோரும் சரஸ்வதியை மிரட்டியிருக்கின்றனர். சரஸ்வதி, ரங்கசாமியைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கவே, ஆத்திரமடைந்த ரங்கசாமி, கிருஷ்ணசாமி, ரவீந்தர் ஆகிய மூவரும் சரஸ்வதியின் கழுத்தைத் துணியால் இறுக்கி கொலை செய்து, உடலை அவரது வீட்டு வாசல் முன் வீசி விட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றனர்’ என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

விசாரணைக்குப் பிறகு ரங்கசாமி, ரவீந்தர் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “காதலிக்கவும், திருமணம் செய்யவும் மறுத்ததற்காக ஒரு பெண்ணை படுகொலை செய்வதை விட மோசமான காட்டுமிராண்டித்தனம் இருக்க முடியாது. தமிழ் சமூகம் பெண்மையைக் கடவுளாக வணங்கக் கூடியதாகும். கண்ணகி, திரவுபதி, ஆண்டாள் ஆகியோரை நாம் கடவுளாக போற்றி வணங்கி வருகிறோம். இத்தகைய சமூகத்தில் பிறந்த எவரும் காதலிக்க மறுத்ததற்காக ஒரு பெண்ணை படுகொலை செய்யத் துணியமாட்டார்கள். ஆனால், அண்மைக்காலமாக நாடகக் காதல் செய்யும் கும்பலின் தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகும் இளைஞர்கள் தான் இத்தகையக் கொடூரங்களைச் செய்யத் துணிகின்றனர். இத்தகைய செயல்கள் சமூக நல்லிணக்கத்தைக் குலைத்து விடக் கூடியவை.

இளைஞர்கள் நன்றாகப் படிக்க வேண்டும்; படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்குச் செல்ல வேண்டும்; குடும்பத்தினரைக் காப்பாற்றி கவுரவமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக சமூகத்தின் அடித்தட்டில் உள்ள பட்டியலின மக்கள் முன்னேற வேண்டும். அம்பேத்கர் பெற்றுக் கொடுத்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அச்சமுதாயத் தலைவர்கள் முயல வேண்டும்; அதைக் கருத்தில் கொண்டு தான் விவேகானந்தர்களாக இருங்கள்.... இளைஞர்களை வீணடிப்பவர்களாக இருக்காதீர்கள் என்று பட்டியலின சமுதாயத் தலைவர்களுக்கும் அடிக்கடி அறிவுரை கூறி வருகிறேன்.

இளைஞர்களை நல்வழிப் படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் அம்பேத்கரும் கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்று கூறினார். ஆனால், பட்டியலினத் தலைவர்களில் ஒரு சிலர், தங்களை நம்பி வந்த இளைஞர்களைக் கொள்கை வழிப்படுத்துவதற்குப் பதிலாக நாடகக் காதல் செய்ய ஊக்குவிப்பது தான் இந்த சீரழிவுகளுக்கும், அப்பாவி இளம் பெண்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் காரணம் ஆகும். இளைஞர்களைத் தவறாக வழிநடத்தும் கும்பல்களை சமூகங்கள் புறக்கணிப்பது மட்டுமே இதற்குத் தீர்வாகும்.

தேவியானந்தல் சரஸ்வதியைப் படுகொலை செய்தவர்களும் நாடகக் காதல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான். இவர்கள் அந்தப் பகுதியில் வேறு பல சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சட்டப்படியாக அளிக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும்; அதுமட்டுமின்றி இத்தகைய குற்றங்கள் இனியும் நடக்காமல் தடுக்கும் அரணாக அமைய வேண்டும். அதற்கேற்ப ரங்கசாமி உள்ளிட்ட மூவர் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்வதுடன் அவர்களைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவும் அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வெள்ளி 16 ஏப் 2021