மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஏப் 2021

வாக்கு எண்ணிக்கை மையங்களில் ப்ராக்டிகல் தேர்வு, லாரிகள்-என்ன நடக்கிறது?

வாக்கு எண்ணிக்கை மையங்களில் ப்ராக்டிகல் தேர்வு, லாரிகள்-என்ன நடக்கிறது?

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பில்லை என்று திமுகவின் சார்பில் தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஏற்கனவே கரூர் திமுக வேட்பாளரான செந்தில்பாலாஜி, கரூர் மாவட்ட தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பின் பகுதியில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு இல்லை என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தார்.

அதன் பின் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் வேட்பாளருமான வேல்முருகன், “ கடந்த சில நாட்களாக வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை, மின்சாரம் ‘கட்’ ஆகிறது. ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கம்ப்யூட்டர் நிபுணர்கள் நுழைகிறார்கள்” என்று பரபரப்பாக குற்றம் சாட்டினார். தூத்துக்குடி வாக்கு எண்ணும் மைய கல்லூரியிலும் நள்ளிரவில் கன்டெய்னர் லாரி வந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அங்கிருந்து லாரி வேகவேகமாக புறப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான், இன்று (ஏப்ரல் 16) முற்பகல் சென்னையில் தலைமைச் செயலகத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையர் சாகுவை சந்தித்தனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார்கள். பொன்முடி பேசுகையில், “வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு குறித்து எங்கள் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தேர்தல் ஆணையத்துக்கும் கோரிக்கைகள் வைத்திருக்கிறார். இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பல விதிமீறல்கள் நடந்து வருகின்றன.

குறிப்பாக நான் போட்டியிடும் திருக்கோவிலூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இன்று பிளஸ் டு பிராக்டிகல் தேர்வே நடைபெறுகிறது. 147 பேர் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் இருக்கிறார்கள். இது எனக்கு இன்று காலை முகவர் மூலமாக தெரியவந்தது. உடனடியாக மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் பேசினேன். அதன் பிறகு அங்கிருந்து அவர்களை எல்லாம் வெளியே அனுப்பச் சொல்லியிருக்கிறார். இதற்கெல்லாம் யார் அனுமதி கொடுத்தது? தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைந்துகொண்டே இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை மையம் (கேம்பஸ்) ஒருமுறை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டால் அதில் தேர்தல் ஆணையரைத் தவிர யாரும் நுழையக் கூடாது என்பது சட்டம். ஆனால் இதையெல்லாம் மீறுவது தேர்தல் ஆணையத்தின் மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் இவை பரவலாக நடக்கின்றன”என்றார்.

அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, “இப்படியெல்லாம் நடக்கும் என்று நாங்கள் சந்தேகப்பட்டுதான் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினோம். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மார்ச் 23 ஆம் தேதியன்று கண்டிப்பான சில உத்தரவுகளைப் பிறப்பித்து அவற்றின்படி நடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார். ஆனால் அவற்றின்படி தேர்தல் ஆணையம் நடக்கவில்லை. இன்னும் 15 நாட்கள் இருக்கின்றன. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தேர்தல் ஆணையம் மீது தொடருவதற்கு எங்களைத் தள்ளாதீர்கள் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவித்திருக்கிறோம். சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு வெளிப்படையான நேர்மையான வாக்கு எண்ணிக்கை நடக்க வேண்டும்” என்றார்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வெள்ளி 16 ஏப் 2021