மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஏப் 2021

தனி நீதிமன்றம்: குன்ஹாவிடம் ஆலோசனை கேட்கும் திமுக?

தனி நீதிமன்றம்: குன்ஹாவிடம்  ஆலோசனை கேட்கும் திமுக?

சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு நான்கு வருடம் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து 2014 செப்டம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பளித்தார் பெங்களூரு தனி நீதிபதி மைக்கேல் டி குன்ஹா. தமிழக அரசியலில் இப்போது நடந்து வரும் மாற்றங்கள் வரை தாக்கத்தை உண்டுபண்ணிவரும் இந்தத் தீர்ப்பைக் கொடுத்த நீதிபதி குன்ஹா கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி பணி ஓய்வுபெற்றார்.

அவர் பணி ஓய்வுபெற்றதை ஒட்டி திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் ‘ஜெயலலிதா என்ற பொய்க்கட்டமைப்பை வீழ்த்திய நீதி அரசன் மைக்கேல் டி.குன்ஹா’ என்ற தலைப்பில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி தலையங்கம் தீட்டியிருந்தது. அதில் குன்ஹாவை பற்றி புகழ்ந்து எழுதப்பட்டிருக்கிறது.

“ஜான் மைக்கேல் டி.குன்ஹா! - இந்தப் பெயர் தமிழக அரசியல் வரலாற்றில் இந்திய நீதித்துறை வரலாற்றில் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் நின்று நிலைக்கும் பெயர். ஒரு தீர்ப்பின் மூலமாக எழுந்து நின்றவர் மட்டுமல்ல; காலங்கள் கடந்தும் நின்று நிலைப்பவராக குன்ஹா உயர்ந்து நிற்கிறார்! ஜெயலலிதாவைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் அளவுகோல் அவரது ஆணவம். அந்த ஆணவத்தின் அளவுகோல் பணம். இந்த இரண்டில் மட்டும்தான் அவரது அரசியல் வாழ்க்கையே அமைந்திருந்தது. அந்த ஆணவத்தையும் அதன் அடிப்படையாக அமைந்த பணத்தையும் தனது பேனா முனையால் கீழே தள்ளி குப்பைத் தொட்டியில் போட்டவர்தான் குன்ஹா. நீதி என்பது தேவதையாக உருவகம் செய்யப்படுகிறது. குன்ஹா ஆகவும் அது காட்சியளிக்கிறது”என்று குன்ஹாவைப் பற்றி சிலாகித்திருந்தது திமுகவின் முரசொலி.

இந்த நிலையில் முரசொலியின் தலையங்கத்தை அடிப்படையாக வைத்து திமுகவின் சட்ட வட்டாரத்தில் ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி திமுகவின் சில வழக்கறிஞர்களிடம் பேசியபோது,

“குன்ஹாவின் தீர்ப்பு தமிழ்நாட்டு அரசியலின் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்திருந்தது. அவரைப் போன்ற மிக நேர்மையான நீதிபதிகளை இன்று காண்பது அரிதாக இருக்கிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் அடுத்து அமையும் திமுக ஆட்சியில் அதிமுக அரசின் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்து உறுதியாக திமுக ஆட்சி அமையும். அப்போது இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.

அந்த தனி நீதிமன்றம் அமைப்பது, செயல்படுத்துவது பற்றி ஓய்வுபெற்ற நீதியரசர் குன்ஹாவின் ஆலோசனைகளைப் பெற திமுக முயற்சித்து வருகிறது. இது தொடர்பான குன்ஹாவுடன் பேச திமுகவின் முக்கியப் புள்ளிகள் தயாராகிறார்கள். அவர் ஒப்புக் கொள்ளும்பட்சத்தில் அடுத்து அமையும் திமுக ஆட்சியில் ஊழல் அமைச்சர்களுக்கு எதிரான தனி நீதிமன்றத்தில் குன்ஹாவின் ஆலோசனை ரீதியான பங்கேற்பு இருக்கும்” என்கிறார்கள்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 16 ஏப் 2021