மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

தடுப்பூசி கேட்கும் தமிழகம்!

தடுப்பூசி கேட்கும் தமிழகம்!

தமிழகம் உட்பட இந்தியா முழுதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகமாக இருக்கிற்து. ஏற்கனவே தமிழக அரசு கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளைத் தொடங்கினாலும், இப்போது அதைத் தீவிரமாக்கியுள்ளது.

பிரதமர் மோடியின் அறிவிப்பின்படி ஏப்ரல் 10 முதல் 4 நாட்கள் தடுப்பூசித் திருவிழா என்ற பெயரில் தடுப்பூசி போடும் இயக்கம் நடத்தப்பட்டது. இது இப்போது ஏப்ரல் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் இந்திய அளவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் பரவின. மத்திய அரசு இதை மறுத்தாலும் மகாராஷ்டிர, ராஜஸ்தான் மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையாக இருப்பதை மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டினார்கள். தமிழகத்திலும் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், “45 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் தமிழக அரசு மத்திய அரசிடம், கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் தேவை என்று கோரிக்கை வைத்துள்ளது. 15 லட்சம் கோவிஷீல்டு, 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.

இதேநேரம் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தடுப்பூசி பற்றிய பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று (ஏப்ரல் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“137 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் எவ்வித வேறுபாடின்றி கொரோனா தடுப்பூசி போட வேண்டியது மிகமிக முக்கியமான கடமையாகும். அதை முழுமையாக நிறைவேற்றுவதற்கு பதிலாக தடுப்பூசிகளை பா.ஜ.க. அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன் ? இதுவரை 7 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. ஆனால், ஏப்ரல் 14 நிலவரப்படி இந்தியாவில் 11 கோடியே 10 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 7 சதவிகிதம் ஆகும். இதன்மூலம் இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 6 ஆயிரத்து 310 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஆனால், பிரிட்டனில் 54 ஆயிரத்து 680, அமெரிக்காவில் 50 ஆயிரத்து 410 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக வீசி, மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிற நிலையில், தமக்கு வாக்களித்து பிரதமராக்கிய மக்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை வழங்காமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பிரதமர் மோடியை இந்திய மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல், சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகவே கருத வேண்டியுள்ளது. 'யாருக்கு அவசியமோ அவர்களுக்கு தான் தடுப்பூசியே தவிர, தேவைப்படுகிறவர்களுக்கெல்லாம் தடுப்பூசி போட முடியாது. கடுமையான பாதிப்பு யாருக்கு இருக்கிறதோ, அவர்களுக்கு தான் தடுப்பூசி போட முடியும்' என்று இவர்கள் கூறுவது மிகுந்த வேதனையை தருகிறது”என்று கூறியுள்ள அழகிரி, தடுப்பூசி விநியோகிப்பதிலும் மத்திய பா.ஜ.க. அரசு மிகுந்த பாகுபாட்டினை காட்டி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

“பா.ஜ.க. ஆட்சி இல்லாத மகாராஷ்டிரா மாநிலத்தின் மக்கள் தொகை 12 கோடி. அங்கு ஒருநாள் பாதிப்பு 57 ஆயிரம். இதுவரை 1 கோடியே 4 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 6 கோடி மக்கள் தொகை கொண்ட பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது. ஆனால், குஜராத் மாநிலத்தின் ஒருநாள் பாதிப்பு 4 ஆயிரத்து 21. அதிகமான மக்கள் பாதிக்கப்படுகிற மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரு நீதி, பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்திற்கு ஒரு நீதியா ?

உலக அரங்கில் தமது புகழை உயர்த்துவதற்காக இந்தியாவில் தயாராகும் தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிற பிரதமர் மோடியின் அணுகுமுறையை எவரும் கண்டிக்காமல் இருக்க முடியாது. உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிற நிலையில் இந்தியா இருக்கிறதா ? ஆனால், இந்தியாவில் ஒரு நாளைக்கு 1 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. இதை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா ? இந்தியாவில் இரண்டு நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. தற்போது கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிற இரண்டு நிறுவனங்களின் மொத்த உற்பத்தி திறன் 1 கோடியே 20 லட்சம். அந்த முழுமையான திறனை உற்பத்தி செய்வதற்கு மத்திய பா.ஜ.க. அரசிடம் நிதி கோரியிருக்கிறார்கள். ஆனால், அந்த நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவற்கு மத்திய பா.ஜ.க. அரசு தயக்கம் காட்டி, காலம் கடத்தி வருகிறது. அதனால் அந்த நிறுவனங்களால் எதிர்பார்த்த உற்பத்தியை செய்ய முடியவில்லை.

எனவே, கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்கிற இரண்டு நிறுவனங்களுக்கும் நிதியுதவியை அதிகரித்து உற்பத்தியை உயர்த்த வேண்டும். அதேபோல, ரஷ்யாவில் தயாராகும் ஸ்புட்னிக் தடுப்பூசி பயன்பாட்டிற்கான அனுமதியை விரைவுபடுத்த வேண்டும். மேலும், புதிய நிறுவனங்களில் எவற்றிற்கு தகுதி இருக்கிறதோ, அவற்றிற்கு அனுமதி வழங்குவதில் தீவிரம் காட்ட வேண்டும்”என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் இன்று (ஏப்ரல் 15) வெளியிட்டுள்ள செய்தியில்,

“ கொரோனா தடுப்பு மருந்தை மக்கள் அனைவருக்கும் செலுத்துவதற்கான கால அவகாசம் இருந்தும் அதை மத்திய, மாநில அரசுகள் திறம்பட பயன்படுத்தி கொள்ளாமல் வீணடித்ததே இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்க மிக முக்கிய காரணம். கடந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதே கொரோனா 2-வது அலை உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி பற்றி பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தவில்லை.

இப்போது தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனா பெருந்தொற்றின் தீவிரத்தையும், பாதிப்பையும் உணர்ந்திருக்கும் ஆளும் அரசுகள் கிடைத்த கால அவகாசத்தை தவறவிட்டது மக்களை மிகப்பெரிய பாதிப்புக்கான சூழலை நோக்கி தள்ளியிருக்கிறது”என்று கூறியுள்ளார்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

வியாழன் 15 ஏப் 2021